Saturday, 29 December 2012

பெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74


 நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.

திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.

யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.

ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.

எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.

இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.

கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.

பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்...!