Saturday 23 March 2013

தமிழனுக்காக தமிழ்நாட்டில் போய்ப் போராடு, ஆந்திராவில் அல்ல: IPS அதிகாரி !

தமிழனுக்காக தமிழ்நாட்டில் போய்ப் போராடு,
ஆந்திராவில் அல்ல: IPS அதிகாரி !
******************************************
வணக்கம் !

இலங்கைத் தமிழர் விவகாரம் முதல், தமிழ்மீனவர் தாக்கப்படுவது வரை கண்ணைத் திறந்து பார்க்காமல், காது கொடுத்தும் கேட்காமல் காலம் காலமாக சுயலாபத்தைக் கணக்கில் கொண்டு தமிழனை பிரித்து வைத்து வருகிறது நமது இறையாண்மை மிக்க இந்திய அரசு என்பதை யாவரும் அறிவோம். இலங்கையிலும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் தமிழன் ஒடுக்கப்படுகிறான் என்பதற்கு அத்தாச்சியாக எங்களது இன்றைய அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

ஒட்டு மொத்த தமிழ்நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளி மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று இந்தியா முழுதும் பரப்பும் விதமாக, சில எதிர்ப்புகளுக்கிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (17/3/13) ஹைதராபாத்தில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை நாங்கள் மேற்கொண்டோம். இந்தப் போராட்டம், நம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அவசியத்தை ஓரளவிற்கு மற்ற மக்களுக்கும் எடுத்துச் சென்றது. இதை மேலும் விரிவுபடுத்தும் விதமாகவும், உயிரைக் கொடுத்து போராடும் நம் மாணவர்களை ஆதரிக்கும் விதமாகவும் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தோம்.

அதன்படி, இன்று காலை பதினோரு மணிக்கு கிளம்பி, நானும் ராஜா என்ற நண்பரும், ராம்கோபால் பேட்டை காவல் நிலையத்தை அடைந்தோம். எங்களுடன் அப்துல் காதர் என்ற நண்பரும் இணைந்து கொண்டார். மணி பனிரெண்டு. அங்கே உள்ள துணை ஆய்வாளரை சந்தித்து, எங்களது போராட்டத்தைப் பற்றியும் அதற்கான அவசியத்தைப் பற்றியும் விளக்கினோம். அதை நன்கு புரிந்து கொண்ட அவர், நாங்கள் கொடுத்த கடிதத்தில் சில மாற்றங்களைச் செய்து கொண்டு, மதியம் இரண்டு மணிக்கு வாருங்கள், ஆய்வாளர் வருவர் என மிகவும் நம்பிக்கையோடு பேசினார்.

இன்று நான் அலுவலகம் போகவில்லை. அப்துல் காதர் அவரது உணவகத்தை திறக்கவில்லை. மதியம் அலுவலகம் முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று LKG படிக்கும் தனது குழந்தையை கவனிக்க வேண்டிய கட்டாயம் ராஜாவிற்கு. காவல் நிலையத்திற்கு வரும் பொழுதே காதர் பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தார். குழந்தைகளுடன் அவரது தாய், மனைவியும் கூட இருந்தனர். அவர்களை காரில் விட்டு விட்டு, 2.30 வரை நாங்கள் காத்திருந்தோம். வேறு வழியின்றி போக மனமில்லாமல் ராஜா தனது குழந்தைக்காக அப்போது சென்று விட்டார்.

எங்களது காத்திருப்பு நீண்டது. குழந்தைகள் முதல், யாரும் மதிய உணவு கூட எடுத்துக் கொள்ள முடியாத சூழல். மாலை நான்கு மணி... ஆய்வாளர் வந்தார். உள்ளே போனவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. இன்னும் அரைமணி நேரம் காத்தோம். பிறகு, அந்த காவல் நிலையத்தின் எழுத்தாளர் எங்களை அழைத்து, நீங்கள் DCP யை போய்ப் பாருங்கள் என்றார். வேறு வழியின்றி DCP அலுவலகத்திற்கு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றோம்.
சற்று நரத்தில் அந்த IPS அதிகாரியைப் பார்க்க அனுமதி கிடைத்து. உள்ளே சென்றோம்.

ஆங்கிலத்தில் தொடர்ந்த எங்களுக்கு இடையிலான உரையாடல் தமிழில்..

நான் மற்றும் தோழர் காதர்: வணக்கம் ஐயா

DCP: என்ன விடயம் ?

நான்: ஐயா, 2009 இல் சிறிலங்காவில் 1,40,000+ தமிழ்ப் பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் நீதி வேண்டி தமிழகத்தில் மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஆதரிக்கும் விதமாக....

DCP: போரடனும்னா தமிழ்நாட்டுல போயி போராட வேண்டியதானே ?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று என்னக்குத் தெரியவில்லை.. இருந்தும் தொடர்ந்தேன்...

நான்: ஐயா, இன்று ஐ.நா பேரவையில் இந்த இனப்படுகொலை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். விவாதத்தின்போது இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்கள் சேர்க்க இந்தப் போராட்டம் சிறிய அளவிலாவது உதவும்...

DCP: போரடனும்னா தமிழ் நாட்டுல போயி போராட வேண்டியதானே ? இங்க போரடவெல்லாம் அனுமதி தரமுடியாது. அதான் இன்னைக்கு அந்த தீர்மான நிறைவேற்றப் பட்டதே ?

நான்: ஐயா, தீர்மானம் எப்படியும் நிறைவேறும். ஆனால் அது ஈழத் தமிழர்களுக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். அதோடு தமிழ் என்று உணர்வோடு மட்டுமில்லாமல் மனித நேயத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் நீதிக்காக நாங்கள் நடத்தும் போராட்டம் இது. தயவு செய்து அனுமதி தாருங்கள். எங்கள் போராட்டம் மெழுகு வர்த்தி ஏந்தி ஊர்வலமாகப் போகும் அமைதி வலிப்போரட்டமாகவே இருக்கும். எங்களுக்குதேவையானது வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே.. தயவு செய்து அனுமதி தாருங்கள்.

DCP: ஏற்கனவே இங்க தெலுங்கான போராட்டம் இருக்கு. அதெல்லாம் தரமுடியாது. நீங்க தமிழ் நாட்டுக்கு போய்ப் போராடுங்கள் என மீண்டும் மீண்டும் அதே வார்த்தையில் அழுத்தம் காட்டினார்.

நான்: உங்கள கெஞ்சிக் கேக்குறேன் ஐயா, அனுமதி தாருங்கள்.

DCP: முடியாது..

கடைசியில் எங்கள் கடிதத்தை வாக்கிக்கொண்டு, நீங்கள் கிளம்புங்கள், அனுமதி இல்லை என்றார். வேறு வழியின்றி வெளியேறினோம்.

இந்த உரையாடலுக்குப் பின், நாம் இந்தியனா தமிழனா என்ற கேள்வி எங்களுக்குள் உதித்தது. தமிழனுக்காக தமிழ்நாட்டில் போராடு இங்கே கூடாது என்று சொல்லி அனுமதியை மறுப்பது இது முதல் முறையல்ல. சென்ற முறையும் அனுமதி கோரியபோது இதே பதில்தான். இரண்டு முறையும் எங்கள் கடிதங்களை அவர்கள் படிக்கக்கூட இல்லை. இவர்களைப் பார்க்க நாள் முழுதும் குழந்தைகளுக்கு உணவு கூட கொடுக்க இயலாமல் அனைவரும் பட்டினியாக காத்திருந்தோம்.

தமிழன் என்று சொன்னால், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் காந்திபிறந்த நாட்டில், உலகின் மிகப்பெரும் குடியரசு நாட்டில், 8 கோடி தமிழர்கள் கொண்ட நாட்டில், எம் மக்களுக்காக ஒன்றரை மணி நேரம் கூட போராட எனக்கு அனுமதி கிடைக்க வில்லை யென்றால் நான் எதற்கு இந்தியன் என்று சொல்ல வேண்டும் ? தமிழனுக்காக தமிழ் நாட்டில் தான் நான் போரட வேண்டுமேன்றால் நான் ஏன் இந்தியன் என்று சொல்ல வேண்டும் ? ஒரு டெல்லிப் பெண்ணிற்காக போரடா இங்கே அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆயிரம் ஆயிரம் தமிழச்சியின் ஆத்மாக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இரண்டு கேரள மீனவன் கொல்லப்பட்டதற்கு வாய்கிழியப் பேசும் இந்தியா. இதுவரை 554 தமிழ் மீனவன் கொல்லப்பட்டதற்கு ஒரு கட்டணம் கூட சொல்லவில்லையே. தினம் தினம் தாக்கப்படும் மீனவர்களை பற்றி கவலைப்படவே இல்லையே. இனி நான் எதற்கு இந்தியன் என்று சொல்ல வேண்டும் ? தனித்த தமிழ்நாடு என்போரை இந்திய இறையாண்மைக்கு எதிரானவன் என்று சொல்லும் நீங்கள், தமிழ்நாட்டுக் காரனுக்காக அங்கே போய்ப் போராடு என்று சொல்வது தான் நீங்கள் கடைபிடிக்கும் இறையாண்மையா ? வேற்றுமையில் ஒன்றுமை என்பது இதுதானா ?

சட்டம் ஒழுங்கு சீர்குலையும், குண்டுவெடிப்பு அபாயம் இருக்கிறது என்று அனுமதி மறுப்பதற்கு மற்ற காரணங்களைக் கூறி இருந்தால் நான் மனதார ஏற்றுக் கொண்டிருப்பேன். அதோடு இந்த வாசகத்தைச் சொல்லியவர், ஒரு விவரமறியா அடிமட்ட கடைக் குடிமகனாக இருந்தால் பரவாயில்லை. சொன்னது ஒரு IPS அதிகாரி. இந்திய அரசாங்கத்தால் இந்தியன் என்ற அடையாளத்தோடு இந்தியர்களுக்காக நியமிக்கப் பட்ட ஒருவர். அவர்கள் தமிழன் என்று பிரித்துப் பார்க்கும்போது, என்னை எவ்வாறு இந்தியன் என்று சேர்த்துப் பார்க்கச் சொல்கிறீர்கள் ?

சொந்த இனத்தையே கொத்துக் கொத்தாக கொல்லப் துணைபோன, அவர்களுக்கு கிடைக்கும் நீதியையும் அடித்து பறிக்கும் அரசியல் உள்ள நாட்டில், என்னால் எவ்வாறு இனி இந்தியன் என்று சொல்ல முடியும் ?. அரசு வேறு அரசாங்கம் வேறு என்று சிலர் வாதிடலாம். அதற்காக மொத்த இனத்தையே பலிகொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

இதுவரை ஒரு முறை கூட நான் இந்தியனல்ல என்ற சிந்தனை எனக்கு வந்ததில்லை. இன்று அவ்வாறு சிந்திக்க வைத்த பெருமை, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாய்ச் சொல்லும் இறையாண்மை மிக்க இந்தியாவையே சேரும்.



via - World Wide Tamil People