Wednesday, 23 January 2013

கோட்டா டாட்டா!

ஒரு ஆமையும் ஒரு முயலும் ஒண்ணாம் வகுப்புல இருந்து ஒண்ணா படிச்சுட்டு இருந்தாங்க. ரெண்டு பேருக்கும் எப்பவும் போட்டிதான். ஆளுக்கு ஒரு கேங் சேர்த்துக் கிட்டு, ஸ்கூலையே அதகளம் செய்வாங்க. எல்லா போட்டியிலும் முட்டி மோதிப்பாங்க. ஒரு முறை முயல் ஜெயிச்சா... இன்னொரு முறை ஆமை ஜெயிக்கும். அதை ரெண்டு கேங்கும் கட்-அவுட் எல்லாம் வெச்சுக் கொண்டாடும். இவிங்க எப்படா ஸ்கூலைவிட்டுப் போவாங்க... நிம்மதியா இருக்கலாம்ன்னு டீச்சர்ஸ் நினைச்சாங்க.

அதுக்காக காலம் வேகமா ஓடுமா என்ன? எப்பவும் போல அது 'டிக்...டிக்...டிக்என்று ஒரு நாளைக்கு 24 மணி நேரமா போய்ட்டு இருந்துச்சு. முயலும் ஆமையும் ஒண்ணாம் வகுப்பில் இருந்து ரெண்டாம் வகுப்பு, மூணு... நாலு... இப்படிப் போக ஆரம்பிச்சு, ப்ளஸ் டூவுக்கும் வந்துட்டாங்க.

''இதுல, அவனைவிட நாம அதிக மார்க் எடுத்தே ஆகணும்டா'' என்று முயல் மாங்கு மாங்குனு படிச்சது. ஆமை அவ்வளவா அலட்டிக்கலை. பரீட்சையில தெரிஞ்சதை மட்டும் எழுதிட்டு வந்துடுச்சு.

ரெண்டு மாசத்துல ரிசல்ட் வந்துச்சு. ஆமை, 1109 மார்க்தான் எடுத்துச்சு. முயல் 1124 மார்க். அதுக்கு ஒரே குஷி! வழக்கம்போல முயலோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து 'அதிக மதிப்பெண் எடுத்து அசத்திய அண்ணலே...’ 'மதிப்பெண்களை வாரிக் குவித்த மகாபுத்திசாலியே...இப்படி டிஜிட்டல் பேனர்களை வெச்சு அசத்தினாங்க.

அப்புறம், முயல் அந்த ஊர்லயே ஃபேமஸான இன்ஜினியரிங் காலேஜ்ல அப்ளை பண்ணிச்சு. ஆமையும் அங்கேயே அப்ளை செய்துச்சு. அதுல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்குக் கிடைக்கலை. முயல் டென்ஷன் ஆயிடுச்சு. அப்பாவோடு போய் காலேஜ் பிரின்ஸ்பால் முன்னாடி நின்னது.

''என்னைவிடக் குறைஞ்ச மார்க் எடுத்த ஆமைக்கு எப்படி சீட் கொடுத்தீங்க. லஞ்சம் வாங்கினீங்களா?'' என்று கேட்டுச்சு.

''கண்டபடி பேசாதே... இது அந்த மாதிரி காலேஜ் கிடையாது.'' என்று சொல்லித் துரத்திட்டார் பிரின்ஸ்பால்.

முயல் வெளியே வர, அங்கே நின்னுட்டு இருந்த ஆமை, ''நண்பா... உனக்கு ஞாபகம் இருக்கா... ரெண்டாம் வகுப்புல படிக்கும்போது உன் அலட்சியத்தால ஓட்டப் பந்தயத்துல அப்ப நான் உன்னை ஜெயிச்சேன். அதான் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல எனக்கு இப்ப சீட் கிடைச்சது. டாட்டா...'' என்று சொல்லிட்டு கம்பீரமா நடந்துபோச்சு.

- சி.ராம்முகிலன்,
மதுரை.
(சுட்டி விகடன் 15.10.2011)