Tuesday 2 April 2013

புலிகளை அழிக்க இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா சதித்திட்டம்!- விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

புலிகளை அழிக்க இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா சதித்திட்டம்!- விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் வலுவான நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் இலங்கையும் மேற்கொண்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது. கடற்புலிகளால் அரசாங்கத்தின் கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றை தொடர்ந்து அமெரிக்காவின் தூதுவராக அப்போது இருந்த ரொபர் ஓ பிளக் ராஜாங்க திணைக்களத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ளது.

இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படமுடியாத அளவில் மிகவும் வலிமையாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காணாமல் போனதாகவும் 4 பேரை விடுதலைப் புலிகள் சிறைபிடித்ததாகவும், அட்மிரல் சமரசிங்க தெரிவித்திருந்தமையையும் பிளெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தையும் அவர்களின் மீள் வலுவூட்டும் தளங்ளையும் அறிந்துக் கொள்ளக்கூடிய விசேட ரேடார் ஒன்றை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தமையையும் ரொபட் ஓ பிளெக் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ரேடாரை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்க அமெரிக்காவின் குழு ஒன்றும் இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் பிளெக் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகளை அழிப்பதற்கான புஸ்மாஸ்ட்டர் என்ற ஆயுதத்தை வழங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வொசிங்டளுக்கு அனுப்புமாறும் ரொபட் ஓ பிளெக் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடம் இந்தக்கடிதத்தில் கோரியிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.