Thursday 7 February 2019

ஒரு பெண்ணின் வலி

ஒரு பெண்ணின் வலி

மனதாலும் நினைவாலும் தாயாய் இருக்கும் தேவதை💃🏻

அம்மா... வேண்டாம் இந்த ஆறின இட்லி. சூடா எடுத்துட்டு வா'' அப்பா என் ஐ.டி கார்டு தேடிக் கொடு; என் சைக்கிளை துடைச்சு வை...'

மேலே நாம் கேட்டவை கல்லுாரிக்குச் செல்லும் பெண்ணின் வீட்டில் நடக்கும் உரையாடல்.

காட்சி மாறுகிறது. இப்போது அந்த கல்லுாரிப் பெண்ணுக்குத் திருமணமாகி விடுகிறது. மகளைக் காண வரும் பெற்றோர், மகள் அங்கே பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறாள். 'ஏங்க....இன்னொரு இட்லி வைச்சுக்கோங்க...' கணவனிடம் கெஞ்சும் மகள்.. அதற்குள் அத்தையின் குரல். 'இதோ வர்றேன் அத்தை..' பரபரவென ஓடும் மகளைக் கண்டு அதிசயிக்கின்றனர் பெற்றோர்.

பசி சற்றும் பொறுக்காத அந்த செல்லப் பெண், புகுந்த வீட்டில் காலை நேரத்து உணவை உண்ணவே இல்லை. அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.

ஆத்மாவின் குரல்:

ஆம்... அம்மா வீட்டின் செல்லக் குழந்தைகள் தான், புகுந்த வீட்டின் பம்பரங்கள். இறக்கைகள் மட்டுமே இல்லை இந்த தேவதைகளுக்கு. வேரோடு பிடுங்கிய செடி வேறோர் இடத்தில் நடப்படும் போது அந்த சூழலையும் கிரகித்துக் கொள்கிறது. புதிய சூழலை அங்கீகரித்தும், சுவீகரித்தும் கொள்கிறார்கள். ஆனால் அங்கே அவளுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதே இல்லை பெரும்பாலும்.

மனைவி என்ற ஆத்மாவின் குரல் யாருக்கும் கேட்பதில்லை. பின் துாங்கி முன் எழும் பத்தினியாகவே பழக்கப்படுத்தி விட்டது சமுதாயம். 'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதை தவற விட்டால் துாக்கமில்லை மகளே' என்ற கவிஞனின் கானம் காற்றில் மெல்லத் தேய்கிறது. தனக்கென எதையும் யோசிப்பதில்லை மனைவி என்ற பாத்திரம். அம்மா வீட்டில் கதாநாயகி வேடம் தான் எப்போதும்.

கணவன் வீட்டில் குண சித்திர வேடம். மனைவிக்கு என்ன செய்து விட்டோம். இது ஆண்கள் அனைவருக்குமான கேள்விகள். இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள், மனைவியை நேசிப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவியின் பிறந்த நாள் எப்போது? பிடித்த நிறம் எது?பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்கெல்லாம் பெரும் பாலும் விடை தெரியாது என்பது தான் உண்மை. சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு குறிப்புகள் கொடுத்தால் கூட சொல்ல முடியாது என்பதே கூடுதல் சோகம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கடினமாய் இருந்தால் கேள்விகளைக் கேட்பவர்களாக இருங்கள். சாப்பிட்டியாமா? உடம்பு சரியில்லையா?ஏன் முகம் வாடியிருக்கு? உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

மனைவியின் மன வலிகள் எல்லாம் மறைந்து மட்டுமல்ல; மறந்து கூட போய் விடும். உடல் வலிகள்,மன வலிகளைத் தீர்க்கும் இடமாக புகுந்த வீடும் இருக்கட்டுமே.

நீக்கமற நிறைந்திருப்பவள்:

'என் மனைவி வீட்டுக்குச் செல்வதில்லை நான்...' பெருமித தொனியில் சொன்ன அந்த மனிதரின், உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொண்டு இருக்கிறார் அவர்மனைவி. உங்கள் வீட்டில் ரிமோட் யாரிடம் இருக்கும்?இது 'டிவி' ஒளிபரப்பில் கேட்கப்பட்ட கேள்வி...'அதுவா கணவர் கிட்ட இருக்கும். அவர் இல்லாதப்ப என் மகன் கிட்ட இருக்கும்..' வெள்ளந்தி தனமாய் பதில் வருகிறது அந்தப்பெண்ணிடம். உடல் சார்ந்த பார்வையை விடுத்து மனம் சார்ந்த பார்வையில் பெண்களை நோக்கும் போது மட்டுமே பெண் என்பவளின் பெருமை புரியும்.

ஒரே ஒரு நாள் ஊருக்குச் சென்று விட்ட மனைவி இல்லாத வீடு எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை. வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பவள் மனைவி.அதனால் தான் ஔவைப் பாட்டி

'தாயோடு அறுசுவை போம்தந்தையோடு கல்வி போம்சேயோடு தான் பெற்ற செல்வம் போம்மாய வாழ்வு உற்றாருடன் போம்உடன் பிறப்பால் தோள் வலி போம்பொற் தாலியோடு எவையும் போம்'என்று பாடியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணை போன பின்னால் சகலமும் போய் விடுவதாக குறிப்பிட்டு இருப்பார். சமீபத்திய சர்வே ஒன்று கூட இதைத் தான் கூறுகிறது.யாதுமாகி நிற்பவள்மனைவி இழப்பிற்குப் பின்னாலான கணவனின் வாழ்நாள் இருப்புகள் குறைந்து விடுகிறதாம். காரணம் என்ன தெரியுமா? எல்லாமுமாகிப் போனவள் ஏதுமற்று போய் விடுவதால் தான்.

'நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை' என்பது உண்மை தானே?அதிகாலையில் இருந்து அரக்க பரக்க வேலை பார்த்து அல்லாடும் இல்லத்தரசிகள் பற்றி யாரேனும் கேட்டால் அவ வீட்டில் சும்மா தான் இருக்கா என்று வாய் கூசாமல் சொல்லமுடிகிறது பிறரிடம். உலகிலே அதிக சம்பளம் தரக்கூடிய பணி எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அம்மாவின் பணி தான். அதற்கு ஈடு இணையே இல்லை என்பதான பதிலே மானுஷியை உலக அழகியாக ஆக்கியது. மனைவியே தாயாக,மனைவியே தோழியாக,ஆண்களின் கோபங்களின் வடி காலாக என யாதுமாகி நிற்கிறாள்.

அம்மாவிடம் கூட கணவனை விட்டுத் தர முடியாது அவளால் ஒரு போதும்! 'குழம்பு நல்லா இல்லை...இத மனுசன் சாப்பிடுவானா' என்று எரிந்து விழும் கணவனைப் பற்றி கூறிய பக்கத்து வீட்டு பெண்மணியிடம், 'குழம்பு நல்லா இருக்கிறப்ப என்ன சொல்வார் உங்க கணவர்' என்ற என் கேள்விக்கு 'அது அவர் ஒண்ணும் சொல்லாம சாப்பிடறத வைச்சு கண்டு பிடிச்சுக்கலாம்' என்ற பதிலில் மவுனமானது மனது.

'அவர் சொன்னா சரியா இருக்கும்' என்ற நம்பிக்கை வார்த்தைகள், 'அவள் சொன்னா சரியாகத் தான் இருக்கும்' என்று அந்தப் பக்கமும் இடம் பெயர்வது எப்போது? தன் துன்பத்திற்கான தீர்வைத் தரும் மனிதர்களாக கணவரை எதிர் பார்ப்பதில்லை. அப்படியாம்மா..என்று கேட்கும் கணவர்களாக இருந்தால் கூட போதும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.

புதைந்த தனித்திறமை:

பள்ளிப் பருவத்தில் பாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கிய பெண்கள், பேச்சு, ஓவியம் என சிறந்து விளங்கிய தோழிகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் தனித் திறன்களை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள். இந்த சமூகம் கூட அப்படித் தான் பெண்ணை வடிவமைக்கிறது. கணவனுக்கு நன்றாக சமைத்துப் போடத் தெரிந்திருத்தலே மிகச்சிறந்த இல்லத்தரசி என்றே பழக்கப் படுத்தி விட்டது. கல்லுாரி படிக்கும் போது பட்டி மன்றம் பேசும் அக்காவை,ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. அறிவாற்றலும், அழகும் நிறைந்த அவளிடம் இப்பவும் 'பேச போவீங்களாக்கா' என்றதற்கு அவள் ரகசிய குரலில் 'அவருக்கு இதெல்லாம் பிடிக்காது..வீட்டில கூட மெதுவா தான் பேசுவேன்' என்றதும்.. மனம் கனத்துப் போனது. இந்த தேவதைகளின் கனவுகளுக்கான முடிவு காலம் பிறந்த வீட்டிலேயே முடிந்து போனதா? விதி விலக்கான ஆண்களும் இருக்கிறார்கள் என்றாலும் விதிகளோடே வாழும் பெண்களும் இருக்கிறார்கள்

தானே? பண்டிகை காலங்களில் புதுத் துணி உடுத்தி, பண்டிகை கொண்டாடும் பெண்களை எப்போது காண்பது? 'சமைக்கவே சரியாப் போயிடும்...எங்க புதுசு கட்ட' என்ற அந்தப் பெண்ணின் குரல் தானே கேட்கிறது. இந்நிலை எல்லாம் மாற வேண்டும்.அன்பு, நம்பிக்கை, காதல் என இழைத்துக் கட்டப்பட்ட குடும்ப பந்தத்தினை மகிழ்வாக்க மனைவியின் வலுவான கரம் தேவை.ஆதலினால் காதல் செய்வீர் உங்கள் மனைவியை. நேசிக்கப்படுதல் மட்டுமல்ல நேசித்தலுமே வாழ்வை மேலும் அழகாக்கும். பல வித கனவுகளுடன் வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தேவதைகளை அன்புக் கரங்களால் வலுவூட்டம் கொடுங்கள். நம்பிக்கை கொடுக்கவும், நம்பி கை கொடுக்கவும் கணவனின் கரங்கள் இருக்கட்டும்.

மனதாலும், நினைவாலும் தாயாய் இருக்கும் தேவதைகளைக் கொண்டாடுவோம். நீரின்றி மட்டுமல்ல பெண்ணின்றியும் அமையாது உலகு.

Best regards,