Friday, 22 February 2019

அருமையான #பதிவு

அருமையான #பதிவு👌🏽

மீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.

'அப்படியா... ஏண்டி?'

'உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.

மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.

'என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா... போயிட்டு வரலாம்...' என கணவர் அழைக்கிற போது, பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்... 'எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; நான் தனியா உட்கார்ந்திருக்கணும். உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, 'அம்போ'ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க...'
இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர, பதில் என்னமோ மறுப்பு தான்; பதில் என்னவோ அலுப்பு தான்.

முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழஅழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது... பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?

வங்கி, தபால் நிலையம்...

'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!' 'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!'

எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும், ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!

பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.

'எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்...' என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.

அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
'என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்...' என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் - தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.

'எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்; நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க...' என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?

தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.
ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.

இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.

எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

'எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே... எல்லாம் நல்லபடி நடக்கணும்!' எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.

'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா...' என வேண்டுபவனே நடைமுறையாளன்.

Most valuable lesson for parents and children

Best regards,