Tuesday, 9 July 2013

அம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள் :-

அம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள் :-
(சித்த மருத்துவத்தின் பங்கு)

1. சின்னம்மை (Chikenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.

நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

தடுப்பு மருந்து

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

தட்டம்மை

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

புட்டாளம்மை

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

உமியம்மை

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி

நோய் தடுப்பு மருந்து குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சித்த மருத்துவத்தின் பங்கு

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.