Saturday 13 June 2020

அலட்சியம் வேண்டாம் மதுரை மக்களே கொரோனாவிடம் கவனமாக இருங்கள் தலைநகர் நிலை வந்தால் தூங்காநகர் தாங்காது

அலட்சியம் வேண்டாம் மதுரை மக்களே கொரோனாவிடம் கவனமாக இருங்கள் தலைநகர் நிலை வந்தால் தூங்காநகர் தாங்காது

இன்று மட்டும் 31 பாசிட்டிவ்!😭

மதுரை :
கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கும் சூழலில், மக்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுவது சென்னை நிலைமையை மதுரைக்கு கொண்டுவரும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.


மதுரையில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் இறுதியில் கண்டறியப்பட்டது. அன்று முதல் தவறாது பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டபாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினமும் 5 முதல் 20 பேர் வரை பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கின்றனர்.

பெரும்பாலானோர் சென்னையில் இருந்து திரும்பியவர்களாக இருக்கின்றனர்.
சில நாட்களாகத் தான் சென்னையில் இருந்து திரும்புவோரை தேடிப்பிடித்து சுகாதாரத்துறைபரிசோதனை செய்கிறது. இதுவரை அனுமதி பெற்று சென்னையில் இருந்து ரயில், விமானம், கார், டூவீலர்களில் வந்தவர்கள்எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இவர்களில் மிகச் சொற்பமானவர்களுக்கு தான் பரிசோதனை நடந்துள்ளது.
ஒரு புறம் கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் 400ஐ நோக்கி வேகமாக நகரும் நிலையில், மக்கள் மிகவும் அலட்சியமாக, கொரோனா பயமின்றி செயல்படுகின்றனர். ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் கொரோனா மதுரையில் அடங்கிவிட்டதாக மக்கள் எண்ணுகின்றனர்

அலட்சியங்களில் சில ;

• வேலைக்கு, அவசர தேவைக்கு போவோர் மட்டுமல்லாது, தேவையின்றி வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் வருகின்றனர். இதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அலைவது வருத்தமானது.
• வெளியில் அலைபவர்களில் 40 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை.
• இருசக்கர வாகனத்தில் இருவர் முகக்கவசம் இன்றி செல்கின்றனர்.
• கடைகள், வணிக வளாகங்களில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் பலர் முகக்கவசம் அணிவதில்லை.
• மைதானங்களில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் முகக்கவசம் இன்றிகூடி விளையாடுகின்றனர்.
• வாக்கிங் செல்வோர் பலர் முகக்கவசம் அணிவதில்லை.
• பஸ்களில்அரசு சொன்ன விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மாறாக கூட்டம் அலைமோதுகிறது.
• வங்கிகளில் சமூக இடைவெளிகள் இல்லாமல், வாடிக்கையாளர்களை வரிசையாக நிற்க வைக்கின்றனர்.
• ஏ.டி.எம்.,களில் சானிடைஸர் இல்லை. பல 'ஏசி'யுடனும் செயல்படுகின்றன.

 இப்படியே போனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லையேல்,சில வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு,மதுரையும் சென்னையாகும் அபாயம் உள்ளது. இப்படியொரு நிலை வந்தால் நிச்சயம் தூங்கா நகர் தாங்காது .

கோவை, திருச்சியில் மக்கள் விழிப்புணர்வுடன் நடப்பதால் மதுரையை விட மிகக்குறைவான பாதிப்பே உள்ளது.
கொரோனாவை வெல்ல அரசின் முயற்சி மட்டும் போதாது. மக்கள் தங்கள் சமூகப்பொறுப்பை உணர்ந்து எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
மதுரை மக்களே...கவனமாக இருந்து கொரோனாவை வெல்வோம்.

Best regards,