
ஆந்திராவுக்கு இனாம்: இதுகுறித்து, மின் வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:காற்றாலை மின்சாரத்தை யூனிட், 3.39 ரூபாய்க்கு வாங்குகிறோம். மே முதல் அக்டோபர் வரை, காற்று அதிகமாக வீசும் என்பதால், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தியாகி, மின்தொடரில் இணையும் போது, அதில் திறன் நெருக்கடி ஏற்படுகிறது.தெற்கு மண்டல மின்தொடரில், 50 “ப்ரீக்வன்சி’க்கு மேல் மின்சாரம் வரும் போது, வேறுவழியின்றி அதை, வேறு மாநிலங்களுக்கு, குறிப்பாக ஆந்திராவுக்கு கொடுத்து, மின்தொடர் திறனை பராமரிக்கும் நிலை உள்ளது.காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு விற்க முடியாதபடி, தமிழக அரசு தடையாணை விதித்துள்ளது. இதனால், அளவுக்கு அதிகமாக வரும் தமிழக காற்றாலை மின்சாரத்தை, ஆந்திர மாநிலம், பல கோடி ரூபாய்க்கு இனாமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இனாமாக ஆந்திராவுக்கு கொடுக்கப்பட்ட மின்சாரத்திற்கும் சேர்த்து, யூனிட் 10 ரூபாய்க்கும் அதிகமாக, வெளிச்சந்தையில் வாங்கி, காற்றாலை உற்பத்தி இல்லாத நாட்களில், காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு மின் வாரியம் தர வேண்டியுள்ளது. அதாவது, 3.39 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை, 10 ரூபாய்க்கு வாங்கி திருப்பித் தருவதோடு, தமிழகத்திற்கும் பயன்படாமல், வேறு மாநிலத்திற்கு இனாமாக செல்கிறது.
சலுகை ரத்து?இந்த சலுகை திட்டம், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இந்த வகையில் மட்டும், தமிழக மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.எனவே, இந்த சேமிப்பு முறை திட்டத்தை ரத்து செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
காற்றாலை மின்சார உற்பத்தி:தமிழகத்தில், 6,008 மெகாவாட் திறன் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. நடப்பாண்டில், மேலும் 2,000 மெகாவாட் காற்றாலைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.இவற்றில் இருந்து, மே முதல் அக்டோபர் வரை, அதிகபட்சமாக தினமும், 2,500 மெகாவாட் மின்சாரம், தமிழக மின் வாரியத்திற்கு கிடைக்கிறது. மற்ற மாதங்களில், 100, 200 மெகாவாட் தான் கிடைக்கிறது. கடந்த ஆண்டில், 870.7 கோடி யூனிட் மின்சாரம், காற்றாலையில் கிடைத்தது. நடப்பாண்டில், 940 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்