Tuesday, 27 September 2011

உடல் பருமனடையாமல் எடையை அதிகரிக்க...


பொதுவாக உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் அளவுக்கு அதிகமாக கொழுக்ப்பு சத்துள்ள உணவு வகைகளை உண்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்வது மட்டுமல்லாமல் உடல் பருமனையும் அதிகரித்துவிடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் உடல் பருமனடையாமல் எடையை மட்டும் அதிகரித்துக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன. இதற்கான உணவுப் பழக்க வழக்கங்களை குறைந்தபட்சம் இருபத்தியொரு நாட்கள் கடைபிடிக்கலாம். அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பாஸ்ட் புட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் மால்ட் நல்லது.

உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம். ஒரு கைப்பிடி உலர் பழங்கள், ஒரு கப் தயிர், அவித்த சோளம், கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம். மாலையில் இனிப்பான பிரெட், சர்க்கரை இல்லாத மில்க்க்ஷேக், பால், முட்டை கலந்த ப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றினை உட்கொள்ளலாம். இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.