Monday, 5 November 2018

....ஆசிரியர்களை போற்றுங்கள்!

....ஆசிரியர்களை போற்றுங்கள்!

ஒரு காலம் இருந்தது பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களை தெய்வமென போற்றினார்கள்; கொண்டாடினார்கள். அவர்களை முழுமையாக நம்பியே தமது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பினார்கள் பெற்றோர்கள்; மாணவர்களும் ஒரு பயபக்தியோடு ஆசிரியர்களை அணுகினார்கள்.

இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. ஆசிரியர்களை புழுவை விட கேவலமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள் தனியார் கல்வி தந்தைகள். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களை மாணவர்களும் சாதாரணமாக எண்ணுகிறார்கள்; அலட்சியமாக பார்க்கிறார்கள்.

இது சமூகத்திற்கு நல்லதன்று. இன்று தமிழ் சமூகத்தில் இதுவொரு பெருநோயாக வளர்ந்து வருகிறது. இதனைத் தொடங்கி வைத்தது தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தான். ஆசிரியர்களை நேர்முகத் தேர்வு வைத்தது தேர்வு செய்துவிட்டு மீண்டும் அவர்களின் வகுப்பில் உள்ள மாணவ/ மாணவிகளிடம் கருத்துக் கேட்கிறேன் (feedback) என்ற பேரில் ஒரு இழிவான வேலையை பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் செய்கிறார்கள்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் கொடுத்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது; இன்று ஆசிரியர் எப்படி பாடம் நடத்துகிறார் என்று மாணவர்கள் தான் மதிப்பெண் போடுகிறார்கள். விளைவு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் என்ற உளவியலுக்குள் தள்ளப்பட்டு ஆசிரியர்கள் மீதான பயபக்தியை இழக்கிறான்.

மாணவன்தான் மதிப்பெண் கொடுக்க வேண்டுமெனில் ஆசிரியரின் படிப்பிற்கு என்ன மரியாதை?
பிறகு எதற்கு நிர்வாகம் ஒரு நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும்?

இன்று பொதுவாகவே ஆசிரியர்கள் பாடம் மட்டும் நடத்துவதில்லை. தனியார் நிறுவனங்கள் கொடுக்கின்ற அடிமாட்டு சம்பளத்திற்கு மேலாக ஏராளமான எடுபுடி வேலைகளையும் சேரந்துதான் செய்கிறார்கள். இந்த சூழலில் அவர்கள் எப்படி பாடம் நடத்த முன் தயாரிப்புகளில் ஈடுபடுவார்கள்? முன் தயாரிப்பு இல்லாமல் பாடம் நடத்துவதால்தான் இங்கு தரமான மாணவர்களும் உருவாகவில்லை; தரமான ஆசிரியர்களும் உருவாகவில்லை.

பள்ளி கல்லூரிகளில் வேலை முடிந்து வீடு சென்றாலும் எடுப்பு மற்றும் துடுப்பு வேலைகளையும் கையோடு கொண்டு சென்றால்தான் நிர்வாகம் மதிக்கும் என்ற சூழல் இருப்பதால் ஆசிரியர்கள் இன்னும் இன்னும் தரம் குறைந்து கொண்டேதான் செல்கிறார்கள்.

அவர்கள் அப்படி நடந்து கொள்வதற்கும் ஒரு காரணம் உண்டு. ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் எவ்வளவு தரக்குறைவாக நடத்த முடியுமோ அவ்வளவும் செய்கிறார்கள் தனியார் நிர்வாகத்தினர். அவர்கள் வீட்டு தோட்டங்களில் பண்ணையம் அடிக்க வந்தவனை அடிமைபோல நடத்துவார்களே அப்படி நடத்துகிறார்கள். அதனை சகித்துக் கொள்ளாமல் போனால் உடனே வேலைவிட்டு துரத்திவிடுவார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு கல்லூரி தாளாளர்..
 'சோற்றை கூரையில் வீசினால் ஆயிரம் காக்கா வரும்..
எங்களின் கட்டுபாடுகளுக்கு ஒத்துபோனால் பணி செய்யுங்கள் இல்லையேல் தொரத்திவிடுவேன்...' என்று பேராசிரியர்களை மிரட்டுவார்.

வேலையை தக்கவைக்க வேறுவழி இல்லாமல் எல்லாவற்றுக்கும் 'ஆமாம் சாமி' போட்டே.. இங்கு பல படித்த பட்டதாரிகளின் வாழவும் மரண வேதனையோடு நகருகிறது.

அந்த ஆசிரியனும் ஒரு இரத்தமும் சதையும் உள்ள மனிதன் தான். அவனுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்; அவனுக்கும் குடும்பம் இருக்கும்; அவனுக்கு ஓய்வு தேவைப்படும் என்ற எந்தவிதமான புரிதலும் நிர்வாகங்களுக்கும் இல்லை; மாணவர்களுக்கும் இல்லை. இன்று மொத்தமாகவே ஆசிரியர் என்பவன் எல்லோரும் காட்சி பொருள்; காமடி பொருள்.

பணிப்பாதுகாப்பு என்ற ஒன்றே தனியார் பள்ளி கல்லூரிகளில் இன்று இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் எவ்வளவு சிறந்த ஆசிரியராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார். ஏனெனில் அவரது சம்பளம் உயர்வாக இருப்பதை நிர்வாகம் விரும்புவது இல்லை.

இத்தகைய நெருக்கடிகளுக்கு இடையே எப்படி ஒரு ஆசியரியரோ பேராசிரியரோ சிறந்த முறையில் பாடம் நடத்த முடியும்? எப்படி தலைச்சிறந்த மாணவர்கள் உருவாக முடியும்?
எப்படி சிறந்த சமூகம் மலரும்?

உலகின் வளர்ந்த வல்லரசு நாடுகளில் எல்லாம் ஆசிரியர்கள் தான் கல்வி சார்ந்த நடைமுறை குறித்த எல்லா முடிவுகளையும் எடுப்பார்கள். அதில் நிர்வாகம் ஒருபோதும் தலையிடாது.
இன்று என்ன பாடம் எடுக்க வேண்டுமென தீர்மானிக்கிறார்கள்; மாணவன் எப்பொழுது எந்த நேரத்திற்கு எந்த வகுப்பறைக்கு வர வேண்டும்; எப்பொழுது எந்த தேர்வை எழுத வேண்டும்; மாணவரோ/பெற்றோரோ ஆசிரியரை எப்பொழுது சந்திக்கலாம் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் தான் முடிவெடுப்பார்கள்.

எல்லா வல்லரசு நாடுகளிலும் ஆசிரியர்களை கொண்டாடுகிறார்கள். ஒரு நல்ல மனித சமூகம் மலர முதலில் ஒரு நல்ல ஆசிரியர் சமூகம் இருக்க வேண்டும்...

ஆசிரியரை ஆசிரியர் தினத்தில் மட்டும் கொண்டாடினால் போதாது...
தினம் தினம் கொண்டாட வேண்டும் ஏனெனில் எதிர்கால தலைமுறையின் விதியை தீர்மானிக்கும் பிரம்மாக்கள் ஆசிரியர்கள் என்பதை உணருங்கள்...!

#பேராசிரியர் ....

Best regards,