Thursday, 10 March 2016

சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கருப்பு பண புழக்கத்தை கண்காணிக்க 30 பார்வையாளர்கள் நியமனம்

சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கருப்பு பண புழக்கத்தை கண்காணிக்க 30 பார்வையாளர்கள் நியமனம்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. அந்தவகையில், தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அந்த பணிக்காக, வருமான வரித்துறையில் பணியாற்றும் 30 இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரிகள் பெயர் அடங்கிய பட்டியலை தேர்தல் கமிஷனிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒப்படைத்துள்ளது.
அந்த அதிகாரிகள், மாற்றுப்பணியாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களை மத்திய பார்வையாளர்களாக 5 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
அவர்களின் பணி குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:-
மேற்கண்ட 30 அதிகாரிகளுக்கும் தேர்தலில் கருப்பு பண நடமாட்டத்தை கண்காணிப்பதே முக்கிய பணியாக இருக்கும். ஓட்டுப்போட பணம் கொடுப்பதையும் கண்காணிப்பார்கள். இதன்மூலம், வாக்காளர்கள் திசைதிருப்பப்படாமல், நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வார்கள்.
தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். அந்த அறையுடன், 30 பார்வையாளர்களும் தொடர்பில் இருப்பார்கள்.
ஒவ்வொரு தொகுதியிலும், பெருமளவில் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுவதை நிதி புலனாய்வு பிரிவு கண்காணித்து, அதுதொடர்பான அறிக்கையை பார்வையாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.
அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

Best regards,