Tuesday 27 December 2011

மலையாளி

இன்றைய மலையாளி அன்று சேரனாகத்தானே இருந்தான். கருர் சேரர்களின் தலைநகராக இருந்திருக் கிறது. தொண்டி கூட சேரர்களின் தலைநகராக இருந்திருக்கிறது. நியாயமாக முல்லைப் பெரியாறில் தகராறு செய்யும் அச்சுதானந்தன் சேரநாட்டுத் தமிழனின் வாரிசு தானே? தமிழன் தானே?

தென்னிந்தியா முழுமைக்கும் ஆண்ட தமிழன் இராஜராஜசோழனின் தாயாரும் சுந்தரசோழனின் மனைவியுமான வானவன் மாதேவி எந்த நாட்டைச் சேர்ந்தவள்? சேர நாட்டுப் பெண். 9 ஆம் நூற்றாண்டிலேயே கலந்துவிட்டது. இராஜஇராஜ சோழனே மலையாளப் பெண்ணுக்கும் தமிழ்நாட்டு ஆணுக்கும் பிறந்தவன்தான்.

அதே இராஜராஜனின் மகள் குந்தவை (அக்காள் அல்ல) சாளுக்கிய ( கன்னட ) நாட்டு விமலாதித்தனை திருமணம் செய்துள்ளார். இராஜராஜனுக்கு மகனான இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவி நரேந்திரன் என்ற கீழைச்சாளுக்கியனை அரசனைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் முதலாம் குலோத்துங்கன்.

சோழ நாட்டு கண்ணகிக்கு சேரன்தானே கோவில் கட்டி வைத்துள்ளான். அந்தக் கோவிலுக்கு சோழனும் பாண்டியனும் பல்லவனும் வரக்கூடாது என தடுக்கிறான். பாண்டிய நாட்டுக்கு முல்லைப்பெரியாறில் தண்ணீர் தேக்க மறுக்கிறான்.

சாளுக்கியன் காவிரி நீரை சோழ நாட்டுக்குத் தர மறுக்கிறான். உங்கள் பரம்பரைச் சண்டைதானே?

சங்க காலத்திலிருந்து பாண்டியர், சேரர், சோழர், அதியமான்கள், தொண்டைமான்கள், பதினெண்கீழ்குடி வேளிர்கள் என இவர்களுக்குள் தொடங்கிய சண்டையின் நீட்சிதானே இவை. கி.பி 600 லிருந்து கி.பி 900 வரை மட்டும் சுமார் 65 போர்கள் இப்படித்தானே நடந்துள்ளது.

பல்லவர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள் என வன்னியர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் யார்? பல்லவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் தானே? அப்படியானால் வன்னியர்கள் தெலுங்கர்கள் தானே?

களப்பிரர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள். இப்போதைய முத்தரையர்கள் தான் களப்பிரர்கள் என ஒரு வரலாற்று ஆய்வு உள்ளது. அப்படியானால் முத்தரையர்கள் தமிழர்கள் இல்லையே?

தமிழர் வரலாற்றை ஊன்றிப்படித்தால் இங்கு தமிழன் என்று எவனும் இல்லை என்பதுதான் உறுதியாகும். கன்னடனும் மலையாளியும் தெலுங்கனும் தமிழனும் பிரிக்க இயலாதபடி கலந்துள்ளார்கள். இரத்த சம்பந்தமே நடந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இனக்கலப்பு நடந்துள்ளது. எந்த மாநிலத்தோடு சண்டை என்றாலும் அது தமிழர்களுக்குள் நடக்கும் சண்டையே ஒழிய இங்கு திராவிடம் என்ற கருத்தைக் குறைகூற முடியாது.

வரலாற்றுப்படி மட்டுமல்ல, அறிவியல்படியும் இங்கு தமிழன் இல்லை. நடைமுறையிலும் தமிழன் இல்லை. இங்கு தேவர் இருக்கிறார், செட்டியார் இருக்கிறார், வன்னியர், நாடார், பள்ளர், பறையர், முத்தரையர், கவுண்டர் என ஆயிரக்கணக்கான சாதியினர் இருக்கிறார்கள். திருமணச்சடங்குகளிலிருந்து கருமாதிச்சடங்கு வரை ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. பார்ப்பான் விதித்த அடையாளம். அந்த அடையாளங்களில் தான் தமிழ்நாட்டுத் தமிழனும் மலையாளியும் ஆந்திரனும் வாழ்கிறானே தவிர தமிழன் என்ற அடையாளத்தில் எவனும் இல்லை, அப்படி தமிழன் என்று பிரித்துக்காட்ட எந்த வரையறையும் இதுவரை இல்லை.