Thursday, 13 September 2018

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !
🌟 முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். விநாயகர் அனைவராலும் போற்றப்படும் கடவுள். விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது விநாயகர் சதுர்த்தி விரதம். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் பெயர் காரணம் :
🌟 'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள்.
🌟 'நாயகர்" என்றால் தலைவர் எனப் பொருள்.
🌟 இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
கணபதி :
🌟 'க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது.
🌟 'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது.
🌟 'பதி" என்னும் பதம் தலைவன் எனப் பொருள் படுகிறது.
விநாயகர் வடிவ விளக்கம் :
🌟 யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.
நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள் என நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம்.
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா
எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம்
பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம்.
அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைம் ஏற்றுக் கொள்கிறார் . தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்
பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு.
காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும்.
விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது 3, 5, 7- ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்
விரதத்தால் பலன் அடைந்தவர்கள் :
தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து உயர்ந்த நிலையை அடைந்தனர். சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைபிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைபிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறுகள் விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
கணபதிக்கு பிரியமானவை!
கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு? ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்- 5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.
அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.
இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.
நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

🕉🕉ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ🕉🕉

Best regards,