Monday 15 April 2013

UNICODE ( ஒருங்குகுறி ) திருடர்கள்

UNICODE ( ஒருங்குகுறி ) திருடர்கள்
******************************
************************

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய , அறிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது " அறி + ஆமை = அறியாமை = இன்றைய பல தமிழர்கள் "
தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணம் - சிங்களவர்கள்
தமிழ் மொழிப் படுகொலைக்கு காரணம் - சமஸ்க்ருத தீவிரவாதிகள் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பொறுமையாக படியுங்கள் ,
தெரிந்து கொள்ளுங்கள் .படித்தபின்னர் தமிழர்களாக இருப்பதும்
டுமிலர்களாக இருப்பதும் உங்கள் கையில் தான் ..

கணினித் தமிழில் ஒருங்குகுறி (Unicode)அமைப்பில் கிரந்த எழுத்துகளைத் திணிக்க முயற்சிக்கும் இன்றைய சூழ்நிலையில் தேடுவதே பொருத்தமானதாக இருக்கும். கணினியில் தமிழைப் பயன்படுத்துவது அதிக அளவில் வளர்ந்து வருகிறது. எனினும் தமிழ் எழுத்துருக்கள் (fonts) பலவிதங்களில் இருந்ததால், ஒருவர் தன் கணினியில் தட்டச்சு செய்யும் எழுத்துகளை மற்றவர் தனது கணினியில் படிப்பது கடினமாக இருந்த்து. சில நேரங்களில் படிக்க முடியாமலும்போனது. அப்போது தனிநபர்கள், தமிழக அரசு, தமிழ்க்கணினிக்கான அமைப்புகள் என பலவிதங்களிலும், ஒரே வடிவலான தட்டச்சுக்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ஒருங்குகுறி அவையம் (Unicode consortium) என்ற சர்வதேச அளவிலான தனியார் அமைப்பு உருவாக்கிய எழுத்துருக்களே பெருமளவில் இன்று பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தமிழ் ஒருங்குகுறியில் ஒலிக் குறைபாடுகள் இருப்பதாகவும், பகவத்கீதை, பஞ்சாங்கம், வேதமந்திரங்கள் ஆகியவற்றை அச்சிடுவதற்குரிய எழுத்துகள் போதுமானதாக இல்லை என்றும் கூறி க்ரந்த (வடமொழி) எழுத்துகளைத் தமிழ் ஒருங்குகுறியில் இணைக்கவேண்டும் என்று ஸ்ரீரமண சர்மா என்பவர் ஒருங்குகுறி அவையத்திற்கு (unicode consortium)முறையிட, அதனடிப்படையில் க்ரந்த எழுத்துகளைச் சேர்க்கும் முயற்சிகள் வேகம் பெற்றன. தமிழறிஞர்களின் விழிப்புணர்வாலும், அவர்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த ஆபத்தைக் கொண்டு சென்றதாலும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு தற்போது, தமிழில் க்ரந்த்த்தைத் திணிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் ஒருங்குகுறி அவையம் கூடும்போது, தமிழில் க்ரந்த எழுத்துகள் சேர்க்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுத்து நிறுத்திடும் முயற்சிகளில் தமிழறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மொழியின் தேவைக்கேற்ப புதிய ஒலிக்குறிகளைச் சேர்ப்பதில் என்ன தவறு என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இந்தி உள்ளிட்ட வடபுலத்து மொழிகளில் உள்ளதுபோல தமிழில் நான்கு வகையான ‘க, நான்கு வகையான ‘ச’ உள்ளிட்டவை இல்லை. எடுத்துக்காட்டாக, கம்பு என்பதில் உள்ள ‘க’வுக்கும், கடம் என்பதில் உள்ள ‘க’வுக்கும் ஒலி வேறுபாடு உண்டு. ஆனால், எழுத்தில் வேறுபாடு இல்லை. இதை ஒரு குறைபாடாகக் கருதி, க்ரந்த எழுத்துகளை ஒருங்குகுறியில் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொல்காப்பியர் வகுத்த தமிழ் இலக்கணப்படி, தமிழில் உள்ள எழுத்துகளைக் கொண்டே வேற்றுமொழியின் ஒலிகளைப் பயன்படுத்த முடியும். அத்துடன் ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ஆகிய 6 வடமொழி எழுத்துகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றது போலவே கணினியிலும் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேல் க்ரந்த எழுத்துகளைத் திணிப்பது தமிழ் மொழியின் சிதைவுக்கே வழிவகுக்கும் என அஞ்சுகிறார்கள் இலக்குவனார் திருவள்ளுவன் உள்ளிட்ட தமிழறிஞர்கள். தமிழ்க் கணினி வல்லுநரான மா.ஆண்ட்டோபீட்டர் உள்ளிட்டவர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள்.

ஒலிக்குறைபாடு என்பது தமிழ் மொழிக்கு மட்டுமே உரியதன்று. 26 எழுத்துகளை மட்டுமே கொண்டுள்ள ஆங்கிலத்தில் இந்தக் குறைபாடு மிக மிக அதிகம். எடுத்துக்காட்டாக, அன்பழகன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுது வேண்டுமானானல் ‘ழ’ என்ற எழுத்து அதில் கிடையாது. அதனால் ANBAZHAGAN என்ற எழுதுவார்கள். இதைப் படிப்பவர்கள் அன்பசகன் என உச்சரிக்கும் கொடுமையை ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் காணவும் கேட்கவும் முடிகிறது. ஓசை என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் ஊசை (OOSAI) என்றுதான் எழுதமுடியும். அங்கே ‘ஓ’ என்கிற நெடிலுக்குரிய எழுத்து கிடையாது. இந்தக் குறைபாடுகளுக்காக ஆங்கிலத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வரவில்லை.

தமிழின் சிறப்பு எழுத்துகளான எ, ஒ, ழ, ற, ன ஆகியவை பெரும்பாலான இந்திய மொழிகளில் இல்லை. தொல்காப்பியம் என்று இந்தியில் எழுதவேண்டுமானால் ‘தோல்காப்பியம்’ என்றுதான் எழுதியாகவேண்டும். அர்த்தமே ஆபாசமாகிவிடும். ஏனெனில், அங்கே ‘ஒ‘ என்ற குறில் கிடையாது. அதனால் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் குறைபாடு உடையவை என்று யாரும் கவலைப்பட்டு, தமிழின் சிறப்பு எழுத்துகளை அதில் திணிக்கவில்லை. ஆனால், தமிழில் மட்டும் க்ரந்த எழுத்துகளைத் திணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆபத்து குறித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கும் தமிழிறிஞர் முனைவர் பா.இறையரசன் அவர்கள் பல கருத்துகளை நம் முன் எடுத்து வைக்கிறார். “தமிழ் எழுத்துகள் இகர ஈகார எழுத்துகளிலும், உகர ஊகார எழுத்துகளிலும் குறியீடுகள் முறையாக இல்லை, இவற்றைச் சீர்மை / சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறினார்கள். அச்சிட்ட பழந்தமிழ் நூல்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. எழுத்து வடிவை மாற்றினால் அவற்றை இழக்க நேரும்; அத்துடன் நம் எழுத்துகளின் மரபையும் இழக்கக்கூடாது என்று கி.ஆ.பெ. விசுவநாதம், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் முதலிய தமிழறிஞர்கள் எதிர்த்தனர்.

“தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச்சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று. பொருள்களின் சிறப்புப்பெயர் (proper name)களே எழுத்துப் பெயர்ப்பிற்கும் (translitration) தற்பவத்திற்கும் இடமாகும். இதற்குப் பிற மொழி எழுத்துகள் வேண்டுவவல்ல. தமிழில் இயன்றதுணை எழுதுதல் தகும். ஏதேனுங் குறையிருப்பின் அது எல்லா மொழிகட்கும் பொதுவாகும். ” - என்று பாவாணர் (இலக்கணக்கட்டுரைகள், ப.98) கூறுவார். ஆங்கிலத்தில் ஒலிக்குறைபாடுகள் மிகுதி. இராமன் என்ற பெயரை ஆங்கிலத்தில் (Rama) எழுத்துகளில் எழுதி “ ரம, ரமா, ராம, ராமா, ரெம, ரெமா” எனப் பலவகையாக ஒலிக்கவில்லையா?

ஒருங்குகுறி மூலமாக சமற்கிருதத்தைப் புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற்றொலிகள் வராமல் காக்க வேண்டும். மலேசியக் கணினி அறிஞர் முத்து நெடுமாறன் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கிரந்த ஒலிகளை (க1, ச1... போல) குறிப்பிடலாம் என்பதால் ஒருங்குகுறியில் தனி எழுத்துகள் தேவையில்லை என்று நிறுவியுள்ளார்

எனவே தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளை திணிக்கக்கக் கூடாது. ”கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கிவந்த தமிழ் இனியும் அப்படியே தங்குதடை இன்றி இயங்கும். ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவை இல்லை. மொழி இயலார் பயன்படுத்தும் குறியீடுகளை (IPA – International Phonetic alphabets) பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக்காட்ட இயலும்.” என்று பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்துரைத்துள்ளார்.-என்று தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார் முனைவர் இறையரசன்.