Friday, 4 March 2016

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே!

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே!
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே!
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே - அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே!
இன்று குறிஞ்சி தலைவனை காண தாண்டிகுடி கொடைக்கானல் பயணம்.பத்து வருடமாக தடைபெற்ற பயணம்,கந்தனின் அருளால் இன்று கிட்டியது.மலைகளின் நடுவே இனிமையான சூழ்நிலையில் தண்டாயுதபாணி, தண்டத்தையும், வேலையும் ஏந்தி அழகுற காட்சி கொடுத்தார்.முருகபக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று அய்யனின் அருளை பெறுக....கோவிலின் வரலாறு கீழே..
தன் பக்தர்களை அழகாலும், அன்பாலும், அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் கருணையாலும் கவரக்கூடியவர் முருகப்பெருமான். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் முன்பாகவே, தங்கியிருந்த இடம் தாண்டிக்குடி.
போகரின் வேண்டுதலால், தான் குடியிருக்க ஏற்ற இடம் என்று கருதி ஆறுமுகப் பெருமான் இங்கிருந்து தாண்டிக் குதித்து சென்ற இடம் பழனி மலையாகும். இதன் காரணமாக இந்த திருத்தலம் தாண்டிக்குதி என்று புராணப் பெயர் பெற்று விளங்கியது.
நாளடைவில் அது மருவி ‘தாண்டிக்குடி’ என்று மாறியுள்ளது. இந்த திருத்தலத்தில் இருந்து பழனிக்கு தாண்டிக்குதித்துச் சென்ற கந்தக்கடவுளை, ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் என்றழைக்கப்படும் சித்தர் தாண்டிக்குடிக்கே பாலமுருகன் வடிவில் அழைத்து வந்தார்.
அவர் மறுபடியும் முருகனை அழைத்து வந்ததற்கு அடையாளமாக தாண்டிக்குடி மலையில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அறியும் வகையில் ஒரு ஜோதி தோன்றி ஒளிர்ந்தது. இதன் காரணமாக அந்த மலை ஜோதி மலை என்றும் அழைக்கப்படுகிறது.
தொடர்ந்து மூன்று நாட்கள் தெரிந்த ஜோதி, மூன்றாம் நாளின் முடிவில் மறைந்தது. இதனால் பதறிப் போன பக்தர்கள், இறைவன் மீண்டும் இங்கிருந்து சென்று விட்டாரோ என்று கருதி பதறியபடி மலையை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அங்கு அவர்களுக்கு ஆனந்தம் காத்திருந்தது.
அழகன் முருகன் அங்கேயே தங்கி விட்டதற்கு அடையாளமாக, மண்ணில் காலடித் தடங்கள் பதிந்தால் எப்படி இருக்குமோ, அதே போன்று மலையின் மீதுள்ள கல்லில் இறைவனின் திருவடிச் சுவடுகள் பதிந்து காணப்பட்டன.
அதற்கு அடுத்த பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. (இந்த தோற்றங்களை இப்போதும் கண்டு தரிசிக்கலாம்). பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றிருக்கிறார்.
எனவே பழ னிக்கு செல்லும் பக்தர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகன் சன்னிதியில் இறைவனை தரிசித்து சென்றால் தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலம் அமைந்துள்ள மலையில் பாறையில் ஏற்பட்டுள்ள சிறிய பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது.
இந்த ஆலயத்தில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே கோவிலின் திருமண்ணாகும். ஆலயம் வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆறாவது படைவீடான பழமுதிர் சோலையில் இருந்து தாண்டிக்குடி வந்தார் முருகப்பெருமான்.
அவர் இங்கு தங்கியிருக்கும் போதுதான், அகத்தியரின் சீடரான இடும்பன் கயிலாயத்தில் இருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழனி வந்து சேர்ந்தார். அதில் ஒன்று தனக்கு இருப்பிடமாக இருக்க தகுந்தது என்று கருதி தாண்டிக்குதித்தார் முருகப்பெருமான். இதனால் இந்த திருத்தலம் தாண்டிக்குடி என்றானது.
பன்றிமலை சுவாமிகளின் வேண்டு கோளின்படி, முருகனே தாண்டிக்குடியில் கோவில் கட்ட தேவையான பொருட்களை, சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி பொருட்களை கொடுக்க கூறினாராம்.
பழனி கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இந்தக் கோவிலிலும் உள்ளது. கோவிலில் கணபதி, இடும்பன், பைரவர், அகத்தியர் மற்றும் நவக்கிரகங்களுக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூலவரான பாலமுருகன் மேற்கு நோக்கி நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா, மாத கார்த்திகை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் போன்றவை சிறப்பாக நடைபெறும். திண்டுக்கல்-பெரியகுளம் செல்லும் சாலையில் வத்தலக்குண்டில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோவில்.

Best regards,