Thursday, 28 March 2019

வைகோவின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய ஒன்று

வைகோவின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய ஒன்று

வைகோ, வேல்முருகன் மட்டும் இதற்கு குரல் கொடுத்தால் போதாது, BJP அரசு தமிழர்களுக்கு இழைத்து உள்ள மாபெரும் துரோகம், ஆளும் மத்திய அரசு தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஒடுக்க நினைக்கிறது.

நாம் இனியும் விழித்து கொள்ளவில்லை என்றால், நாளை தமிழகம் நம்ம கையில் இல்லை!

அவசியம் வைகோவின் அறிக்கையை முழுவதும் படிக்கவும், இந்த செய்தியை மக்கள் இடத்தில் கொண்டுசெல்ல வேண்டும் அனைத்து வாட்ஸ் ஆப் குரூபில்ழும் அனுப்பவும், அதிகம் share செய்து மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்.

இனி அறிக்கை:

இரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில்
வடமாநிலத்தவர் பணி நியமனம்

வைகோ கண்டனம்

தென்னக இரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 52 மாத காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.

குறிப்பாக தென்னக இரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வடமாநிலத்தவர்களையே பணி நியமனம் செய்து வருகிறது.

2014 நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்படுகிறது. இனிமேல் அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது, “விண்ணப்பிப்போர் அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

இதனை நம்பி, சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை தென்னக இரயில்வே நிராகரித்தது. ஆனால் பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட் மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியில் சேர்த்தனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.

தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தோரின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மேற்கு வங்களாம், அசாம் போன்ற மாநிலங்கள் போன்று தமிழ்நாடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.

இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளிலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8

Best regards,