கற்பழிப்பும் கொலையும் மனித வேட்டையும் சித்திரவதையும் இங்கு தேசிய விளையாட்டுகளாய் மாறிப் போனது..! ஈரணியினரும் விளையாட்டு வீரர்களாய் மாறிப் போனார்கள்..?
இங்கு வானத்திலிருந்து பொழிந்ததெல்லாம் மூன்று மட்டும் தான் வெடி குண்டுகள்.. உணவு பொட்டலங்கள்.. எப்போதாவது மழை.. !
இரவில் குழந்தையை தூங்க வைக்க 'தாலாட்டு'ப் பாடிய தாய், காலையில் குண்டடிபட்டு நிரந்தரமாய் தூங்கிப் போன குழந்தைக்கு 'ஒப்பாரி'ப் பாடுகிறாள் ஐயகோ தமிழா..
பிணங்களின் தேசத்தில் பால் முகம் மாறாத பாலகனும் பகடைக் காயானான்.. சுடுகாட்டு அரசனின் பிணந்தின்னிக் கழுகுகளால் உயிரற்றுப் போனான்... ஐயோ தமிழா...
இங்கு கொன்றொழிக்கப்பட்டது. தமிழினம் மட்டுமல்ல.. யுத்த தர்மங்களும் தான் !
இப்படி உதைத்தாலும், கொன்று சிதைத்தாலும், கேட்கத் துப்பற்றுப் போக 'தமிழன்' என்ற சொல் தான் காரணமா ?
"அழைக்கும் தூரத்தில் 'ஆறு கோடி' உறவுகள் வாழ்ந்தார்களாமே..! அழித்தொழிக்கப்பட்டு அனுதினமும் ஒலித்த அன்பின் அழுகுரல் ஓலங்கள்.. அவர்களின் புலன்களில் விழவில்லையா.? ஆத்திரத்தால் பொங்கி எழவில்லையா.?"
கேள்விக் கணை தொடுக்க காத்திருக்கிறது.. எதிர் கால சரித்திரப் பக்கங்கள் !
உரிமைக்காக போராடி உயிர்களை விதைத்திருக்கிறது தமிழினம்.. அறுவடை செய்யப்படுமா விரைவில் தமிழீழம்.!
இளைய பட்டாளமே.. சமர் கண்ட பூமியின் சரித்திரம் மாற்றலாம் வா.. இந்திய இராஜாங்கத்தின் பொய்யுறக்கம் கலைக்கலாம் புறப்படு...
சந்தர்ப்பவாத அரசியல் தொலைத்து சர்வதேச சமாதானக் கரங்களை பற்றிக் கொண்டு 'மத்திய அரசு' சத்தியமிட்டுச் சொல்லட்டும்.. தனி ஈழம், தமிழனுக்கென்று.!
இல்லையெனில் இலங்கைத் தமிழர்களின் இறுதி யுத்தம் இளகிப் போனாலும் கூட இன்னும் இது 'கண்ணீர் தேசம்' தான்.!
இந்த கண்ணீர் தேசத்தின் கண்ணீரை நமது கண் முன்னே எழுத்தின் மூலம் நமக்கு
தந்த கீழை இளையவன் அவர்களுக்கு மற்றும் ஒருமுறை இன்று ஒரு தகவல் குழு
சார்பாக நமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம் .