Tuesday, 2 June 2020

கலைஞர் தாத்தாவிற்கு ஒருகடிதம்

FatherOfModern 👆TamilNadu  🖤❤️

டாக்டர் கலைஞர் 😍

கலைஞர் தாத்தாவிற்கு ஒருகடிதம்

அன்புள்ள தாத்தாவுக்கு பாசமுள்ள பேரன் எழுதிக்கொள்வது...

நீங்கள் வாழும்வரை எத்தனையோ ஆயிரம் கடிதங்கள் உங்கள் உடன்பிறப்பிற்கு எழுதியுள்ளீர்கள், எழுதி எழுதி காகிதங்கள்தான் தீர்ந்தனவேயொழிய உங்கள் கருத்துக்களோ கவிதைகளோ ஒருபோதும் தீர்ந்ததில்லை. அதானால் ஒரு மாற்றத்திற்காக உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன்.

நீங்கள் இல்லாமல் நாங்கள் இங்கு நலமில்லை, நான் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி அருகில் தி.இளமங்கலம் என்ற கிராமத்தில் ஒதுக்குபுறமாக உள்ள ஒரு குடிசையில் 1982ம் ஆண்டு பிறந்தேன்.
என் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் சிறுவயது முதலே சுவரொட்டிகள், நாளேடுகள், செய்திதாள்களில் உங்களை அதிகம் பார்த்திருக்கின்றேன். சிறுவயதில் அறியா பருவத்தில் என் நண்பனோடு செங்கல்லை வைத்து கொண்டு மணலில் பஸ் ஓட்டினேன் அப்பொழுது அவன் பஸ்ஸிற்கு பெயர் MGR பஸ் என்றும் என் பஸ்ஸிற்கு பெயர் கலைஞர் பஸ் என்றும் வைத்துக்கொண்டு ஓட்டுவோம்.  இப்படித்தான் என் வாழ்வில் நீங்கள் அறிமுகமானீர்கள்.

பிறகு ஒருமுறை திருச்சியில் improvement  படித்துக்கொண்டிருக்கும் போது 1999 ல் உங்களை மிக நெருக்கத்தில் பார்த்திருக்கின்றேன் உங்கள் மனதை போலவே அத்தனை வெள்ளையாக இருந்தீர்கள். நம் அறிமுகம் அவ்வளவுதான். இத்தனைக்கும் நான் பாரம்பரிய அரசியல் குடும்பத்தையோ அல்லது திமுக குடும்பத்தையோ சார்ந்தவன் இல்லை அதனால் நான் உங்களை பற்றி படித்தும் உங்கள் செயல்களை பார்த்தும்தான் நிறைய தெரிந்து கொண்டேன்.

நான் ஐந்து வயது ஆகும்போது என் வலது கையை தலைமீது வைத்து மடக்கி இடது காதை தொடச் சொன்னார் என் அப்பா. நானும் தொட்டேன் பிறகு  என்னை திட்டக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பா 1987ல் ஒன்றாம் வகுப்பு சேர்த்துவிட்டார். அப்பொழுதெல்லாம் அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளை விட மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் ஊரைச் சுற்றி சுமார் ஆயிரம் மாணவர்கள் 1-5ம் வகுப்புவரை அந்த பள்ளியில்தான் படித்தார்கள். பள்ளிக்கும் வீட்டிற்கும் காலையில் 2 கி.மீ  மாலையில் 2 கி.மீ நடக்க வேண்டும். ஐந்து வயதில் தினமும் 4 கி.மீ நடப்பது என்பது உண்மையாகவே கடினமாக இருக்கும். அம்மாவிடம் கால்வலிக்கின்றது என்று கூறினால் அம்மா இரவில் கால் அமுக்கி விடுவார்கள் அப்படியே தூங்கிவிடுவேன். இப்படி ஆரம்பத்தில் வேண்டா வெருப்பாகத்தான் என் அண்ணனோடு பள்ளிக்குச் சென்று வந்தேன். ஆண்டுதோறும் நான் படித்த பள்ளியில் இலவச நோட்டு புத்தகங்கள்கள், சீறுடைகள், இலவச செருப்பு என்று சகலமும் அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பார்கள். வாரத்திற்கு ஒருமுறை முட்டை என்று தினமும் சத்துணவும் போடுவார்கள். இப்படியாக ஐந்தாம் வகுப்புவரை படிப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பு அருகில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது தீடீர் என்று ஒருநாள் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் தருவதாக புகைபடம் கேட்டார்கள் நானும் கொடுத்தேன் எனக்கு இலவச பஸ்பாஸ் மூலம் பயணம் செய்த அந்த முதல்நாள்  ஞாபகம் இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளன. ஏனெனில் அத்தனை ஆண்டுகள் பள்ளிக்கு நடந்து சென்றதற்கு அன்றுதான் விடிவுகாலம் உங்களால் பிறந்தது. அன்றுதான் முதல்முறையாக நீங்கள் என் மனதுக்குள் நச்சென்று நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டீர்கள்.
அதன் பிறகு கருப்பு கண்ணாடி அணிந்த கலைஞர் தாத்தா என செல்லமாக அழைக்க தொடங்கினேன்.

பத்தாம் வகுப்பு வரை அந்த பள்ளியில்  என் படிப்பை முடித்துவிட்டு பதினொன்றாம் வகுப்பு அருகிலுள்ள அரசு உதவி பெறும் இறையூர் அருணா சுகர்ஸ் மேல்நிலைப் பள்ளி என்ற கிராமபுற பள்ளியில் என் படிப்பை தொடங்கினேன். அப்பொழுது நீங்கள் கிராமபுற மாணவர்களுக்காக 15% இடஒதுக்கீடு அளித்துள்ளீர்கள் என்ற விபரமெல்லாம் எனக்கு தெரியாது.
நானும் கடினமாக படித்து பொதுத்தேர்விலும் நுழைவுத் தேர்விலும்
வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 2000மாவது ஆண்டில் MBBS படிக்க முதல்தலைமுறை பட்டதாரி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் விண்ணப்பித்தேன்.
இப்பொழுதுபோல் அப்பொழுதும் நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே நான் படித்த புத்தகத்திலிருந்துதான் கேட்கப்பட்டன. இப்பொழுதுபோல் நீட் தேர்வெல்லாம் கிடையாது.

உங்கள் ஆட்சியில் அப்பொழுதுதான் புதிதா திருச்சி மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. எனக்கு எப்படியும் ஒரு சீட் புதிய மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கும் என்று தெரியும். ஆனால் அதன் பிறகுதான் BC/MBC/SC/ST என்று அனைத்து கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு உள்ளது என்ற விஷயமே தெரியவந்தது. இது இரட்டை சந்தோஷத்தை எனக்கு தந்தது. பிறகு எனக்கு கிராமபுற இடஒதுக்கீட்டில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே MBBS இடம் கிடைத்துவிட்டது. அன்று நீங்கள் தந்த அந்த சலுகை இல்லையென்றால் நான் தஞ்சை, திருச்சி அல்லது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் ஏதாவது ஒன்றில்தான் படித்திருப்பேன். நீங்கள் அளித்த அந்த சலுகையில் என்போன்ற முதல் தலைமுறை ஏழை கிராமபுற மாணவர்கள் நிறையபேர் என்னுடன் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் மற்றும் இதர மருத்துவக் கல்லூரிகளிலும் படித்தார்கள்.
அவர்களின் குடும்ப பின்புலமும் என்னை போன்றேதான் இருந்தது. ஆதலால் எனக்கு எந்த பயமோ பதட்டமோ இல்லாமல் என் கல்லூரி படிப்பை துவங்கினேன்.
பிறகு என் மருத்துவப்படிப்பை 2006ல் முடித்துவிட்டு நான் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்கு  சேர்ந்தேன் அப்பொழுதும் உங்கள் ஆட்சிதான் நடைபெற்றது. நீங்கள் கிராமபுற ஆரம்பசுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தி அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பின்படி  தேர்ந்தெடுத்தீர்கள். நானும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2009ம் ஆண்டு அரசு மருத்துவராக நியமிக்கப்பட்டேன்.

அங்கு 5 வருடங்கள் ஏழைமக்களுக்காக மருத்துவம்  பார்த்துவிட்டு பிறகு 2014ம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்கச் சென்றேன்.
அப்பொழுதெல்லாம் ஆரம்பசுகாதார நிலையத்தில் வேலை பார்க்கும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இருந்தது. அதில் ஆயிரக்கணக்கான ஏழை  BC/MBC/SC/ST மருத்துவர்கள் ஆண்டுதோறும் முதுகலை பட்ட படிப்பிற்காக சென்றனர். அப்படிதான் நானும் குழந்தைநல மருத்துவனாக படிக்கச்சென்றேன். இன்று நான் படித்த அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் குழந்தைநல மருத்துவராகவும் பணிபுரிகின்றேன்.
இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் எனக்கே தெரியாமல் நீங்கள் முன்பு செய்து வைத்ததை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிபடிகளாக மாற்றியதால் இன்று சமூகத்தின் மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்துள்ளேன்.
தாத்தா உங்களுக்கே தெரியாமல் என்னை போல் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் லட்சக்கணக்கான பொறியியல் படித்தவர்களும் உங்களால் பயனடைந்துள்ளனர். ஆனால் யாருக்கும் இதை வெளியே கூற மனம் வருவதில்லை.

என் வயதையும், என் குடும்ப சூழலையும் ஒத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உ.பி, ம.பி, பீகார் போன்ற வட மாநில இளைஞர்கள் இன்னும் படிக்காமல் சாதிச் சண்டைகளும் மதச் சண்டைகளும் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களுக்கு அடியாளாக உள்ளனர்.  அவர்கள் முன்னேற இன்னும் எத்தனை தலைமுறைகளை கடக்க வேண்டும் என்று யாருக்குமே தெரியாது. ஏனெனில் அங்கு ஒரு பெரியாரோ அண்ணாவோ கலைஞரோ பிறக்கவில்லை. ஆனால் நாங்கள் பெற்ற பேறு இம்மூவரும் தமிழகத்திற்கு கிடைத்தனர்.

எப்பொழுதும் தமிழகத்திற்கு அரணாக நின்று எங்களை பாதுகாத்தீர்கள். நீங்கள் இல்லாத இந்த வேலையிலே
தற்பொழுது நீட்தேர்வை கொண்டு வந்து அனைத்து கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவையும் பறித்துக் கொண்டனர்.

அரசுமருத்துவர்களுக்கு அளித்துவந்த 50% முதுகலைப்பட்ட மேற்படிப்பு இடஒதுக்கீட்டையும்  வழங்காமல் மறுத்துவிட்டனர். தற்பொழுது நீங்கள் உருவாக்கி வைத்த மருத்துவக் கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றனர். முதுகலைப் பட்ட மேற்படிப்பில் வழங்கிவந்த OBC இடஒதுக்கீட்டையும் வழங்காமல் 10000க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை தற்பொழுது பொதுப்பிரிவு மக்கள்(உயர்வகுப்பினர்) அபகரித்துக் கொண்டனர்.

இப்படியாக இன்று கட்டுமரம் இல்லாமல் நடுக்கடலில் உயிருக்கு தத்தலிக்கும் மீனவனை போல் எங்கள் வாழ்க்கை மாறிவிட்டது.

@ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று @

என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள்.

நீங்கள் வங்கக்கடலோரம் ஓய்வெடுத்தது போதும், எழுந்து வந்து மீண்டு எங்கள் சமூகநீதியை மீட்டு தாருங்கள் தாத்தா!
என் போன்ற பல்லாயிரக் கணக்கான குடும்பங்களை மேலே ஏற்றிவிட நீங்கள் வேண்டும்.
தாத்தா உங்கள் வருகைக்காக காத்திருக்கும் கோடானகோடி சொந்தங்களில் நானும்
ஒருவன்..!!! 🌹🌹🌹❤❤❤

இப்படிக்கு பாசமுள்ள பேரன்,

Best regards,