Wednesday 31 August 2011

"ஒருமுறை காதல்"


ரெயிலிலும் உன் நினைவுகள்....

நகர்ந்து கொண்டே
இருக்கிற நிமிடங்களை போல தான்...
நானும் இந்த ரெயிலும்...

மறக்க நினைக்கையில்
மறுபடி வருகிற
உன் நினைவுகளின் தடயங்களாய்
பயணம் முழுவதும் தொடர்கிறது....

திருடனுக்கு பயந்து
பையை பாதுகாப்பாய் வைக்கையில்
நீ என்னை சிறைப் படுத்தியதும்...
யன்னலோரம் வருகிற
மென்மையான வெய்யில் தொடுகையில்
உன் உரசலும்....
வெளியே தெரிகிற இயற்கையை
ரசிக்கையில்
உன் விரசமும் தொடர்கிறது.....

சிகரட்டை பற்றவைத்து
கதவோரம் நிற்கிறேன்...
பெரியவன் வந்து
திட்டும் போது அனுமதி
தந்தவனும் அடையாளம் தெரியாதவன்
ஆகி விடுகிறான்...
உன்னைப் போல...

ரயிலின் இரைச்சல் காதைக் குடைந்தாலும்
மனம் கண்டு கொள்வதாக தெரியவில்லை...

நீண்ட நாட்களின் பின்
என் ஊர் நோக்கிய பயணம்...
உறவுகளையும் கண்டு
கொள்ளக் கூடாதென்றும்...
உன் நினைவுகளையும் மறந்து விட
வேண்டும் என்றும் தான் நினைக்கிறேன்....

ரெயின் ஒவ்வொரு தரிப்புக்களில்
நிற்கிற போதும் ஏறி வருகிற
பெண்களெல்லாம் உன் சாயலில்...
இருப்பதாய் தோன்றுகிறது...

நீண்ட தூரம்
நீண்ட நேரம்....
தூக்கம் எப்போதோ
தொலைந்து போனது தான்

இந்தப் பயணம் கூட என்னை
பக்குவப் படுத்தியதாய் தெரியவில்லை...
உன் நினைவுகளிலிருந்து.....

நீ எனக்கு எழுதிய
கடிதங்கள் சட்டென்று
ஞாபகத்தில் விரிகிறது....
'
எங்கு போனாலும் உன்னுடன் வருவேன்..
என்ற வரிகள் மட்டும்
மறுபடி மறுபடி வந்து
தொலைக்கிறது...
பழமொழிகளை நான் இதுவரை
நம்பியதில்லை..
பழமைகளையும் நம்ப வைக்கிறது...
உன் நினைவுகள்...
உப்புக்கு சப்பாணி போல

தண்டவாளங்கள்...
நீயும் நானும் என்று
தோன்றினாலும்....
இந்த ரெயிலின் இடம்
வெற்றிடமாகவே விரிகிறது...

டிக்கட் செக்கர் தட்டும் போது
விழித்தேன்...
எனக்கான உன்னை பறித்துப் போன
அந்த பணக்காரனின்
ஞாபகமாய் அவன் இருந்தான்...

நான் அறிமுகமில்லாதவர்களுடன் தான்
பயணப்பட ஆசைப்படுகிறேன்...
உன் அறிமுகமொன்றே...
வேதனைக்கு போதுமானதாக இருக்கிறது...

தண்டவாளங்களுக்கு அருகில்
வீடு இருந்தும்....
ரெயிலில் பயணிக்க கிடைக்காத
வருத்தத்துடன் ஒவ்வொரு ரெயின்
வீட்டை கடக்கிற பொழுதும்...
வாசலில் நின்று ஏக்கத்துடன்
கையசைக்கிற குழந்தைக்கும் ரெயினுக்கும்
இடையே உள்ள இடைவெளிகள் தான்....
உனக்கும் எனக்கும்...