Wednesday 27 March 2019

Mankading வரலாறு தெரியுமா? அஷ்வின் செய்தது சரியா? பிராட்மேன் கற்பித்த பாடம்!

Mankading வரலாறு தெரியுமா? அஷ்வின் செய்தது சரியா? பிராட்மேன் கற்பித்த பாடம்!


இவ்வளவு நடந்தும், ஜோஸ் பட்லர் மீண்டும் அவ்வாறே நடந்து கொண்டதற்கு கிடைத்த சரியான பாடம் அது
Mankading முறையில் இலங்கை பவுலரால் அவுட் செய்யப்படும் பட்லர்

இன்று விடியற் பொழுதில் இருந்தே, சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் தொடர்பாக ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருப்பது அஷ்வினின் மேன்கேடிங் பற்றியே. அவர் எப்படி அப்படி செய்யலாம்?, அவர் செய்தது விளையாட்டு மாண்பை குலைத்துவிட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி, என்ன செய்துவிட்டார் அஷ்வின்? வாங்க பார்க்கலாம்… அதுக்கு முன்னர் நேற்றைய போட்டியைப் பற்றிய ஒரு சிறிய முன்சுருக்கம்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 184 ரன்கள் எடுக்க, தொடர்ந்து சேஸிங் செய்த ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இதில், ராஜஸ்தான் அணியின் ஓப்பனர் ஜோஸ் பட்லர், 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட் தான், இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.

12.6வது ஓவரை, பஞ்சாப் கேப்டன் அஷ்வின் வீசுகிறார். அப்போது, எதிர்முனையில் நின்றுக் கொண்டிருந்தவர் ஜோஸ் பட்லர். அஷ்வின், பந்தை வீசும் போது, அவர் ரன்னர் எல்லைக் கோட்டினை தாண்டிச் செல்கிறார். இதை பந்துவீசிக் கொண்டே கவனிக்கும் அஷ்வின், ஸ்டம்ப்பை பதம் பார்த்து, ரன் அவுட்டிற்கு அப்பீல் செய்கிறார். அம்பயர், மூன்றாவது நடுவருக்கு மாற்றிவிட, அவரோ அவுட் என தீர்ப்பளிக்கிறார். இதுதான் இப்போது பிரச்சனை!

அஷ்வின் இவ்வாறு அவுட் செய்த விதத்திற்கு பெயர் தான் Mankading. இந்த முறையில் பெரும்பாலும் யாரும் அவுட் செய்யப்படுவதும் இல்லை… அவுட் செய்வதும் இல்லை. ஆனால், அஷ்வினுக்கு இந்த டெக்னிக் பழசு. சர்வதேச போட்டியிலேயே அவர் இதனை செய்திருக்கிறார்.

Mankading வரலாறு என்ன?

1947ல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் வினு மான்கட், ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுனை இதே பாணியில் அவுட் செய்கிறார். அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலும் இதே பில் பிரவுன் எனும் வீரரை வினு மான்கட் இப்படி ரன் அவுட் செய்கிறார்.

இதனால் கொந்தளித்த ஊடகங்கள், விளையாட்டின் மாண்பை மான்கட் குலைத்துவிட்டார் என்று எழுதி மிகக் கடுமையாக அவர் விமர்சித்தார்கள். ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் டொனால்ட் பிராட்மேனோ மான்கட்-க்கு ஆதரவாக இருந்தார்.

“பத்திரிகைகள் அவரது விளையாட்டை ஏன் கேள்விக்கு உள்ளாக்குகின்றன? கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு தானே அவர் அவுட் செய்திருக்கிறார்? இப்படி செய்தால் தான், எதிர் முனையில் இருப்பவர்கள், அவசர அவசரமாக ரன்னிங் ஓடுவதை தடுக்க முடியும். அவர் செய்த செயல் சரியானது தான்” என மான்கட்-க்கு சப்போர்ட் செய்தார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு தான், இந்த வகை விக்கெட்டுக்கு Mankading என்று பெயர் வந்தது.

Mankading பற்றி ஐசிசி விதி சொல்வது என்ன?

ஐசிசியின் விதி 41.16-படி, ஒரு பவுலர் தனது கையில் இருந்து முழுமையாக பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு, நான் ஸ்டிரைக்கர் கிரீஸை விட்டு வெளியே செல்லக் கூடாது. அப்படி வெளியே சென்றால், பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய பவுலருக்கு முழு உரிமை உண்டு என ஐசிசி தெரிவிக்கிறது.

அப்படிப் பார்க்கும் பொழுது, அஷ்வின் செய்தது முழுக்க முழுக்க சரியான செயலே! மாண்பை குலைக்கும் செயல் என்றால், ஏன் இப்படியொரு விதியை ஐசிசி எழுத வேண்டும்? காரணம், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பேட்ஸ்மேன்கள் அதிக சிங்கிள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பதற்கே.

இந்தியா சார்பில், முரளி கார்த்திக் இருமுறை இவ்வாறு எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் செய்திருக்கிறார். இதே ஜோஸ் பட்லர், இதற்கு முன்பும் இப்படியொரு முறை அவுட் ஆகியிருக்கிறார் என்பது உச்சக்கட்ட காமெடி…

2014ல் இலங்கையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இலங்கை பவுலர் சசித்ரா சேனநாயகே பந்து வீசுவதற்குள்ளாகவே, ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதற்கு எச்சரிக்கை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு அடுத்த சேனநாயகே ஓவரிலும், பட்லர் வெளியே செல்ல, ரன் அவுட் செய்யப்பட்டார்.


Mankading முறையில் இலங்கை பவுலரால் அவுட் செய்யப்படும் பட்லர்

இலங்கை கேப்டனும், கண்டிப்புடன் அவுட் அப்பீல் செய்ய, வேறு வழியின்றி விதிகளுக்கு உட்பட்டு பட்லருக்கு அம்பயர் அவுட் கொடுத்தார், இவ்வளவு நடந்தும், ஜோஸ் நேற்று மீண்டும் அவ்வாறே நடந்து கொண்டதற்கு, அஷ்வின் தந்தது மிகச் சரியான பாடமே தவிர அது விளையாட்டின் மாண்பை குலைக்கும் செயலே அல்ல!.


Best regards,