இந்திய நாட்டின் குடிமகனுக்கு அவனது மொழியில் குடியுரிமை சீட்டு இல்லை ! என்ன கொடுமை இது !
பாஸ்போர்ட் என்னும் கடவுச் சீட்டு என்பது குடியுரிமைக்கான ஒரு முக்கியமான
ஆவணம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை அந்த ஆவணம் இந்திய குடியுரிமை
பெற்றவர்களின் சொந்த மொழியில் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழி நிலை.
ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து ஹிந்தியர்களின் ஆட்சி இந்தியாவில் தொடங்கப்பட்ட
காலம் முதல் இந்தியாவில் அனைத்து மொழியின மக்களுக்கும் அவர்கள் மொழி
மறுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. கடவுச் சீட்டு எந்த மாநிலத்தில்
வழங்கப்படுகிறதோ அந்த மாநில மொழியில் தானே விவரங்களில் இருக்க வேண்டும் .
மாறாக அனைத்து மாநிலங்களிலும் வழங்கப் படும் கடவுச் சீட்டுகளிலும் ஆங்கிலம்
மற்றும் இந்தி மொழியல் மட்டும் தான் விவரங்களை அச்சிட்டு கொடுத்து
வருகிறது இந்திய அரசு . இது எவ்வளவு பெரிய மொழித் தீண்டாமை கொள்கை .
இந்தியாவில் உள்ள பல கோடி மக்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தாய் மொழி
அல்ல. அப்படி இருக்கும் போது, அவரவர் தாய் மொழியில் கடவுச் சீட்டு இல்லை
என்றால் அவர்களும் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் என்பதை அவர்கள் எப்படி உணர்வார்கள்?
தமிழினப் படுகொலை செய்யும் இலங்கையில் கூட தமிழ் மக்களுக்கு புரியும்
வகையில் அவர்கள் கடவுச் சீட்டில் தமிழ் மொழி உள்ளது . குடிவரவு ஆவணங்கள்
அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளது. ஐம்பது இலட்சம் தமிழ் மக்கள் இருக்கும்
இலங்கையில் தமிழ் மொழியில் கடவுச் சீட்டு உள்ளது. ஆனால் பத்து கோடி தமிழ்
மக்கள் வாழும் இந்தியாவில் தமிழ் மொழியில் கடவுச் சீட்டு இல்லை. மேலும்
இந்தியாவில் கடவுச் சீட்டு மற்றும் ஏனைய குடிவரவு ஆணவங்கள் எதுவும் தமிழில்
கொடுக்கப் படுவது இல்லை என்பது இந்திய அரசின் ஹிந்தி ஆதிக்க மனப்பான்மையை
தான் காட்டுகிறது .
இந்த நிலையை மாற்றி இந்தியாவில் உள்ள அனைத்து
மாநில மொழிக்கும் அதிகாரமும் ஆட்சி மொழிக்கான அங்கீகாரமும்
முக்கியத்துவமும் கொடுக்கப் படவேண்டும் . அதற்கு இந்தி அல்லாத வேற்று
மொழியினர்கள் குரல் எழுப்ப வேண்டும். இந்திய அரசின் மொழித் தீண்டாமைக்
கொள்கையை உடைத்தெறிய வேண்டும் . கடவுச் சீட்டு , வருமான வரி அட்டை போன்ற
முக்கிய குடியுரிமை ஆவணங்கள் அவரவர் மொழியிலேயே இருத்தல் அவசியம் . இதற்கான
முன்னெடுப்புகளை மாநில அரசும் எடுக்க வேண்டும் .
பி.கு : அப்பாவி
இந்திய தமிழர்களின் கவனத்திற்கு. இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும்
கிடையாது . இந்தியாவில் தமிழ் உட்பட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட
மொழிகளாகும். ஆனால் இந்தியை மட்டுமே இந்திய அரசு பயன்பாட்டில் வைத்துள்ளது .
ஏனைய மொழிகளுக்கு எந்த வித மதிப்பும் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்
தக்கது.