Thursday, 21 March 2013

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றி இலக்கியங்கள் :


மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றி இலக்கியங்கள் :

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் புகழ்பாடும் இலக்கியங்கள் மயூரகிக் கோவை, சிவகங்கை சரித்திரக்கும்பி, சிவகங்கைச் சரித்திர அம்மானையாகும். இவையனைத்தும் மருதுபாண்டியர்களின் புகழை பார் போற்ற எடுத்துறைக்கிறது

மயூரகிக் கோவை
இக்கோவை நூலின் ஆசிரியர் சாந்துப் புலவராவார். இவர் மருதுபாண்டியர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது மட்டும் தெரிகிறது. அவர் எவ்வளவு காலம் இருந்தார் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. இவர் தந்தை சர்க்கரைப் புலவர். இவர் இராமநாதபுரம் அரசவையில் அணுக்கனப் புலவராய் இருந்தவர். இவரின் பாடல்களில் மொத்தம் 536 கட்டளைக் கொண்டது. அதில் 14 பாடல்கள் பெரிய மருதுவின் புகழ் பாடுபவையாகும். இந்நூலை இயற்றியதற்காகக் காளையார் கோவில் அருகிலுள்ள சாத்தரசன் கோட்டை சமீபத்தில் உள்ள மகுதன்குடி என்னும் சிற்றூரை தானமாக மருதரசர் புலவருக்கு வழங்கியதாக ஆதாரம் உள்ளது.

செவிவழிச் செய்தியாக 1938ஆம் ஆண்டில் மருது சகோதரர்களைப் பற்றி உ.வே. சாமிநாத ஐயர் செவிவழியாகக் கேட்ட இரண்டு செய்திகளை எழுதியிருக்கிறார். 'முள்ளால் எழுதிய ஓலைமருதுபாண்டியர் ஆகிய தலைப்புகளில் அவர் கூறும் செய்திகள் :

ஆங்கிலேயரின் தாக்குதலுக்குத் தப்பிக் காடுகளில் மறைந்து வாழ்ந்த பெரிய மருது ஒரு முறை திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் சிலந்தி நோயால் துன்புற்றுக் கொண்டிருந்தார். பகைவரின் ஆட்கள் அவரைத்தேடி அந்த ஊர் எல்லைக்குள் வந்துவிட்டனர் என்னும்செய்தியை அவரது நம்பகமான வேலையாள் தெரிவித்தார். மருதுபாண்டியர் ஓர் ஆடையைக் கிழித்துச் சிலந்தியை இறுகக்கட்டிக் கொண்டு தம் வளரியின் துணையுடன் குதிரை மீதேறி அவ்வூரினின்றும் அகன்றார். பின் குதிரையில் தப்பித்து ஒரு சிற்றூரை அடைந்தார்.

அவ்வூரை அடைந்த போது அவரைப் பசி வாட்டியது. ஒரு வயதான மூதாட்டி அவரை யார் என்று தெரியாமலேயே பழைய கூழுணவை அவருக்கு அளித்தார். உணவை உண்டபின் அயர்வினைப் போக்குவதன் பொருட்டு அம்மூதாட்டியின் வீட்டுக் கொட்டகையில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் அம்மூதாட்டிக்கு நன்றிக் கடனாக ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினார். தம்முடன் வந்த குதிரைக்காரனிடம் அவ்வீட்டு கூரையிலிருந்து ஓர் ஓலையையும், வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் செய்தார். அம்மூதாட்டிக்கு அவ்வூரை அளிப்பதாக எழுதிக் கொடுத்தார். அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் கொடுத்தால் வேண்டிய நன்மை கிடைக்கும் என்று கிழவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

வெளியூருக்குச் சென்றிருந்த தம் மக்கள் வந்தவுடன் அவர்கள் வழியாக அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காண்பித்து மூதாட்டி உதவி பெற விரும்பினார். ஆனால் அதற்குள் பெரியமருதுவை ஆங்கிலேயர்கள் கைதுசெய்து தூக்கிலிட்டனர். அவர் தூக்கிலேறுவதற்கு முன் 'தாம் செய்த அறக்கொடைகள் தொடர வேண்டும்என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆங்கிலேயர் உறுதி கொடுத்தனர். இந்தச் சூழலில் மூதாட்டி அவரிடமுள்ள ஓலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காண்பித்து அவர் வாழ்ந்த சிற்றூரை தானமாகப் பெற்றார். அச்சிற்றூர் இன்னும் பழஞ்சோற்றுக்குக் குருநாதனேந்தல் என்ற பெயருடன் விளங்குகிறது. தமக்கு ஓலை எழுதிக் கொடுத்தவர் பெரிய மருதாம் என்பதை அவர் இறந்தபின் தான் அறிந்து உள்ளம் உருகினார் அந்த மூதாட்டி .

வஞ்சகனுக்கும் ஒரு சிலை :
வலையன் ஒருவன் பெரிய மருதுவுக்கு நெருக்கமானவனாக இருந்தான். அவன் பெயர் கரடிக்கருத்தான் என்பதாகும். பெரியமருது வேட்டைக்குச் செல்லும் போதெல்லாம் அவனும் உடன் செல்வது வழக்கம். அவனது வேட்டைத்திறமை பெரிய மருதுவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு முறை இருவரும் வேட்டைக்குச் சென்றனர்.
அவன் மட்டும் தனித்து ஒரு விலங்கினைத் துரத்திச் சென்றான். நீண்ட நேரம் அவன் திரும்பாமல் இருந்ததைக் கண்ட பெரிய மருது வேதனை கண்டார். ஆனால் வெகுநேரம் கழித்து அவ்வலையன் ஒரு பெரிய கரடியைத் தோளில் தூக்கிவைத்து அவர் காலடியில் போட்டான். போர்க்களத்தில் அவன் மருது சகோதரர்களுடன் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டான். அவனது வீரத்தை பாராட்டும் வகையில் காளையார் கோயில் பழைய கோபுர வாயிலின் வலப்புறத்தில் பெரிய மருது அவனின் சிலையை வைத்தார். அச்சிலையில் அவன் கையில் துப்பாக்கி வைத்து இருப்பதை காணலாம். இத்தகைய வீரனே பிற்காலத்தில் பணத்துக்காகப் பெரிய மருதுவைக் காட்டிக் கொடுக்கும் வஞ்சகனாக மாறினான். பெரிய மருதுவும், சின்ன மருதுவும் வளரி வீசுவதில் வல்லவர்கள். வளரி என்றும் ஆயுதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆற்றலும், திறமையும் படைத்த ஒருவர் முன்னூறு அடி தூரத்தில் உள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை ஆச்சரியப்படத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வீழ்த்திவிடலாம். ஆங்கிலேயத் தளபதி கர்னல் வேல்ஷ், சின்ன மருதுதான் முதன் முதலாக ஈட்டி எறியவும், வளரியைச் சுழற்றி எறியவும் தனக்குக் கற்றுக் கொடுத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன மருதுவைப் போலவே, பெரிய மருதுவும், வளரி எறிவதில் வல்லவராகவும் நிகரற்றவராகவும் விளங்கினார். ஒரு முறை பெரிய மருது மதுரை சென்றிருந்தார். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளத்திலிருந்து வளரியை வீச ஆயத்தங்கள் செய்தார். பெரிய மருது தெப்பக்குளத்தில் நின்று கொண்டு தனது கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றிக் கொண்டு, வளரியை வேகமாக விட்டெறிந்தார். அவர் எறிந்த வளரி மாரியம்மன் தெப்பக்குளத்தின் நடு மண்டபத்தைத் தொடாமல் அக்கரையில் போய் விழுந்தது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு மருதரசன் தனது மூச்சைப் பிடித்து வளரியை மிக வேகமாக எறிந்த வேகத்தில் அவர் இடுப்பில் கட்டியிருந்த தங்க அரைஞான் தெரித்து விழுந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் தான் சென்ற 31-10-2007 அன்று முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மருது பாண்டியர்களின் சிலையை அவர் கைப்பட திறந்து வைத்தார். வாழ்க நம் முக்குல தெய்வங்கள் நம் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள்