Tuesday 16 June 2020

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் மறைவை ஒட்டி, பலரும் என்னிடம் கேட்ட கேள்விகள் -

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் மறைவை ஒட்டி,  பலரும் என்னிடம் கேட்ட கேள்விகள்  -

"அவரை காப்பாற்றி இருக்க ஏதாவது வழி இருந்ததா? "

"எவ்வளவு பணம் செலவு செய்தாலும் கொரோனாவிடம்  இருந்து உயிரை காப்பாற்ற முடியாதா??"

"அலோபதி மருத்துவம் (Modern medicine) மீது நம்பிக்கை வைக்கலாமா?"

"வென்டிலேட்டரில் போடப்பட்டால் காப்பாற்றவே முடியாதா?"

அந்த கேள்விகளுக்கான எனது பதில்-

கீழே உள்ள படத்தில் நீங்கள் காண்பது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 20
வயது பெண்ணின்  நுரையீரல்.... பொதுவாக நுரையிரல் பஞ்சு போன்ற மென்மையும் ,ரோஜாப்பூ இதழ்  நிறத்திலும் இருக்கும்...

ஆனால் இந்த 20 வயது பெண்ணின் நுரையீரல் கல் போன்று இறுகி காணப்படுகிறது... அதனால்,வழக்கமாக நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் செல்ல வழியில்லாமல் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து விரைவில் இறந்து விடுகிறார்கள்...

 கொரோனா  தொற்று ஏற்பட்ட  பின்னர் வென்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) பொருத்தப்பட்டாலும் , நுரையீரலின் தன்மை  கல் போன்று இறுகி காணப்படுவதால் பயன்தராது !

அப்படியானால் இந்த நபர்களை காப்பாற்றவே முடியாதா என்கிற உங்களின் கேள்வி நியாயமானது தான்...

நிச்சயம் காப்பாற்றமுடியும்,

அதற்கு சில  அளவுகோல்கள் உண்டு ..

உதாரணமாக பாதிக்கப்பட்ட நபரின்
வயது,
அவருக்கு உள்ள மற்ற நோயின் தன்மை,
கடந்த காலத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள்,
#புகைப்பழக்கம்,
மது அருந்தும் பழக்கம்,
சிறுநீரக +கல்லீரல் செயல்பாடுகள் ,
எலும்பு தேய்மானம்
போன்றவற்றைப் பொறுத்து அவரை காப்பாற்றும் வாய்ப்புகள் அதிகமாகும்...

இவை அனைத்தும் ஒத்து வந்தாலும் கூட,செயற்கை சுவாசம் (VENTILATOR)  மட்டுமே போதாது...

ECMO(எக்மோ) என்று சொல்லப்படுகின்ற, EXTRACORPOREAL MEMBRANE OXYGENATOR என்ற கருவி மிக மிக அவசியம்... இந்தக் கருவி தான் நுரையீரல் செய்கின்ற அதிக தொழில்நுட்ப வேலையை செம்மையாக செய்யும்... மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இறுதியாக பொருத்தப்பட்டதும் இதே கருவிதான்... இந்தக் கருவியின் ஒருநாள் உபயோக கட்டணம் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேல்...
(தமிழ்நாடு  அரசு மருத்துவமனைகளில் மூன்று ECMO கருவிகள் உள்ளன)

ECMO கருவியும் ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டும்தான்... நுரையீரலை சரி செய்வதற்கான வாய்ப்பை/நேர அவகாசத்தை அது  வழங்கும்... பத்து நாள் முதல் 40 நாளைக்குள்  நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினைகளை முழுமையாக சரி செய்துவிட்டால், ECMO மூலம் ஒருவரை காப்பாற்ற அதிக வாய்ப்புகள் உண்டு... அதற்குமேல் வாய்ப்புகள் மிக மிக குறைவு ( எனது அனுபவத்தில்)

மூன்று நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் தலைசிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் Rela அவர்களை தொடர்புகொண்டு இதைப்பற்றி கூறினேன் (திரு அன்பழகன் அனுமதிக்கப்பட்ட ரெலா மருத்துவமனையின் இயக்குனர்)
அவரும் இந்தக் கருத்தை ஆமோதித்தார்.. திரு அன்பழகன் அவர்களுக்கு ECMO கருவி பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்றிருப்பதாகவும் கூறினார்...

நான் மேலே குறிப்பிட்ட அளவு கோல்களின் படி, திரு அன்பழகன் அவர்களின் வயது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டது, நாள்பட்ட பிற மருத்துவ நோய்கள், சில  பழக்கவழக்கங்கள்  போன்றவை அவருக்கு ஏதுவாக இல்லை... அதனால் அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டது...

கீழே நீங்கள் காணும் நுரையீரலுக்கு சொந்தமான அந்த 20 வயது பெண்ணிற்கு, இன்றுதான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது (Double  #LungTransplant -June 11,2020).
அமெரிக்காவை சேர்ந்த அந்த நபருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.. தற்போது அந்தப் பெண் நலமுடன்  ICU வில் உள்ளார்..

எனவே நவீன மருத்துவத்தால் ஒரு உயிரை  எப்பேற்பட்டாலும் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,, ஆனால் அதற்கு சில அளவுகோல்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..

புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அந்த பழக்கவழக்கங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்...
உடல் பருமன், அதிகமான குறட்டை, சர்க்கரை நோய் போன்றவைகளும்  பின்னடைவை ஏற்படுத்தும்...
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.... இதுபோன்ற காலங்களில்,வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்... வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்... மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்...

அடுத்து வரப்போகின்ற இரண்டு வாரங்கள் தான் தமிழகத்தில் ,  கொரோனா  உக்கிர தாண்டவம் ஆடப்போகிறது.. எனவே நம்மையும் நம் சுற்றத்தாரையும் கவனமாக பார்த்துக் கொள்வோம்...

நுரையீரல் நலனைப் பேணுவோம் !


-மருத்துவர் பால. கலைக்கோவன்,
நுரையீரல் சிறப்பு மருத்துவர்- கடலூர்.

Best regards,