Thursday, 8 December 2011

சில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை. கொலைசெய்யப்பட்டார். போலீஸில் தம்பி புகார்.

  

மறைந்த பழைய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் ஒரே தம்பி நாகவர பிரசாத். இவர் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதை எதிர்த்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடியாகி படம் ரிலீசாகி விட்டது.
 
சில்க் ஸ்மிதா சாவில் மர்மம் இருப்பதாக நாகவர பிரசாத் கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நானும், சில்க் ஸ்மிதாவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தோம். சாப்பாட்டுக்கே கஷ்டம் இருந்தது. சிறுவயதில் எங்கள் அம்மாவை தவிக்க விட்டுவிட்டு அப்பா போய்விட்டார். சில்க் ஸ்மிதாவுக்கு 17 வயது இருக்கும்போது அன்னபூர்னம் என்ற பெண் சென்னைக்கு அழைத்து போய் சினிமாவில் நடிக்க வைத்தார்.
 
சில்க் ஸ்மிதாவுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தது, கணவன் ஓடிவிட்டான் என்றெல்லாம் அப்போது வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தபோது திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒருவர் திடீரென வந்து ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார்.
 
ஒருநாள் வீடு ஒன்றை விலை பேசினார். அந்த வீட்டை தனது பெயரில் வாங்க அக்காள் விரும்பினார். ஆனால் கூட இருந்த நபர் தனது பெயரில் வாங்கும்படி நிர்ப்பந்தித்தார். இதனால் இருவருக்கும் தகராறு மூண்டது. சாவதற்கு சில நாட்களுக்கு முன் எனது தாய் சென்னை சென்று சில்க் ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார். அவர் வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.
 
நாங்கள் அலறியடித்து ஓடினோம். எங்களிடம் என் வாழ்க்கையில் நிறையபேர் விளையாடிவிட்டனர். வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று சில்க் ஸ்மிதா எழுதியது போன்ற ஒரு கடிதம் கொடுத்தனர். அதில் இருந்தது சில்க்ஸ்மிதா கையெழுத்து இல்லை. ஆதாரங்களை அழித்துவிட்டனர். சாவில் மர்மம் இருக்கிறது. அலைகள் ஓய்வதில்லை போன்று குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கத்தான் விரும்பினார். ஆனால் அவரை கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர்.
 
இவ்வாறு அவர் கூறினார்.