Thursday 11 October 2018

பெண்கள் அடையும் சுதந்திரமா ? பெண்களை அடைவதற்கான சுதந்திரமா?

பெண்கள் அடையும் சுதந்திரமா ? பெண்களை அடைவதற்கான சுதந்திரமா?
ஒரு இடையன் தனது ஆடுகளை ஓட்டிச் சென்று தொழுவத்தில் அடைத்தான். அச்சமயம் அங்கு பசியுடன் வந்த ஓநாய்கள் கதவுகள் மூடியிருப்பதை கண்டதும் எப்படியாவது அவைகளை அடைவதற்கு திட்டம்தீட்டின. எவ்வாறாவது ஆடுகளைத் தொழுவத்திலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தன .

அத்திட்டத்தின் முடிவாக ஆடுகளின் சுதந்திரத்திற்காக அவைகளின் முன்னிலையிலேயே கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிச் சுற்றி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. ஓநாய்கள் தமது சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவுமே குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்வதாக எண்ணிய ஆடுகளும் அதன் மூலம் கவரப்பட்டு அதில் கலந்து கொள்ள தீர்மானித்து தமது கொம்புகளால் தொழுவத்தின் கதவுகள் மற்றும் சுவர்களை உடையும் வரை முட்டின .
அதன் விளைவாக தொழுவத்தின் கதவுகள் திறந்து கொள்ள அனைத்து ஆடுகளும் தமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்ற ஆணவத்தில் பாலைவனங்களை நோக்கி விரைந்தன. தருணம் பார்த்து ஓநாய்களும் அவைகளின் பின்னால் விரைந்தன. ஆடுகளைத் தடுக்க இடையன் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகின.
இறுதியாக எந்த மேய்ப்பாளனோ, காவலாளியோ இல்லாத ஒரு திறந்த வெளியில் ஆடுகளைக் கண்ட ஓநாய்களுக்கோ தமது எண்ணம் நிறைவேறியதையிட்டு மிகுந்த பூரிப்படைந்தன.
அவ்விரவோ!, சுதந்திரம் தேடிய ஆடுகளின் கருப்பு இரவாகவும், சூழ்ச்சிக்கார ஓநாய்களின் மிகச்சிறந்த இரவாகவும் அமைந்தது. மறுநாள் காலையில் ஆடுகளை தேடிச்சென்ற இடையனுக்கோ அவைகளின் கிழிக்கப்பட்ட தோல்களும் இரத்தம் படிந்த முல்லுகளுமே எஞ்சியிருந்தன.

இது நாமறிந்த வெறும் ஒரு கதையாக இருந்தாலும், இவ்வுலகில் பெண் சுதந்திரம் என்று கூறிக்கொண்டு மனித ஓநாய்கள் செய்யும் போராட்டத்திற்கு எவ்வளவு அழகாக ஒப்பாகிறது!

பெற்றோரின் பராமரிப்பு, வீட்டினுள் அடங்கியிருக்கும் பக்குவம், ஹிஜாப் மற்றும் நிகாப், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், நற்குணங்கள் போன்றவற்றால், நல்லொழுக்கமுள்ள இறைவிசுவாசமிக்க பெண்களை அடைவது, நவீன உலகின் ஓநாய்களுக்கு  சாத்தியமற்றுப்போகவே, பெண்ணுரிமை என்று கூறிக்கொண்டு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முடக்கிவிட்டனர்.
இக்கதையில் ஓநாய்களிடம் ஏமாந்து அவைகளுக்கு இரையாகிய ஆடுகளை போல இன்று எமது சமுதாயத்தின் சில பெண்கள், இக்கயவர்களிடம் சிக்கித் தவிக்கும் ஒரு அவல நிலைமையை கண்டு மனம் கனக்கிறது.
அப்பெண்களுக்குத் தெரியாது, இது பெண் உரிமைக்கான போராட்டமல்ல "பெண்களை இலகுவாக அனுபவிப்பதற்கான போராட்டம்" என்று.
யாஅல்லாஹ் எமது பெண் சமுதாயத்திற்கு பூரணமான இறை நம்பிக்கையை கொடுத்து இந்நயவஞ்சக ஓநாய்களிடமிருந்து காப்பாற்றுவாயாக.

(சில மாற்றங்களுடன்)

தமிழில் : ஸல்மான் உவைஸ் (மீஸானி)
அல் கஸீம் பல்கலைக்கழக
மாணவன், KSA

Best regards,