Saturday 15 December 2012

உண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம் இது. வாழ்த்துகள்!

இவரைப் போன்ற ஒருவர்தான் இன்றைய தேவை.
நாணயம், யோக்கியம் போன்றவற்றுக்கு அர்த்தமே தெரியாத இன்
றைய ஆட்சியாளர்கள் மற்றும் பெரும் தலைவர்களுக்கு மத்தியில் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற தனது கொள்கைகளை, பல்வேறு ஏளனம், கேலிகளைத் தாண்டி இன்னமும் வலுவாகப் பற்றிக் கொண்டிருப்பவர் வைகோ, இடையில் சில தடுமாற்றங்களுக்குள்ளானாலும்!
தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியே தீர வேண்டும். அதுதான் வளர்ச்சி அரசியல் என்று புதுப்புது இலக்கணங்கள் படைக்கும் பச்சோந்திகளைப் பார்த்தே பழகிய வாக்காளர் கண்களுக்கு, தன்மானம் முக்கியம், தொகுதிகளுக்காக தரமிழந்து கையேந்த முடியாது என சிலிர்த்துக் கொண்டு நிற்கும் வைகோ ஒரு ஆச்சர்யமாக, அல்லது பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியாகத்தான் தெரிவார். அது வைகோவின் தவறல்ல!
ஆனால் அவரை ஆரம்பமுதலே பார்க்கும் நமக்கு அப்படித் தெரியவில்லை. இத்தனைக் காலமும் சுற்றியிருப்பவர்களின் பதவி ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி, கட்சியைக் காப்பாற்றக் கருதிசில குறைந்தபட்ச சமரசங்களோடு கூட்டணி கண்டு வந்தார் வைகோ என்பதுதான் உண்மை.
ஆனால் அப்படி பதவி ஆசைக்காக அவரை நச்சரித்து வந்த கூட்டம் இப்போது எதிர் முகாமில், வாங்கிய கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள். வைகோவுக்கு இனி இழக்க எதுவுமில்லை. ஆனால் பெறுவதற்குதமிழகம்இருக்கிறது. இப்போது அவர் எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கலாம். அதற்கு இப்போது அவருக்குக் கிடைத்துள்ள சுயமரியாதை மற்றும் யோக்கியர் என்ற இமேஜ் பெருமளவு உதவும்.

இன்றைய தேதிக்கு திமுக அதிமுக கூட்டணிகளின் சந்தர்ப்பவாதங்கள், சர்வாதிகார்ப் போக்குகள் மற்றும் ஊழல்களைப் பார்த்து வெறுத்துப் போன பெரிய இளைஞர் கூட்டத்துக்கு லேசான நம்பிக்கைக் கீற்று வைகோ மூலம் தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் மிகையல்ல.
இந்த இளைஞர்களை மதிமுகவின் தொண்டர் பலமாக மாற்றிக் கொள்வதுதான், வைகோவின் அடுத்த கட்ட இலக்காக இருக்க வேண்டும். அதுவே, மதிமுக என்ற மாற்று அரசியல் சக்தியை நிலைநிறுத்த உதவும். நல்ல படிப்பாளி, நிர்வாகம் தெரிந்தவர், தொண்டர்களிடம் ஆளுமை மிக்க தலைவர், உண்மையான இன உணர்வாளர் என இத்தனை சிறப்புகள் இருந்தும் இவரால் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க முடியாமல் போனது தமிழக வாக்காளர்களின் துரதிருஷ்டம்.
இந்த நேரத்தில் அவருக்கு ஒரு முக்கிய கோரிக்கையையும் தமிழக மக்கள் சார்பில் வைக்கலாம். ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் மனிதாபிமானி என்ற பெயரைப் பெற்ற வைகோ, இனி இங்குள்ள பிரச்சினைகளிலும் முழுவீச்சில் களமிறங்க வேண்டும்.
அடுத்த தேர்தலில் போட்டியிடுகிற அணிகளுள் வைகோவின் தலைமையிலான மதிமுக அணியும் ஒன்று என்ற நிலைக்கு அவர் இப்போதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமே, கூட்டணியிலிருந்து அவர் விலகி நிற்பது. தாமதம் என்றாலும், இது சரியான முடிவுதான்.
இதுதான் வைகோவை பெரும் சக்தியாக மாற்ற உதவும்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லைஆனால் ஆளுங்கட்சியாகும்போது ராசியான நிறங்கள்மட்டுமே வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதானால்தான் இத்தனை நாள் அவருக்கு கவசமாகத் தெரிந்த வைகோவின் ஈழ ஆதரவுக் குரல், இப்போது கசக்கிறது.
அரசியல் களத்தில் வைகோவை வீழ்த்துவதையே தனது கடமையாகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது திமுக. ஜெயலலிதாவும் இதில் கருமமே கண்ணாக இருக்கிறார். பணத்தை வாரி இறைத்தேனும் அவரை விருதுநகரில் தோற்கடிக்கிறது காங்கிரஸ்.
வைகோவைத் தோற்கடிக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட பெரும் ஆலைகளின் முதலாளிகள் பல கோடிகளை வாரியிறைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால், இவர்களின் கொள்ளைகளுக்கு வைகோ எந்த அளவு இடையூறாக இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!
ஆக, அவர் நாடாளுமன்றத்துக்கோ, சட்டமன்றத்துக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பத் தெளிவாக உள்ளார்கள். காரணம் வைகோவின் கேள்விகள் தங்களை நோக்கிப் பாயும் என்ற பயம். நேர்மையாளனைப் பார்த்து பயப்படுபவர்கள் யாராக இருப்பார்கள்பரம அயோக்கியர்கள்தானே!
நல்லது, புதிய தொடக்கத்துக்கு வாழ்த்துக்கள் வைகோ!