மலிவு விலை உணவகங்கள்
வரவேற்கப்படுவதை இரு கோணங்களில் பார்க்க வேண்டும். ஒன்று இதுதான் கருணையாட்சியின் அடையாளம் என்று புகழ்ந்து ஆதாயம் தேடுகிறவர்களின்
பார்வை. இன்னொன்று, வறிய மக்களிடமிருந்து
களவாடப்பட்டதில் ஒரு பகுதி இந்த வடிவத்திலாவது அவர்களிடம் வந்து சேரட்டும்
என்ற பார்வை.
இவையெல்லாம் கவர்ச்சித் திட்டங்கள் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களும் சொல்கிறார்கள். இவை ஏமாற்றுத் திட்டங்கள் என்று அதிரடிப்புரட்சி பேசுகிறவர்களும் சொல்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்கும் இடையேதான் சமூக யதார்த்த நிலை சார்ந்த அரசியல் இருக்க முடியும்.
இப்படிப்பட்ட திட்டங்களை வரவேற்கிறவர்கள் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள் அல்ல - எதிர்க்கிற எல்லோருமே புரட்சிக்காரர்கள் அல்ல என்பதைப் போல.
முழு உரிமைகளுக்காகப் போராட சக மக்கள் உணர்வும் பலமும் பெற வேண்டும். அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் உணவுக்காக அல்லாடுவதிலேயே அவர்களது தெம்பும் நேரமும் கரைந்துபோகின்றன. அதிலிருந்து இளைப்பாற, அப்படி இளைப்பாறும் நேரத்தில் மாற்றுச் சிந்தனைகளை அசைபோட என இப்படிப்பட்ட திட்டங்கள் உதவ முடியும். அதை அரசு செய்யாதுதான். அப்படி அசைபோடச் செய்கிற வேலையை மெய்யான மனித நேய சக்திகள் செய்வார்கள் - இதை வரவேற்பதால் நம்முடைய புனிதம் கரைபட்டுவிடுமோ என்ற பிரமைகளின்றி.
- இதுவரை உள்ளது நண்பர் மகிழ்நன் பா.ம. பதிவிட்டுள்ள நிலைத்தகலுக்கு நான் அளித்துள்ள பின்னூட்டம் இது. இனி நான் கூடுதலாகச் சொல்ல விரும்புவது:
ஒரு வாதத்திற்காக இப்படிப்பட்ட திட்டங்கள் தேவையில்லை என்று நிராகரிப்பதானால், விலைவாசி வெப்பத்திலிருந்து ஓரளவுக்காவது மக்களுக்கு நிழல் தரும் குடையாக இருக்கிற பொதுவியோக முறை (ரேசன் கடை), தனியார் மருத்துவ நிறுவனங்களின் கொள்ளையிலிருந்து ஏழைகள் தப்பிக்க உதவும் அரசு மருத்துவமனைகள், எளியவீட்டுக் குழந்தைகள் நுழைய இனறைக்கும் கதவு திறக்கக்கூடியதாக இருக்கிற அரசுப்பள்ளிகள், புலம்பெயர்வதைத் தடுக்க உதவும் ஊரக வேலை உறுதிச் சட்டம் போன்ற அனைத்தையுமே எதிர்க்க வேண்டியிருக்கும். இந்தப் பாதுகாப்புகள் கூட இல்லாமல், இந்தச் செலவினங்கள் கூட இல்லாமல் முழுக்க முழுக்கக் பெருமுதலாளிகளும் நிலப்பிரபுக்களும் உலகச்சந்தை தாதாக்களும் வேட்டையாடிக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா?