Saturday, 15 September 2018

ஆண்களே பதில் இருக்கிறாதா உங்களிடம்?

ஆண்களே பதில் இருக்கிறாதா உங்களிடம்?
சமைந்த பெண்ணின் அந்த நேரக் கலவர முகத்தை நீங்கள் காண நேர்ந்ததுண்டா?
சடங்கு தினத்தில் சந்தனத்தையும் மீறிக் கன்னங்கள் குங்கும நிறமடையும் ரசாயன மாற்றத்தை வியந்ததுண்டா?
சிறுமிக்கும் மனுஷிக்கும் அந்தக் குழந்தை சில நாட்கள் தடுமாறுவதை உணர முடிந்ததுண்டா?
கொஞ்சம் கொஞ்சமாக அவளில் பெண்வாசம் குடியேறுவது கண்டு பெருமைப்பட்டதுண்டா?
அக்காக்களின் கவலைகளைப் பற்றி, தங்கைகளின் பயங்களைப் பற்றி என்றேனும் யோசித்ததுண்டா?
கல்யாண நாள்வரை ஒரு கண்ணாடிப் பாத்திரம்போல அவள் தன்னைக் கையாள்வதைக் கவனித்ததுண்டா?
கர்ப்பிணியின் கணவனாக ஒரு பெண்ணின் அருகில் உறங்க வாய்த்ததுண்டா? தூக்க மத்தியில் அவளின் வலியொலியில் பதறி விழித்து, விழிக்கவைத்து விசாரித்ததுண்டா?
ஒரு சுலபப் புன்னகையில் அவள் சமாதானப் படுத்தும்போது, வெட்கத்தில் தன்னைக் குழந்தையாகவும், அவளைத் தாயாகவும் உணர்ந்ததுண்டா?
ஆஸ்பத்திரி வார்டில், அவளின் வலிப் பிளிரல் கேட்டு காமம் நொறுங்கிக் கண் கலங்கியதுண்டா?
ஜில்லிட்ட கைப்பிடித்து குழந்தையைச் சிலாகித்து, அவளில் ரோஜா நெற்றியில் நரம்புகளின் முறுக்கலற்ற முதல் ‘குளிர் முத்தம்’ இட்ட அனுபவம் உண்டா?
குழந்தைக்குப் பாலூட்டும் தருணத்தில் அதன் தாயின் முகத்தை ரசித்ததுண்டா?
முதிர்கன்னியின் வெள்ளை முடிகளைக் கண்டு மனம் கருத்ததுண்டா?
முதுமைக்கு ஏங்கிய இளம் விதவையின் உணர்வுகள் பரிந்து அழுததுண்டா?
குழந்தையற்றவள் ஒவ்வொரு மாதமும் வடிக்கும் ரத்தக்கண்ணீரைப் பார்த்ததுண்டா?
மழலை செத்தவளின் மார்பில் பாறாங்கல் போன்று பால் இறுகுமென்பதைக் கேள்விப்பட்டதுண்டா? அவளின் கண்ணீரில் பால் வாசம் கண்டதுண்டா?
நரைத்த கிழவியும் தனது தளர்ந்த மார்பு மறைக்கும் அக்கறை கண்டு ஆச்சர்யப்பட்டதுண்டா?
அம்மா உங்களைப் பிரசவித்த அந்த நேரத்து வலியை அப்புறம் எப்போதாவது அவளிடம் விசாரிக்கத் தோன்றியதுண்டா?
இன்னும்… இன்னும்… உள்ளுக்குள் பொங்கிப் பெருகும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் கேட்கலாம்.
ஆனால் பதில் இருக்கிறதா ஆண்களே உங்களிடம்??


Best regards,