Friday, 5 October 2018

நவ கிரகங்கள் வரிசையில் வரும் குருபகவான் மற்றும் புதபகவான் பற்றிய ஒரு சுவையான ஒரு நிகழ்ச்சி இது

நவ கிரகங்கள் வரிசையில் வரும் குருபகவான் மற்றும் புதபகவான் பற்றிய ஒரு சுவையான  ஒரு நிகழ்ச்சி  இது.

தேவ குருவான குரு பகவான், தன் ஆசிரமத்தில் தங்க வைத்து,  புதன் பகவானுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று கொடுத்தார்.  அதில் சாஸ்த்திரமும் அடக்கம்.

குருகுல வாசத்தில் எல்லா கலைகளையும் கற்று தேர்ந்த புத பகவானுக்கு  தலைக்கனம் வந்தது. 

நாம்தாம்  எல்லா கலைகளையும் கற்று கொண்டு விட்டோமே. .....
 இன்னும் எதற்கு ஆசிரம வாழ்க்கை என்று முடிவு செய்தார். .... முடிவு செயல் வடிவம் பெற்றது. 

குருவிடம் போய்.... குருவே...தாங்கள் எனக்கு போதித்த வகையில் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்து விட்டேன்.  இனி வெளியே போய் என் பணியை தொடங்கலாமா... ? என்று புதன் கேட்டார்.

குருவுக்கு மகிழ்ச்சி.
 ""நான் சொல்லி தந்த வித்தைகளில் எந்த அளவுக்கு தேர்ச்சி பெற்று இருக்கிறாய் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 
அதில் நீ வெற்றி பெற்று விட்டால்,  நீ வெளியே செல்ல எந்த தடையும் இல்லை.""
 இது குரு பகவான் சொன்னது.

உடனே புதனும் சம்மதித்தார்.  அவருக்குத்தான் அனைத்து கலைகளையும் கற்று விட்டோம் என்கிற இறுமாப்பு வந்து விட்டதே. 

இந்த சம்பவம் தேவலோகத்தில் நடந்தது.

குரு பூலோகத்தை நோக்கி கை காட்டி.... புதனே அதோ பார் என்ன தெரிகிறது? என்றார்.

குரு கை காட்டிய திசையை நோக்கிய புதனுக்கு,  ஒரு வீட்டில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஓன்று தொட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது.

உடனே புதன் .. சிறு குழந்தை தொட்டிலில் படுத்து இருக்கிறது என்றார். 

உண்மைதான்.  அந்த குழந்தை ஜனன நேரம் இதுதான்.  இந்த நேரத்திற்கு உரிய  ஜாதக குறிப்பையும், அதன் எதிர் கால பலனையும் சரியாக சொன்னால் நான் வைக்கும் தேர்வில் நீ வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று குழந்தை பிறந்த நேரத்தை சொன்னார் குரு பகவான்.

புதன் என்ன மனிதரா? பேப்பர் பேனாவை எடுத்து கணிதம் செய்து கொண்டிருக்க.  கண்களை மூடி ஒரு கணம் யோசித்தார்.  பின் அந்த குழந்தையின்  ஜனன ஜாதகத்தையும் அதன் எதிர் கால பலனையும் சொல்ல தொடங்கினார். 

ஐயா.... குரு பகவானே... இந்த குழந்தை அற்ப ஆயுள் பெற்ற குழந்தை.  அதன் ஆயுள் பாவம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. 

அதன் ஆயுள் பாவத்தையோ,  ஆயுள் காரகனான சனி பகவானையோ,  ஜாதகத்தில் குரு பார்க்கவில்லை.  அதோடு இன்னும் சற்று நேரத்தில் அந்த குழந்தை பாம்பு தீண்டி இறக்க போகிறது என்று சொன்னார்.

அப்படியா... சரி பாப்போம்,  என்று சொல்லி இருவரும் காத்திருந்தனர்.  புதன் குறிப்பிட்ட மாதிரி அந்த வீட்டின் உத்திரத்தில் இருந்து ஒரு நல்ல பாம்பு தொட்டில்  கம்பிகள் வழியாக கீழ்நோக்கி இறங்க துவங்கியது.

புதனுக்கு ஒரே சந்தோசம்.  குழந்தை இறக்க போகிறது என்பதை  விட,  தன் ஜாதக கணிப்பு பலிக்க போகிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

இருவரும் அந்த பாம்பையே கவனித்து கொண்டிருந்தனர்.  மெல்ல கம்பி வழியாக இறங்கியது பாம்பு

அது வரை அமைதியாக இருந்த குழந்தை,  தன்னை நோக்கி வரும் பாம்பு ஏதோ,  ஒரு விளையாட்டு பொருள் என்கிற எண்ணத்தில் தன் கைகளையும், காலையும் ஆட்டியது.

குழந்தையின் அந்த செய்கையால் தொட்டில் அசைய தொடங்கியது.  பாம்பு பயந்து வந்தவழி திரும்பி சென்றது. இதை பார்த்த புதன் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

என்ன குருவே... நீங்கள் கற்று தந்த வகையில் தானே பலன் கணித்தேன்.  கணித்த மாதிரி பாம்பும் வந்தது. முடிவு மட்டும் இப்படி ஆகி விட்டதே என்ன காரணம் என்று கேட்டார்.

அதற்கு குரு பகவான் ... ஜாதகத்தில் குரு பார்த்தாலே அந்த குழந்தை நீடித்த ஆயுளை பெரும் என்றால்,  நான் நேரடியாக பார்த்து கொண்டிருக்கிறேனே அப்பறம் எப்படி குழந்தை சாகும் என்றாராம்.

 தான் கற்றுதேர்ந்துவிட்டோம் .நமது கனிப்பு தவறாது என்ற அகந்தையில் குருபகவான் நேரடியாக பார்த்துகொண்டிருக்கும் விஷயத்தையே கவனிக்க மறந்தார்.
 கர்வம் குறைந்த புதன் மேலும் சில காலம் ஆசிரமத்தில் தங்கி கலைகளை கற்று கொண்டாராம்.

குரு பார்த்தால் கோடி புண்ணியம்,  குரு பார்த்தால் கோடி தோஷ நிவர்த்தி என்பது உண்மைதான்...

நீதி: நாமும் அப்படிதான் எல்லாம் அறிந்து விட்டோம் என்ற அகந்தை தலைக்கேறாமல் பார்த்துகொள்ள வேண்டும்..
நாம் அறிந்து கொள்ளும் விஷயங்கள்  அனைத்திலும் நாம் குழந்தையே....!!!

Best regards,