Friday 7 December 2018

இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாறு........

இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாறு........

    ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.

15ம் நூற்றாண்டில் தற்போதைய ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி , கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.

பின்னர் கி.பி 1063ல் சோழ மன்னரான ராஜேந்திரசோழன் தனது பேரரசில் இணைத்தார். பின்னர் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520ம் ஆண்டில் விஜயநகர பேரரசன் நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

இரண்டு நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்சி புரிந்தனர். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் குடும்ப சண்டை காரணமாக இராமநாதபுரம் பிரிக்கப்பட்டது. தஞ்சாவூர் மன்னனின் உதவியுடன் 1730ம் ஆண்டு சேதுபதி சிவகங்கையின் மன்னரானார். நாயக்க மன்னர்களின் ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைய துவங்கியது. இதனால் பாளையக்காரர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். இதில் சிவகங்கை மன்னரும், இராமநாதபுரம் சேதுபதியும் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்தனர்.

1741ம் ஆண்டு ராமநாதபுரம் மராட்டியர்கள் வசமும், 1744ம் ஆண்டில் நிஜாம்கள் வசமும் இருந்தது. 1795ம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதியை பதவியிறக்கம் செய்து விட்டு ராமநாதபுரத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் கொண்டு வந்தனர். 1803ம் ஆண்டு சிவகங்கை மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்.

1892ம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார். 1910ம் ஆண்டில் இராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இராமநாதபுரம் இராமநாடு என அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இராமநாதபுரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

1. திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களை கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மாவட்டம். (தற்போது சிவகங்கை மாவட்டம்)

2. ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர், இராஜபாளையம் தாலுகாக்களை கொண்ட காமராஜர் மாவட்டம். (தற்போது விருதுநகர் மாவட்டம்) .

3. திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், இராமேஸ்வரம் தாலுகாக்களை கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.

இராமநாதபுரம் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் போது எஸ். குருமூர்த்தி கலெக்டராக இருந்தார். 1985ல் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருந்த ஒரு கிராமம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு மாற்றப்பட்டது. 1995ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகா, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகாக்களாக பிரிக்கப்பட்டது.
1998ம் ஆண்டு இராமநாதபுரத்தில் இருந்த திருவாடானை தாலுகா சிவகங்கை மாவட்டதில் உள்ள தேவகோட்டை தாலுகாவிற்கு மாற்றப்பட்டது.1999ல் திருவாடானை தாலுகாவில் இருந்த வளனை என்ற கிராமம் சிவகங்கையில் சேர்க்கப்பட்டது.

இராமநாதபுரத்தில் உள்ள அரண்மனையில் இன்னமும் சேதுபதி ராஜாவின் வாரிசுகள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அதிகாரம் இல்லை எனினும் பள்ளிகள் கல்லூரிகள், மருத்துவமனைகள் அமைத்து சேவை செய்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து பள்ளிக்கு கல்வி கற்றுதர வரும் வெளிநாட்டவர் இந்த அரண்மனையில் தான் தங்குவர்.ராமேஸ்வரம் ராமநாதபுரத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த இடம் முக்கியமான புனித ஸ்தலமாக விளங்குகிறது. ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் இணைக்கப்படும். இராமநாதபுரத்திற்கு வைகை நீர் பாசனம் அளிக்கிறது.

Best regards,