Saturday, 30 March 2019

இந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி

இந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,

"மின்மோட்டாரைத்" தயாரித்த மாநிலம்-தமிழ்நாடு.

தயாரிக்கப்பட்ட வருடம் 1937.

தயாரித்தது யார் தெரியுமா?

முறையான பள்ளிக் கல்வியைக் கூட தாண்டாத ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்.

அந்த சிறுவனின் 126 வது பிறந்தநாள் கூட இன்று தான்.

நம்ப முடிகிறதா?

யார் அவர்?

கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்த அச்சிறுவனுக்கு,பள்ளிக் கல்வியின் மேல் நாட்டமில்லை,எனவே பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.பள்ளிக் கல்வி தலையில் ஏறாமல் போகவே,ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.ஒரு நாள் அவ்வழியே வந்த பிரிட்டீஷ்காரரின்-மோட்டார் பைக் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.பைக் என்பதே அரிதலும்,அரிதான அக்காலகட்டத்தில் அதைப் பழுது பார்க்கும் நிபுணத்துவமும் குறைந்தே இருந்தது.நட்ட நடுவழியில் வெள்ளைக்காரர் திணறுவதைப் பார்த்து,அங்கு ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஓடி வந்து-பைக் கை பிரித்து மேய்ந்து பழுது நீக்கி அதை ஓடும் நிலையில் தயார் செய்து தந்தான்.அன்று தான் அதுவரையிலும் அச்சிறுவன் மனதில் தீப்பொறியாய் இருந்த விஞ்ஞானத் தாகம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.உடனடியாக தன் கிராமத்தை விட்டு வெளியேறி-கோவையில் ஒரு உணவகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.அதில் வந்த பணத்தைச் சேமித்து ஒரு மோட்டார் பைக் வாங்குவதே அவரது திட்டம்.பல மாத சேமிப்பில் அவரால் ஒரு மோட்டார் பைக்கை வாங்க முடிந்தது.வாங்கிய கையோடு அதை பகுதி பகுதியாகப் பிரித்து-அது பணி செய்யும் விதத்தை ஆராய்ந்து,பின் மீண்டும் ஒன்று சேர்த்தார்.அதன் பின் சின்ன சின்ன இயந்திரவியல் பணிகளைச் செய்யும் மிகச் சிறிய பொறியியல் பட்டறையை அமைத்தார்.அன்று தொடங்கிய அந்த பயணம் இந்திய அளவில் அறிவியல் துறையில் பல அசகாய சாதனைச் செய்தது.

யார் அவர் என புதிராக இருக்கிறதா?

மேலும் வாசியுங்கள்...

1945 இல் நடந்த சம்பவம்.

இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி அது.அக்கல்லூரியின் முதல்வர் கூட அவர்தான்.ஆனால் அவரோ பள்ளிப் படிப்பையேத் தாண்டாதவர்,ஆனாலும் தொழில்நுட்ப அறிவில் அவருக்கு நிகராக வேறு எவரும்  இல்லாத காரணத்தினால்,அவரையேப் அப்பதவியில் அமர்த்தியது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம்.

பிரிட்டிஷ் அரசால்,தயாரிக்கப்பட்ட, அக்கல்லூரியின் பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்த அவர்,பொறியியல் படிப்புகளுக்கு நான்காண்டுகள் தேவையேயில்லை.அது மாணவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும்,இரண்டாண்டுகள் போதும் என்று மாற்றத்தைக் கொண்டு வரப் பரிந்துரை செய்தார்.ஆனால் அதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை.

உடனடியாக அக்கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக  இராசினாமா செய்தார்.

இதில் வேடிக்கையானே விஷயம் என்னவென்றால்,அவர் அளித்த நன்கொடைகளாலும்,அவரின் அயராத முயற்சியாலுமே தான் இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரியான அது,
கோயம்புத்தூரில் அமைந்தது.

அவர் நன்கொடை தந்து அவரால் உருவாக்கப்பட்ட அந்த கல்லூரியின் முதல்வர் பதவியை தான் அவர் இராஜினாமா செய்தார்.

அந்தக் கல்லூரி தான், துவக்கத்தில் ஆர்தர் ஹோப் கல்லூரி என்று பெயரிடப்பட்டு, பின்னாட்களில்,கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி என்றான,

இன்றைய  Government College of Technology -GCT Coimbatore.

புகைப்படக் கருவியான கேமராவைப் பார்த்தாலே அதை ஏதோ ஒரு துப்பாக்கியைப் பார்த்தது போல மக்கள் பதறி,புகைப்படம் எடுத்தாலே ஆயுள் குறைந்து விடும் என்று திடமாக நம்பிய 1930 களின் காலகட்டத்தில்,  அதிலும் ஒரு தனி நபர் ஒருவர் கையில் கேமரா இருப்பதும்,அதை அவர் கையாள்வதும்--வானத்தில் பதினொன்று போட்டுக் காட்டும் சாகசத்திற்கு நிகராகப் பார்க்கப்பட்ட,அந்தக் காலகட்டத்திலேயே அவரிடம் கேமரா இருந்தது.அதுவும் அவரே வடிவமைத்த கேமரா.அதைக் கொண்டு 1935 இல் இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்தபொழுது-அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை அப்படியேப் படம் பிடித்தார்.இங்கிலாந்திலேயே படம் பிடித்தவர்--இந்தியாவில் சும்மா இருப்பாரா?நேதாஜி,காந்தி,நேரு,காமராஜர்,
பசும்பொன் தேவர்,பெரியார்  என்று அவரின் கேமராவில் அகப்படாத பிரபலங்களே இல்லை.

1937 இல் முதன் முதலில் இந்தியாவில்,உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட-முதல் எலக்ட்ரிக் மோட்டாரை தயாரித்தது அவருடைய UMS நிறுவனம் தான்.

1940 களிலேயே,ஒரு முழு வீட்டையும்,அஸ்திவாரம் தொடங்கி,முழுக் கட்டிடம் வரையில்-எட்டே மணிநேரத்தில் கட்டி முடித்துக் காட்டினர் அவர்.

1940 களிலேயே மிக மிக மெல்லிய பிளேடுகளைக் கொண்ட--தானியங்கி முகச்சவரக் கத்தியை வடிவமைத்தார். அது ஜெர்மனியில் பல பரிசுகளை வென்றது.

1952 இல் இரு நபர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில்,பெட்ரோலில் இயங்கும் காரை அவர் வடிவமைத்து தயாரித்தார்.ஆனால் அப்போதைய இந்திய அரசாங்கம் அக்காருக்கு லைசென்ஸ் தர மறுத்து விட்டது.

பத்தடி உயரம் வளரும் பருத்திச் செடி, பலவகை சுவைகளைக் கொண்ட மாம்பழங்களைக் ஒரே கிளையில் தரும் மாமரம் என அவர் விவசாயத்திலும் பல புரட்சிகளைச் செய்து காட்டினர்.இவையெல்லாம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பு எனும் கடலின் கரையில் எடுக்கப்பட்ட சிப்பிகள்...

முறையான கல்வியறிவு ஏதுமின்றி-தன் சொந்த முயற்சியாலும்,கடின உழைப்பாலும் முன்னேறிய அவர் தான்,

கோவை அரசு மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்ட பொழுது,அதற்காக தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியவரும்,

GCT எனப்படும்,கோவை பொறியியல் கல்லூரி அமைய பெரும் முயற்சியெடுத்து,நிதியுதவி செய்து,அதன் முதல் முதல்வருமாகவும் இருந்த,

கொங்கு மண்டலத்தின் தங்கம்,

"கோபாலசாமி துரைசாமி நாயுடு.... சுருக்கமாக....ஜி.டி.நாயுடு..."

கல்வி இல்லையே,பணமில்லையே,
வசதியில்லலையே,வாய்ப்புகள் இல்லையே...என்று இல்லைகளை பட்டியலிட்டு இயலாமையில் இருக்காமல்,

நாம் நிற்கும் அந்தப் புள்ளியிலிருந்து தான் உலகமே துவங்குகிறது.நாமே நமக்கு மூலதனம்.

புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் கண்டு நோகாமல்,அவற்றைச் சேர்த்து வைப்போம்,நம் வெற்றிவிழாவில் மற்றவர்கள் அதை பெருமையாக பேசுவார்கள்....என்று நினைக்கத் தொடங்கினால்,

நம் வெற்றியைப் பதிவு செய்ய வரலாறு காத்திருக்கிறது....என்பதற்கு ஒரு பெரும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய அந்த மாமேதையின் 126 வது பிறந்தநாள் இன்று...

Best regards,