Wednesday 12 September 2018

நவீனகால ஆண்கள் சுமக்கும் பொருளாதாரச் சுமை

நவீனகால ஆண்கள் சுமக்கும்
பொருளாதாரச் சுமையின் கணம்
மிகக் கொடியதே.
நாள் ஒன்றுக்கு 100 கிலோமீட்டர் டூ வீலர் ஓட்டி டெலிவரி மேன்களாக வேலை செய்யும் இளைஞர்கள் எல்லாம் யார்?
காலை 10 மணிக்கு அலுவலகத்தில் நுழைந்தால்,
இரவு 8 மணி வரை கணினித் திரை முன் கண்களை அகற்றாமல் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் யார்?
தங்கள் இளமையை அடகு வைத்து வெளிநாடுகளில் உழைத்துக் கொட்டும் இளைஞர் கூட்டம் யார்?
எதற்காக இவர்கள் உழைக்கும் இயந்திரங்களாக மாறிப் போயுள்ளனர்?

ஏனெனில்,
குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சுமை அவர்களின் முதுகில் இருக்கிறது.
அவர்கள், அழாமல் இருக்கலாம்;
வலிக்காதது போல நடிக்கலாம்.
ஆனால், அது அவர்களின் பெருந்தன்மை.  உண்மையில் 30 வயதையொட்டியுள்ள ஓர் ஆண், தன் சக்திக்கு மீறிய பொருளாதாரச் சுமையைச் சுமக்கிறான்.
பொறுப்புடன் ஓர் ஆண் இருந்தால்,
இந்தச் சுமைகளிலிருந்து தப்பவே முடியாது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘வேலைதான் கன்ஃபர்ம் ஆகிடுச்சே’ என்ற நம்பிக்கையில் வாங்கிய டூ-வீலருக்கு
இன்னும் தவணை முடிந்திருக்காது. தங்கையின் திருமணக்கடன் ஓரிரு லட்சங்கள் மீதம் இருக்கும்.
 `மாதச் சம்பளக்காரன். வாழ்க்கையை ஓட்டிவிடலாம்’ என்ற நம்பிக்கையில்
தன்னைத் திருமணம் செய்து கொண்ட மனைவியின் விருப்பங்களை
ஓரளவுக்கேனும் நிறைவேற்றியாக வேண்டும். ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சிக்கும் புதுத்துணி என்று இல்லாவிட்டாலும்,
விழா நாள்களில் புத்தாடை என்பது பேராசை அல்ல.

குளிர்சாதனப்பெட்டி,
தொலைக்காட்சிப் பெட்டி,
அமர்வதற்கு சோபா,
கொடுங் கோடையைச் சமாளிக்க ஏ.சி...
என ஒரு நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை. குழந்தைகள் தவழும் வீட்டில் இந்தச் செலவுகள் இரட்டிப்பாகும். எதையும் தவிர்ப்பதற்கில்லை. `வளர்ற குழந்தைக்கு எதைப் போட்டாலும் ரெண்டு மாசத்துல பத்தாமப்போயிடும்.

குடும்பம் என்பது, எவ்வளவு தின்றாலும் செரித்துக்கொண்டே இருக்கும் விநோதமான மிருகம்.
அதன் வயிற்றில் எப்போதும் பூர்த்தி யடையாத பெரும்பசியின் தீ, கனன்று எரிகிறது.
இதற்கு உணவிடுவதற்காக ஆண்கள்
ஆயுள் முழுவதும் ஓடி ஓடிக் களைத்துப்போகின்றனர்.
வேலையின் களைப்பில் இன்னதென்று விவரிக்க இயலாத எரிச்சலும் கடுப்பும் அவ்வப்போது சூழும். ‘நாலு நாள் லீவு போட்டுட்டு எங்கேயாவது போகணும்’ என்று நான்கு நாள்களுக்கு ஒருமுறை தோன்றத்தான் செய்யும்.
ஆனால், பணத்துக்கு எங்கே போவது?

அகால விபத்துகளில் நண்பர்கள் உயிரிழக்கும்போது,
ஓரிரு நாள்கள் மனம் அலைபாயும். பார்க்கும் வேலை மீதான அவநம்பிக்கையும் பற்றற்ற மனநிலையும் வந்து வந்து போகும்.
‘எதற்காக இந்த வேலை?
யாருக்காக இப்படி பொழுதெல்லாம் இங்கே கிடந்து சாகுறோம்?
நமக்குச் சொந்தமானது என ஒருநாளும் இல்லையா?
நினைத்ததைச் செய்து வாழவே முடியாதா?’ என்றெல்லாம் சிந்திப்போம்.
ஆனால், அந்த வேலை தரும் வருமானம் இல்லையென்றால்,
அடுத்த மாதத்தை ஓட்ட முடியாது என்பது கண் முன்னால் இருக்கும் நிஜம்.

-ஆனந்தவிகடன்


Best regards,