Friday 16 November 2018

ரபேல் ஒப்பந்ததாரரை தெரியாது என்று எப்படி சொல்கிறீர்கள்...?

ரபேல் ஒப்பந்ததாரரை தெரியாது என்று எப்படி சொல்கிறீர்கள்...?
இதுதான் நாட்டுப் பாதுகாப்பு மீதான அக்கறையா?
________

மோடி அரசை விளாசியெடுத்தார் நீதிபதி கே.எம்.ஜோசப்
----------------------------------------

ஒப்பந்ததாரர் யார்? என்பதைக் கூட பார்க்காமல் விமானம் கொள்முதல் செய்வது தான், நாட்டின் பாதுகாப்பு மீது காட்டப்படும் அக்கறையா...? என்று மத்திய பாஜக அரசை, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் சாடியுள்ளார்.
ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், எம்.எல். ஷர்மா மற்றும் வினீத் தண்டா உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னிஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது, இந்தியாவிற்கு ரபேல் விமானங்களை வழங்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரரை யார் தேர்வு செய்தது...? இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கு பதிலாக, வேறொரு நிறுவனம் (ரிலையன்ஸ்) எப்படி தேர்வு செய்யப்பட்டது...? என்று நீதிபதி கே.எம்.ஜோசப் கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்,
“டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தங்களுக்குத் தெரியாது” என்று கூறினார். அதாவது டஸ்ஸால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்றார். இதனால், ஆவேசமடைந்த நீதிபதி கே.எம். ஜோசப், “என்ன பதில் இது...?இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய கேள்விக்கு, இப்படியா பதில் சொல்வது?பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபடப் போகும் பங்குதாரர் யார் என்பதைக் கூட தெரியாமல்தான் விமானம் வாங்குவீர்களா...? மக்கள் மீதும், இந்தியாவின் பாதுகாப்பு மீதும் உங்களுக்கு அக்கறை இல்லையா? இதுதான் இந்திய பாதுகாப்பிற்கும் பாதுகாப்புத்துறைக்கும் நீங்கள் அளிக்கும் மரியாதையா...? என்று சாட்டையை எடுத்து விளாசினார். மேலும், “ரபேல் ஒப்பந்த விதிகளை மாற்றியது யார், எதன் அடிப்படையில் இதை மாற்றினீர்கள்...? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “ஏற்கெனவே இருந்த விதிகள்தான் இதிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது” என்ற வேணுகோபால், “கார்கில் போரில் இந்தியா பல வீரர்களை இழந்தது; இந்த விமானம் இருந்திருந்தால் கார்கில் போரை வென்று இருக்கலாம்” என்று சம்பந்தமில்லாமல் பேசத்துவங்கினார். இதையடுத்து, “கார்கில் போர்நடந்தது எப்போது; இந்த ஒப்பந்தம் போடப்பட்டது எப்போது?ஏன் அதைப் பற்றி இங்கு பேசுகிறீர்கள்?” என்று கோபமடைந்த நீதிபதி ஜோசப், “ஏற்கெனவே ஒரு ஒப்பந்தம் நிலுவையில் இருந்தபோது, 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி, புதிதாக ஒரு ஒப்பந்தத்தை போட அவசியம் என்ன...?” என்றும் பிடியை இறுக்கினார். நீதிபதி கே.எம். ஜோசப்பின் இந்த கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் சரியான பதிலைச் சொல்ல முடியாத அட்டர்னி ஜெனரல், பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

Best regards,