Monday, 31 December 2012

மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.

Sunday, 30 December 2012

மன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......


பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.


என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

Saturday, 29 December 2012

பெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74


 நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.

திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.

யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.

ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.

எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.

இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.

கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.

பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்...!