Wednesday, 6 March 2013

அதிக பாடல் பெற்ற தலம் :


தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது.

சம்பந்தர் 55 பாடல்,
அப்பர் 208 பாடல்,
சுந்தரர் 87 பாடல்,
மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.

திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும் :
சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான்.

பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், "என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது' என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களை காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன.

கிரகங்கள் பக்தர் களுக்கு தொல்லை கொடுக்கிறதா என்பதை கண்காணிக்க விநாயகர் சிலை கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவே தான் "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்' என்பார்கள்.

நாற்பெரும் விநாயகர் : தியாகராஜர் கோயிலில் 84 விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள, நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள்.

மேற்கு கோபுரத்தின் அருகில் சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன், நிஜத்தங்கம் தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த, "மாற்றுரைத்த விநாயகர்' அருள்பாலிக்கிறார். நகை வாங்கும்முன் பெண்கள் இவரை வழிபடுகின்றனர்.

சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு.

சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி. இந்த விநாயகர் முன்பு நின்று தான், திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் "வாதாபி கணபதிம்' எனத் தொடங்கும் பாடலை பாடினார்.

சந்திரனை தலையில் சூடிய அம்பிகை : திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடி யிருக்கிறாள். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.

வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.

உதிரிப்பூக்கள் : சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்' எனக் கூறி முடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோயில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு. ஆனால், சிதம்பரம் கோயிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக்கோயிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.

சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டிதன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோயிலின் ஸ்பெஷாலிட்டி. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்குள்ள உற்சவ அம்மன் "மனோன்மணி'க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.

கமலாம்பிகை கோபுரத்தின் உச்சியில் "ஆகாச பைரவர்' காவல் காத்து வருகிறார்.

இங்குள்ள பைரவர் "சித்தி பைரவர்' எனப்படுகிறார்.

அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது.

சிவன் சன்னதியின் பிரகாரத்தில் மிகப்பெரிய "சிவசூரியன்' அருள்பாலிக்கிறார்.

கடன் தொல்லை உள்ளவர்கள், இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு.

வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ராஜநாராயண மண்டபத்தில் தான், தியாகராஜர் திருவாதிரை தினத்தில் பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.

இங்கு அஷ்ட துர்க்கை சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும்,மகாலட்சுமியையும் முத்துசுவாமி தீட்சிதர் பாடியுள்ளார். அட்சய திரிதியை, தீபாவளி நாட்களில் இங்குள்ள மகாலட்சுமிக்கு நாணயங்களால் சொர்ண அபிஷேகம் செய்வது சிறப்பு.

அம்மன் சன்னதி வெளிப்பிரகார சுவரில் 6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக நான்கு சீடர்களே இருப்பர்.

மகனை தடவி கொடுக்கும் தாய்:தியாகராஜர் கோயிலில், அம்பிகையான நீலோத்பலாம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு அருகில் ஒரு தோழி நிற்கிறாள். அவள் தோளில் முருகன் இருக்கிறார்.

முருகனின் தலையை அம்மன் தடவிக்கொடுக்கும் விதத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வீணையில்லாத சரஸ்வதி :சரஸ்வதி வீணை வைத்திருப்பது வழக்கம். ஆனால், திருவாரூர் சிவன் சன்னதி பிரகாரத்தில் வீணை இல்லாத சரஸ்வதியை தவக்கோலத்தில் காணலாம். இவள் சிவனை நோக்கி தவமிருக்கிறாள்.

ஹயக்கிரீவரும் தனி சன்னதியில் லிங்க பூஜை செய்யும் காட்சியைக் காணலாம். இவரை "ஹயக்கிரீஸ்வரர்' என்கின்றனர். இந்த இருபெரும் கல்வி தெய்வங்களையும் மாணவர்கள் பூஜித்தால், படிப்பில் கவனம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

மனுநீதிச்சோழன்:தேவலோகத்தில் யார் நேர்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டது. எமதர்மராஜன் "நானே நேர்மையாளன்' என்றார். நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார். இதனால் எமன் பசுவாக வடிவெடுத்து, ஒரு கன்றுடன் திருவாரூர் ராஜவீதிக்கு வந்தார்.

அப்போது மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரில் வந்தான். வேகமாக வந்த தேரில் சிக்கி, கன்று இறந்தது. இதையறிந்த பசு மன்னனின் அரண்மனைக்கு சென்று நீதி கேட்டது. கன்றை இழந்த பசு எவ்வளவு வேதனைப்படுமோ, அதே வேதனையை தானும் பட வேண்டும் என்பதற்காக தன் மகனை தேர்ச்சக்கரத்தில் ஏற்றி கொன்றான் சோழன்.

பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்து "நீயே நேர்மையானவன்' எனக் கூறி மறைந்தார். இந்த காட்சியை விளக்கும் கல்தேர் கோயிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

நிற்கும் நந்தி : சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலை களை படுத்த கோலத்திலேயே காண முடியும். ஆனால், திருவாரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள சப்தவிடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம். மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசல் பிரச்னையில் தியாகராஜர் : கிழக்கு பார்த்து அமைந்த கோயில்களில், சுவாமி வீதிஉலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார். ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.

இந்திரனிடம் பெற்ற லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார். அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான். எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம்.

இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாக ராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கோயிலுக்குள் நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லலிதாம்பிகை தோன்றிய தீர்த்தம் : லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்' எனப்படுகிறது.

பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

தினம்தோறும் பிரதோஷம் : பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

இதை "நித்திய பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.