Wednesday, 5 December 2012

டெங்கு காய்ச்சல்


டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?

டெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில
் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் - குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது. மற்ற கொசுக்களைப் போல் சாக்கடை நீரில் அல்ல, நல்ல தண்ணீரிலேயே இவை வளரக் கூடியவை. மற்ற கொசுக்களைப் போல் அல்லாமல் பகலில் மனிதர்களைக் கடிக்கக் கூடியவை.பெண் கொசுதான் கடிக்கும். காரணம் அதன் முட்டை ஆரோக்கியமாக இருக்க, நம் ரத்தத்திலுள்ள புரதம் அதற்குத் தேவை. அது நம்மைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும்போது அதன் வயிற்றில் உள்ள வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து விடுகிறது. ஒரு கடியிலேயே கூட வைரஸ் நம்மைத் தாக்கும்.

ஏடஸ் கொசுவின் வாழ்நாள் இரண்டு வாரங்கள் மட்டுமே. இந்த 2 வாரங்களில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 100 முட்டைகள் வரை இடும். உலர்வான சூழல் இருந்தால் 9 மாதங்கள் வரை இந்த முட்டைகள் உயிர்ப்புடன் இருந்து அதன்பிறகு அதற்குத் தகுந்த சுத்தமான நீர், உணவு கிடைத்தால் குஞ்சுகளாகப் பொரிக்கும். ஒரு கொசுவில் டெங்கு வைரஸ் இருந்தால் அதிலிருந்து வரும் முட்டை, குஞ்சு என்று அதன் மூலம் பெருகும் அனைத்துக் கொசுவிலும் இந்த வைரஸ் இருக்கும்

டெங்கு காய்ச்சல் உயிர்க்கொல்லியா?

டெங்கு காய்ச்சல் அத்தனை பயங்கரமான உயிர்க் கொல்லியா என்ற கேள்வியை குளோபல் மருத்துவமனை பொதுமருத்துவர் டாக்டர். மதுபாஷிணியிடம் கேட்டபோது, முதலில் இந்த அளவிற்கு பயப்படத் தேவையே இல்லை. டெங்கு காய்ச்சல் எல்லா காய்ச்சலையும் போலவேதான் முதல் 2 நாட்கள் இருக்கும். பாராசிட்டமால் மருந்துகளை எடுத்துக் கொண்டால் போதுமானது. இதிலேயே 99 சதவிகிதம் பேருக்கு சரியாகி விடும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மயக்கம், வாந்தி (இதில் ஏதாவது ஒன்று இருக்கலாம்) ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் சேர்ந்தும் வரலாம்" என்றார்.

2009ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் டெங்கு காய்ச்சலை இரண்டு வகையாகப் பிரித்தது. 1.சிக்கலில்லாத சாதாரணக் காய்ச்சல். 2. ரத்தக் கசிவு உள்ள தீவிரக் காய்ச்சல்.

டெங்குவினால் ஏற்படும் சாதாரணக் காய்ச்சலுக்குப் பொதுவாக, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே சரியாகிவிடும்.பெரும்பாலானோருக்கு ஏற்படுவது இந்தக் காய்ச்சல்தான்.

2வது வகையில் ரத்த அழுத்தம் குறையும். உடனே மருத்துவ ஆலோசனை வேண்டும். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த வகை டெங்கு ஏற்படுகிறது. இதில் நம் ரத்தத்திலுள்ள தண்ணீர் உள் உறுப்புகளில் கசியக் கூடும். இதுதான் ஆபத்தானது. நம் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை தட்டணுக்கள் உள்ளன. இந்தத் தட்டணுக்கள் குறைந்தால் ஆபத்து. தட்டணுக்கள் 10 ஆயிரத்திற்குக் கீழே குறையும்போதே நாங்கள் உடலில் தட்டணுக்களைச் செலுத்துவோம். டெங்கு பாதிப்பு உள்ளது என்று தெரிந்தால் முதலிலேயே தட்டணுக்களை செலுத்தலாமே என்று சிலர் கேட்கிறார்கள். அதனால் எந்தப் பலனும் கிடையாது. தேவை இல்லாதபோது செலுத்தும் தட்டணுக்கள் அழிந்து போய்விடுமே தவிர உடலில் தங்காது" என்கிறார், டாக்டர். மதுபாஷிணி.

அம்மை, போலியோ இவற்றுக்கெல்லாம் தடுப்பு மருந்து (வாக்சின்) கொடுப்பதுபோல இதற்கு தடுப்பு மருந்து கிடையாதா?

நான்கு வகை டெங்கு வைரஸ்கள் இருக்கின்றன. ஒருமுறை நம்மைப் பாதித்த வைரஸ் மீண்டும் நம்மைத் தாக்கினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், நம் உடல் அதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுவிடும். ஆனால் அதே சமயம் அந்த எதிர்ப்பு சக்தி மற்ற மூன்று வைரஸ்களைப் பொறுத்தவரை பலனளிக்காது. ஒரு முறை பாதிக்கப்பட்டவர் இரண்டாம் முறை பாதிக்கப்படும் போது அதன் விளைவுகள் தீவிரமாக இருக்க வாய்ப்புண்டு.

ஆன்ட்டிபயாட்டிக்கள்?

ஆன்ட்டிபயாட்டிக்கள் பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. தேவையில்லாமல் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் அதைச் சாப்பிடுகிறார்கள். சிலர் வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். இது இரண்டுமே மிகத் தவறு. வலி நிவாரணிகள் ரத்தத் தட்டணுக்களைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

அப்படியானால் டெங்கு காய்ச்சலுக்கு என்ன செய்வது?

காய்ச்சல், உடல்வலி இருந்தால் 2 நாட்கள் பாராசிட்டமால்மாத்திரைகளை சாப்பிடுங்கள். நிறைய திரவ உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் குறையவில்லை என்றால், டாக்டரிடம் முறையாக ஆலோசனை பெறுவது நல்லது. மற்றபடி இந்த அளவிற்கு பீதியடையத் தேவையில்லை. ஏனெனில், டெங்கு காய்ச்சலினால் இறப்பவர்கள் ஒரு சதவிகிதம் பேர்தான்.

இந்த நோய் ஏற்படாமல் எப்படித் தடுப்பது?

சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கடை நீர் மட்டுமல்ல, சாதாரணத் தண்ணீர் கூடத் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓவர் ஹெட் டாங்க் மூடி, ஏர் கூலர், மொட்டை மாடியிலும் தோட்டத்திலும் சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சாத்தியமில்லை என்றால், தேங்கிய நீரில் கொசு மருந்து அடித்து வையுங்கள். குலாம் நபி ஆசாத் சொல்லும் முழுக்கைச் சட்டை கூட ஒரு பயனுள்ளயோசனைதான்.

உலகம் முழுவதும்

ஆண்டுக்கு உலகம் முழுவதும் ஐந்து முதல் 10 கோடி மக்களை டெங்கு தாக்குகிறது. 1960ல் இருந்ததை விட 2010ல் அதன் தாக்கம் முப்பது மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு நகர்மயமாதல் உள்ளிட்ட பல காரணங்கள். புவி வெப்பமயமாதல் ஒரு காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘கடந்த ஆண்டு முதல் டெங்குவின் பாதிப்பு பெரிய அளவில் இருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாததே முக்கியக் காரணம்’ என்கிறார், திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைபொதுநல மருத்துவர் டாக்டர். ஜே.பாரத். ‘கொசு உற்பத்தியை முற்றிலும் ஒழிப்பதால்மட்டுமே டெங்குவைத் தடுக்க இயலும்’ என்கிறார் அவர்.

என்ன செய்வது?
டெங்குவிற்கென்று பிரத்யேக சிகிச்சை கிடையாது.
காய்ச்சல், உடல் வலி என்று டெங்குவிற்கான அறிகுறிகள் இருந்தால் முதல் 2 நாட்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுங்கள்.
காய்ச்சல் குறையவில்லை என்றால், டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
கண்டிப்பாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்து சாப்பிடக் கூடாது. வலி நிவாரணிகளையும் தவிர்க்க வேண்டும். இதனால் ரத்தத் தட்டணுக்கள் குறைய வாய்ப்பு உண்டு.
நிறைய திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை

சுத்தமான நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும் என்பதால், எந்தவிதத்திலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர்த் தொட்டியில் மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
நீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், ஏர் கூலர், ஹெட் டாங்க் மூடி, சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.