Monday, 15 July 2013

முதல் உதவி என்றால் என்ன?

முதல் உதவி என்றால் என்ன?

காயம் அல்லது நோய் காரணமாக உடல் நலப் பாதிப்பு அடைந்த ஒருவருக்கு, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றுவதே முதல் உதவி. காயங்கள் மோசமான நிலையை அடையாமல் தடுப்பதும் முதல் உதவியே.

முதல் உதவி செய்யும்போது தவிர்க்க வேண்டியவை:

ஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றால், உடனடியாக அவரைச் சூழ்ந்துகொண்டு நிற்பது தவறு. காற்றோட்டத்திற்கு வழி செய்ய வேண்டும்.

ஒருவர் மயக்க நிலையை அடைந்துவிட்டால், அவருக்கு சோடா, தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. தண்ணீரானது உணவுக் குழாய்க்குப் பதில், மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து, அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகும்.

கை, கால்களில் ரத்தம் வந்துகொண்டு இருந்தால், ரத்தம் வரும் பகுதியை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்து, ஒரு துணியால் அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கட்ட வேண்டும். இதனால் ரத்தப்போக்கு குறையும்.

முதல் உதவியில் இருக்கும் அடிப்படை விஷயங்கள்:

முதலில், பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா என அவரின் இரண்டு பக்கத் தோள்களின் மீதும் தட்டிப் பரிசோதிக்க வேண்டும்.

மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். இதனால், பாதிப்பு அடைந்த நபரை உடனடியாகக் காப்பாற்றுவதுடன், உங்களுக்கு இருக்கும் மனப் பதட்டத்தையும் தணித்துக்கொள்ள முடியும்.

ஆம்புலன்ஸ் அல்லது அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொருத்து முதல் உதவி செய்வதற்கு முயற்சியுங்கள்.

ஆம்புலன்ஸ் உதவி மிக விரைவாகக் கிடைக்கும் என்றால், அவர்கள் வரும் வரை காத்திருங்கள். நேரம் ஆகும் என்றால் அல்லது நிலைமை மோசம் அடைந்தால், அவருக்கு 'கேப்' (CAB - C: CIRCULATION, A:AIRWAY, B:BREATHING) எனப்படும், அடிப்படை விஷயங்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அவை, ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

இந்த மூன்று சோதனைகளும் அடிப்படையானவை. எந்த வகையான பாதிப்பாக இருந்தாலும் இந்த மூன்று சோதனைகளையும் செய்த பின்னரே, முதல் உதவி செய்ய வேண்டும்.

எப்படிச் செய்ய வேண்டும்?

ரத்த ஓட்ட சோதனை:

பாதிப்பு அடைந்தவரை சம தளத்தில் படுக்கவைத்து அவரது குரல்வளையின் மத்தியில் இருந்து, வலது அல்லது இடதுபக்கமாக இரண்டு அங்குலம் அளவு தள்ளி இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பகுதியில், உங்களது இரண்டு விரல்களை வைத்தால், ரத்த ஓட்டம் இருப்பதை உணர முடியும்.

சுவாசப் பாதை சோதனை:

பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்கவைத்து அவர் நெற்றியின் மீது ஒரு கையை வைத்துக்கொண்டு மறு கையால் தாடையைச் சிறிது மேல் நோக்கி உயர்த்தவும். இதனால் சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் சீராகும்.

சுவாச சோதனை:

பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைத்து வாய் அருகே உங்களது காது மடல்களைக் கொண்டுசென்று, சுவாசத்திற்கு உரிய ஏதேனும் சத்தம் வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அதே சமயம், பாதிப்பு அடைந்தவரின் மார்பு ஏறி, இறங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

ஒருவேளை சுவாசம் இல்லை என்றால், சி.பி.ஆர் (Cardio-pulmonary Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.

சி.பி.ஆர். இதய சுவாசமூட்டல்:

பாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.

எப்படிச் செய்வது?

பாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு, இடது மார்புப் பகுதியில், நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும்.

மூன்று முறை அழுத்திய பிறகு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

அழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.

குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர வேண்டும்.

மீட்பு சுவாசம்:

பாதிப்பு அடைந்தவரைப் படுக்கவைத்துத் தாடையைச் சிறிது உயர்த்தி, அவரது மூக்கின் நுனிப்பகுதியை மூடி அழுத்திப் பிடித்துக்கொண்டு, அவரது வாயை நன்கு திறந்துகொள்ளவும்.

பிறகு உங்களது வாயை நன்கு திறந்து, காற்றை நன்கு உள் இழுத்துக்கொண்டு, அவரது வாயோடு வாய்வைத்து மூடி பிறகு உள் இழுத்த காற்றை வெளிவிடவும். இதனால் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் கிடைக்கும்.

மின்சாரம் தாக்கினால்...

பவர்கட் பிரச்னை இருந்தாலும், பவர் இல்லாமல் நம்மால் இருக்க முடிவது இல்லை. எங்கேயும், எதிலும் மின்சாரத்தின் தேவை என்பது நீக்கமறக் கலந்துவிட்டது. கரன்ட் ஷாக் வாங்காத நபர்கள் ஒருவர்கூட இருக்க மாட்டார். சிறிய அளவில் நாம் அனைவரும் ஷாக் வாங்கியிருப்போம்.

மின்சாரம் தாக்கியவர்களுக்கு முதலில் மின் இணைப்பைத் துண்டிப்பதே, நாம் செய்யும் முதல் உதவி.

மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக்கொண்டு இருந்தால், முதலில் 'மெயின் ஸ்விட்ச்'-ஐ அணைக்க வேண்டும்.

ஸ்விட்ச் எது எனக் கண்டறிய முடியவில்லை என்றால், மொத்த மின் இணைப்பையே துண்டிக்கலாம்.

அதுவும் முடியவில்லை என்றால், நன்கு உலர்ந்த மரக்கட்டை போன்ற மின் கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்தி, மின் கம்பியில் இருந்து அவரது கையை நகர்த்தி மின் ஓட்டத்தைத் தடை செய்யலாம்.

மின் கடத்தாப் பொருட்களைக்கொண்டு மின் ஓட்டத்தைத் தடைச் செய்யும்போது, அப்படிச் செய்கிறவர் கண்டிப்பாக ரப்பர் செருப்பு அல்லது ரப்பர் கையுறைகளை அணிந்து இருக்கவேண்டும்.

உலோகப் பொருட்களைக் கொண்டு மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது.

பிறகு பாதிக்கப்பட்டவரின் நாடித்துடிப்புப் பரிசோதனை, சுவாசப்பாதை சோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மின்சாரத்தால் கருகிப்போன உடல் பாகத்தைச் சுமார் 10 நிமிடங்கள் சுத்தமான ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். பின்னர் நீர் உறிஞ்சும் சுத்தமான துணியால் ஒன்றால் மூடிக் கட்ட வேண்டும்.

கழுத்துப் பகுதியைத் தொங்கவிடாமல், சீரான முறையில் முட்டுக்கொடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஷாக் அடிபட்டவருக்கு வெளிப்படையாகப் பாதிப்பு ஏதும் தெரியாமல் இருக்கலாம். மின்சாரம் நம் உடலில் பாயும்போது, உள் உறுப்புகளைப் பாதிக்கச் செய்யலாம். எனவே, டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இடி மின்னல் தாக்கல்

மின்சாரம் தாக்கினால் ஒருவருக்கு என்ன முதல் உதவி செய்யப்படுகிறதோ, அதேதான் மின்னலுக்கும்!

மின்னலில் காயம்பட்டால், முதல் உதவி செய்வதாக நினைத்து அவர்கள் மீது இங்க், டூத் பேஸ்ட், தோலில் தடவப்படும் மருந்து போன்றவற்றைச் சிலர் தடவுவார்கள். இதனால் காயத்தின் தன்மை அறிய முடியாமல் போய் சிகிச்சை தாமதம் ஆகக்கூடும். எனவே, மின்னலில் காயம் அடைந்தவரை அப்படியே மருத்துவமனைக்குக் கொண்டுவருவதுதான் அவருக்கு நாம் செய்யும் முதல் உதவி.

வெட்டவெளியில் மின்னல் தாக்காது. மின்னல் பாய அதற்கு ஒரு கடத்தி தேவை. எனவே, மழைக்கு மரத்தடியில் ஒதுங்க வேண்டாம்.

மழை பெய்யும்போது வெறும் காலுடன் நடக்க வேண்டாம். செருப்பு அணிந்து நடக்கும்போது பூமிக்கும் உங்களுக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்படுவதால், இடி உங்கள் மீது விழுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

குடை பிடிப்பவர்கள் குடையின் பிளாஸ்டிக் பகுதியை மட்டுமே பிடிக்க வேண்டும். இரும்பு பகுதியில் மின்னல் பாய வாய்ப்பு உள்ளது.

இடி மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

மாரடைப்பு ஏற்பட்டால்:

யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம்.

20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக்.

20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக்.

இதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம்.

மாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.


நீரில் மூழ்கியவர்களுக்கு:

தண்ணீரில் மூழ்கியவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து அவரது வயிற்றில் அழுத்தி தண்ணீரை உமிழ்வதுபோல சினிமாக்களில் காட்சி அமைப்பார்கள். இது தவறானது. தண்ணீரில் மூழ்கியவர் தண்ணீர் குடிக்கும்போது அது நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் நீரால் பாதிப்பு இல்லை. இதை அழுத்தி வெளியே எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.


நுரையீரலுக்குச் சென்ற தண்ணீரே உயிர் இழப்புக்குக் காரணம். நுரையீரலுக்குள் சென்ற தண்ணீரை வெளியேற்றும் சிகிச்சையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களால் மட்டுமே செய்ய முடியும்.

நீரில் மூழ்கியவருக்கு முதல் உதவி செய்யும்போது, அவரைத் தரையில் படுக்கவைத்து மூச்சு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். சுவாசம் இல்லை எனில், அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கலாம்.

தண்ணீரில் மூழ்கியவருக்கு மூச்சும் நாடித் துடிப்பும் இல்லை என்றால், இறந்துவிட்டார் என நீங்களாக முடிவுகட்டிவிட வேண்டாம்.

மயக்க நிலையில் இருப்பவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளித்து எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

காயங்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டவர்களுக்கு:

விபத்தில் காயம் அடைந்தவர்களைக் கையாளும்போது அதிகக் கவனம் தேவை. பதட்டத்தில் காயம் அடைந்தவரை நாம் தூக்கும்போது அதுவே எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடக்கூடும்.

காயம்பட்டவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவந்ததும், காயம் ஏற்பட்ட புண்ணில், மண் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் ஒட்டி இருக்கிறதா என்பதைப் பார்த்து, அவற்றைச் சுத்தமான, உலர்ந்த துணியைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

காயம் அடைந்த பகுதியைத் துணியைக்கொண்டு அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்தம் கட்டிக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

காயம் அடைந்தவரைப் படுக்கவைத்து, கை மற்றும் கால்களை இதய மட்டத்துக்கு மேல் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால், ஒரு துணியை எடுத்து, சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்து, முறிவு ஏற்பட்ட கையோடு ஒரு ஸ்கேலையோ அல்லது சுருட்டிய செய்தித்தாளையோ வைத்துக் கட்ட வேண்டும்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், முறிவு ஏற்பட்ட காலுடன் இன்னொரு காலையும் சேர்த்து ஆங்காங்கே கட்ட வேண்டும்.

இதைத் தவிர நாமாகவே முறிந்த எலும்புகளைச் சேர்க்க நினைக்கவோ, எலும்பின் நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லவோ முயற்சிக்கக் கூடாது. இதனால் பாதிப்புகள் அதிகரிக்க நேரிடலாம்.

மயக்கம் அடைந்தவர்களுக்கு:

நம் மூளை செயல்பட ஆக்சிஜனும் குளுகோஸும் தேவை. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் குளுகோஸை ரத்தம் கொண்டுசெல்கிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காதபோது மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. தற்காலிக மயக்கத்துக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, நீர் இழப்பு போன்றவை முக்கியக் காரணங்கள். அதிகப் பயம், அழுகை, வெயிலில் நிற்பது போன்றவையும் மயக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக மயக்கம் தானாகவே சில நிமிடங்களில் சரியாகிவிடும்.



மயக்கம் அடைந்தவரை தரையில் மெதுவாகப் படுக்கவைத்து, கால்களை ஒரு அடிக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

அவருக்கு நன்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

கழுத்து வளையாமலும் திரும்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சுவாசத் தடை இல்லாமல் காப்பாற்ற முடியும்.

இறுக்கமான ஆடை அணிந்திருந்தால், அவற்றை சற்றுத் தளர்த்த வேண்டும். குடிப்பதற்கு எதையும் கொடுக்க வேண்டாம்.

அதன் பிறகும் அவர் எழவில்லை எனில், 'கேப்' என்ற அடிப்படையைப் பாருங்கள். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.

மயக்கமானவர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், அவரை உடனடியாக எழுந்து நிற்க அனுமதிக்கக் கூடாது. திரும்பவும் மயக்கம் அடைந்து கீழே விழ நேரிடலாம்.

ஐந்து நிமிடங்கள் வரை படுக்கவைத்து, அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் வரை உட்கார்ந்து இருக்கச்செய்து, அதன் பிறகே எழுந்து நிற்க வைக்க வேண்டும்.

நீரிழப்பு ஏற்பட்டால்:

வருவது கோடைக்காலம். இந்தக் காலத்தில் வெயிலில் அலைபவர்கள் திடீரென மயக்கம்போட்டு விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடலில் போதுமான அளவு நீர்ச் சத்து இல்லாமல்போவதே காரணம். வயிற்றுப்போக்கு ஏற்படும்போதும் நம் உடலில் நீர் இழப்பு ஏற்படும்.

நீரேற்றம் (ரீஹைட்ரேஷன்) உங்கள் உயிரைக் காப்பாற்றும்.



அதற்காக லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துதல் கூடாது. நம் உடலில் நீரிழப்பு ஏற்படும்போது, அதனுடன் அத்யாவசியத் தாது உப்புக்களும் வெளியேறிவிடுகின்றன.

நீர் இழப்பு அறிகுறி தென்பட்டதும், உடனடியாக, சர்க்கரை, உப்பு நீர்க் கரைசலை அளிக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் எட்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் உப்பு என்ற அளவில் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.

எவ்வளவு சீக்கிரம் நீரிழப்பை சரிசெய்கிறோமோ, அந்த அளவுக்கு உயிர் இழப்பைத் தவிர்க்கலாம்.

தவிர, இளநீர் கொடுக்கலாம். இளநீரில் அதிக அளவில் எலக்ட்ரோலெட் உள்ளது.

பாக்கெட்டில் விற்கப்படும் எலெக்ட்ரோலெட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுப்பதன் மூலம் நீர்ப்பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு:

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு, 'ஹெய்ம்லீக் மேன்யூவர்' எனும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.

மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.



அந்த நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், நிவாரணம் கிடைக்கும்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?

குழந்தைகள் காசு, பட்டாணி என கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து, ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் ஓங்கித் தட்ட வேண்டும்.

இப்படிச் சில முறைகள் தட்டினால், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.

பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.

தீக்காயம் அடைந்தவர்களுக்கு:

வீடுகளில் சமைக்கும்போது, கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கை தவறி உடம்பில் பட்டுவிட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் கட்டிகளை வைப்பதும் ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் காயத்தின் மீது மெள்ள ஊற்றுவதும் வலி- எரிச்சலைக் குறைக்கும்.

அதன் பிறகு 'சில்வரெக்ஸ் ஆயின்மென்ட்' தடவி பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீ பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்றும்போது தோல் குளிர்ச்சியடைந்து திசுக்கள் சேதமடைவது குறைக்கப்படுகிறது.

கம்பளி, ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகள் கொண்டு பாதிக்கப்பட்டவரைப் போர்த்தித் தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்க முயற்சியுங்கள். தண்ணீர் இல்லை, வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலையில் கம்பளி, ஜமக்காளத்தைப் பயன்படுத்தலாம்.

தீயை அணைத்த பிறகு, தீக்காயங்களின் மீதும், தீக்காயமுற்றவர் மீதும் நம் இஷ்டத்துக்குக் கைகளை வைக்கக் கூடாது. தோல் நழுவிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் செல்பவர்களே பல நேரங்களில் தீ விபத்துகளில் சிக்கிக்கொள்வது உண்டு. எனவே காப்பாற்றச் செல்பவர் தன்னுடைய முன்புறத்தில் பாதுகாப்பாக ஜமக்காளத்தை நன்றாக விரித்துப் பிடித்துக்கொண்டே பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும்.

தூக்குப்போட்டுத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு:

சாதாரண மன உளைச்சலைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்குப் போட்டுக்கொள்பவர்களைப் பற்றி தினந்தோறும் படிக்கிறோம். இப்படி யாரேனும் முயற்சித்தால் நான்கு நிமிடங்களுக்கு உள்ளாக, அவர்களைக் காப்பாற்றி சிகிச்சை அளித்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

முதலில், தூக்கு மாட்டியவரைத் தாங்கிப்பிடித்து மேலே தூக்க வேண்டும். இதனால், தூக்குக் கயிறானது தளர்ந்து அவரது கழுத்தை இறுக்காது. உடனடியாக மற்றொருவர் மேலே ஏறித் தூக்குக் கழுத்தில் இருந்து தூக்குக் கயிற்றை அகற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரின் கழுத்துப் பகுதியானது எந்த ஒரு பக்கத்திலும் சாய்ந்துவிடாதவாறு பிடித்துக்கொண்டே கீழே இறக்க வேண்டும். கயிறு இறுக்கியதில் கழுத்தில் உள்ள எலும்பு உடைந்து சிறுமூளையில் குத்துவதால்தான் உடனடி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காகவே இப்படிச் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரை படுக்கவைத்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

ஒருவேளை தூக்கில் தொங்கிய நபர் நினைவு இழந்த நிலையில், நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால், அவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பதோ, தண்ணீர் குடிக்கக் கொடுப்பதோ கூடாது.

வாயோடு வாய் வைத்துக் காற்றை ஊதுவது, மார்பில் அழுத்துவது போன்ற 'சிஆர்பி' வகை முதல் உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.

மணிக்கட்டுப் பகுதியில் ரத்தக் குழாயைத் துண்டித்துக் கொள்பவர்களுக்கு:



கை மணிக்கட்டு ரத்தக் குழாயைத் துண்டித்திருப்பவரைக் கண்டால், உடனடியாகக் கயிறு அல்லது துணியினால் மணிக்கட்டுப் பகுதியில் அழுத்தமான கட்டுப் போட்டு கையை மேலே தூக்கி நிறுத்திய நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

விஷம் அருந்தியவர்களுக்கு:

எலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால், விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும். விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு, உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும்.

விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம்.

வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

விஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால், அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.

பாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப்பகுதியைத் தாழ்வாகவும் இருக்கும்படி படுக்கவைக்க வேண்டும். தலையை ஒருபக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக்கொண்டு, அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.

மருத்துமனைக்குக் கொண்டு செல்லும்போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால், அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதை மறக்க வேண்டாம்.

பாம்பு கடித்தவர்களுக்கு:

கிராமப்புறங்களில் பாம்புக்கடி என்பது சாதாரணமாக நிகழக்கூடியது. ஆனால், முதல் உதவி பற்றித் தெரியாததால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

பாம்பு கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும்.

காயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணிகளைக் கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும்.

காயத்தின் மீது மஞ்சள் போன்றப் பொருட்களைப் பூசக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறியவும் கத்தியால் கீறவும் கூடாது.

தேள், பூரான் போன்ற விஷக்கடி ஏற்பட்டவர்களுக்கு:

முதலில் கடிபட்ட இடத்தை நன்கு கழுவி, கொட்டுப்பட்ட இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பதுதான் சிறந்த முதல் உதவி.

வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள்:

டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன்கள் என வீடு முழுக்க நிறைந்துகிடக்கும் பொருட்கள் அதிகம். ஆனால், உயிர் காக்கும் முதல் உதவிப் பொருட்கள் ஏதேனும் நம் வீட்டில் இருக்கிறதா? இதோ அத்தியாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள். வீட்டில் மட்டும் அல்ல, வாகனங்களிலும் இதை வைத்திருக்கலாம்.

கிருமிநாசினி (Antiseptic liquid): தினசரி வாழ்க்கையில் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, கை கழுவும்போது கிருமிநாசினி பயன்படுத்தலாம். உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கிருமிநாசினி பயன்படுத்திக் காயத்தைச் சுத்தப்படுத்துவது பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றுகள் வராமல் தடுக்கும். இதேபோல் டிங்சர் வைத்திருப்பதும் முக்கியம்.

பாராசெட்டமால் மாத்திரை (Antiseptic liquid):பொதுவாக நாம் பயன்படுத்திவரும் வலி நிவாரண மாத்திரை இது. டாக்டரைச் சந்திக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலைகளில் ஏற்படும் காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு நிவாரணம் அளிக்க பாராசெட்டமால் மாத்திரைகள் தேவைப்படும். இது தற்காலிக நிவாரணிதான். நோயின் தன்மையைப் பொருத்து டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

க்ரிப் பாண்டேஜ் (Crepe bandage) வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்தப் பயன்படும். காயம்பட்டு வீக்கம் ஏற்பட்டால், அந்த வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தைக் குணப்படுத்த, இந்த க்ரிப் பேண்டேஜ் (Crepe bandage) உதவும். காயம்பட்ட இடத்தைச் சுத்தம் செய்து, மருந்து போட்டவுடன் கட்டுப் போடவும் பயன்படும்.

தெர்மாமீட்டர் (Clnical thermometer) - காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலையைக் கண்டறியப் பயன்படும். கண்ணாடியினால் செய்யப்பட்ட தெர்மாமீட்டரைக் குழந்தைகள் கடித்துவிட வாய்ப்பு அதிகம். அதனால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் எலக்ட்ரானிக் தெர்மாமீட்டர் வாங்குவதே சிறந்தது.

அடிசிவ் டேப்(Adesive tape) - காயம்பட்ட இடத்தில், கட்டுப் போட முடியாதபட்சத்தில், இந்த டேப் பயன்படும். பேப்பர் பிளாஸ்டர் என்றும் இதைச் சொல்வார்கள்.

பருத்தி பஞ்சு (Cotton wool) - காயம்பட்ட இடத்தைப் பஞ்சின் மூலம் சுத்தம் செய்வதே சிறந்தது. காயம்பட்ட இடத்தில் இருக்கும் மண், தூசிகள் படிவதைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல், வேறு ஏதேனும் துணிகள் மூலம் சுத்தப்படுத்துவதைத் தவிர்ப்பதும் அவசியம். எனவே, சுகாதாரம் நிறைந்த சுத்தமான பஞ்சினால் மட்டுமே காயத்தை சுத்தம் செய்யவேண்டும். 'அப்சார்பென்ட் காட்டன் உல்' (Absorbent cotton wool) ரத்தத்தையோ, மருந்தையோ உறிஞ்சும் தன்மை கொண்ட சுத்தமான பஞ்சு.

ஆஸ்பிரின் மாத்திரை (Aspirin Tablet) தலைவலி மற்றும் இதர உடல் வலிகளுக்கான நிவாரணியாகச் செயல்படுவதோடு, ரத்தம் உறைதலைத் தவிர்த்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது ஆஸ்பிரின். இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கும்பட்சத்தில் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிமிடத்தில் ஆஸ்பிரின் சிறந்த முதல் உதவியாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வதே நல்லது. நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதைத் தவறுதலாக, நெஞ்சு வலி என நினைத்து ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், பக்கவாதம், ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தம் உறைவதில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரினைப் பயன்படுத்தக் கூடாது.

ஆன்டிபயாட்டிக் க்ரீம் (Antibiotic cream)- காயங்களைக் குணப்படுத்த முதல் உதவியாக இந்த க்ரீமைப் பயன்படுத்தலாம்.

ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மருந்து (Anti - inflammatory ointment) - உடல்வலி, முதுகுவலி, சுளுக்கு போன்றவற்றுக்கு நிவாரணமாகப் பயன்படும் ஆயின்ட்மென்ட். இவை அடிக்கடி வரும் உடல் உபாதைகள் என்பதால், வீட்டில் இருப்பது நல்லது.

கத்தரிக்கோல் - கட்டுப் போட வேண்டிய பஞ்சு, பேண்டேஜ் போன்றவைகளை வெட்டியெடுக்க பிரத்யேகமாக, சுகாதாரமாக ஒரு கத்தரிக்கோல் இருப்பது நல்லது.