Friday, 16 December 2011

நல்லருள் கிடைக்கட்டும்-டிச.,17 – மார்கழி மாதப் பிறப்பு!

மார்கழி மாதம் பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இவற்றை, “சூன்ய மாதம்’ என்கின்றனர்.
“சூன்யம்’ என்றால், “ஒன்றுமில்லாதது’ எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை (இறைவனைச் சரணடைதல்) கடைபிடிக்க வேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.
மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள். முப்பது நாள் கடுமையான நோன்பிருந்தாள். எண்ணியபடியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள். பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.
அவள் தியாகச் செம்மலும் கூட. திருமாலின் துணைவியான பூமாதேவியே, ஆண்டாளாக அவதரித்தாள். கலியுகத்தில், இறைவனை அடைய, நாமசங்கீர்த்தனமே உயர்ந்தது என்பதை உலகத்தாருக்கு எடுத்துரைக்க, பூலோகத்துக்கு செல்லும்படி லட்சுமியிடம் சொன்னார் திருமால்; அவள் மறுத்து விட்டாள். “ஏற்கனவே சீதையாக பிறந்து, என் மேல் சந்தேகப்பட்டு, என்னைப் படுத்தியது போதாதா? இன்னொரு முறை பூலோகம் செல்லவே மாட்டேன்…’ என்றாள். பூமாதேவியை திரும்பிப் பார்த்தார் திருமால். பூலோகம் சென்றால் கஷ்டப்படுவோம் என்று தெரிந்தே, உலக நன்மைக்காக அவள் இங்கு வர சம்மதித்தாள். ஆண்டாள் எனும் பெயருடன், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற புண்ணிய ஷேத்திரத்தில், பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள். இறைவனை அடையும் வழியை எடுத்துக்காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள்.
திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகப் பெருமானும், தியாகச் செம்மலாகத் திகழ்ந்தார். அவர், மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். சிறந்த அறிஞரான அவரை, பாண்டிய மன்னன் தன் அமைச்சராக்கி, அழகு பார்த்தான். அரசாங்கப் பணியை விட, ஆண்டவன் பணியே உயர்ந்ததெனக் கருதி, அதை உ<தறியவர், சிவபெரு மானின் குரு வடிவ தரிசனம் பெற்றார். ஆவுடையார் கோவில் திருப்பணியை திறம்பட நடத்தினார். திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி எனும் தலைப்பில், தித்திக்கும் பாடல்களை எழுதினார். இந்தப் பாடல்களைப் பாடி, நோன்பிருந்த பெண்கள், சிவ பக்தர்களை கணவனாக அடையும் பாக்கியம் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினர்.
மார்கழி மாத நோன்பு, தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனால், கோவில்களில் வழிபாடு வழிவழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை, 4:30 மணிக்கே எழுந்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும்.
“இறைவா… என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து…’ என வணங்குங்கள்; இறைவன் நல்லருள் தருவான்.