Friday, 30 September 2011

தேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜக் கழுதை

அரசியலில் நிறுத்தப்பட்டு உள்ளது கழுதை ஒன்று. நம் நாட்டில் அல்ல. பல்கேரியாவில். இங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற உள்ளது.
Varna என்கிற நகரத்தின் நகர பிதா பதவிக்காக இக்கழுதை போட்டியிடுகின்றது. கழுதையின் பெயர் மார்கோ. புதிய பல்ஜீரியாவுக்கான சமூகம் என்கிற கட்சிதான் முதல்வர் வேட்பாளராக கழுதையை நிறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளது.
தற்போதைய முதல்வர் Mayor Kiril Yordanov இற்கு எதிரான பிரதம வேட்பாளராக கழுதை போட்டியிடுகின்றது என்று புதிய பல்ஜீரியாவுக்கான சமூகத்தினர் அறிவித்து உள்ளனர்.
தற்போதைய முதல்வருக்கும் போட்டிக்கு நிற்கின்ற கழுதைக்கும் இடையிலான முக்கிய ஒற்றுமையாக எஜமானரின் சொல் கேட்டு நடப்பர் என்கிற அம்சம் இவர்களால் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

ஆனால் கழுதை மார்கோவுக்கும் தற்போதைய முதல்வர் உட்பட ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இடையிலான வித்தியாசங்கள் ஏராளம் என்றும் இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
மார்கோ மிகவும் தைரியசாலி, பொய் சொல்லாது, திருடாது, ஊழல் செய்யாது, வேலையை ஒழுங்காக செய்யும் போன்றனவே இவ்வித்தியாசங்கள்.
மார்கோ தேர்தலில் நிறுத்தப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் சிலவற்றையும் கூறுகின்றனர். நாய்க்கு அடுத்த படியாக மனிதனுக்கு மிகவும் நன்றி உள்ள மிருகம் கழுதை.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி மார்கோ பிறந்து இருக்கின்றது. அதாவது பல்கேரியாவில் Todor Zhivkov இன் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த நாள் அது.
அத்துடன் 20 வயதைப் பூர்த்தி செய்து இருப்பதால் அந்நாட்டு சட்டப்படி தேர்தலில் போட்டியிடுகின்ற அருகதையை உடையது. நகரத்தின் பச்சைப் பசேல் என்ற இடங்கள் அழிந்து போவதால் மார்கோவின் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்று இன்னொரு காரணமும் காட்டப்படுகின்றது.


இக்கழுதையை முன்னிறுத்தி புதிய பல்ஜேரியாவுக்கான சமூகத்தினரால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு கழுதையை சக போட்டியாளராக கருதுகின்றமை முடியாது என்று கூறுகின்றார் தற்போதைய முதல்வர்.
இவர் முன்பு புதிய பல்ஜேரியாவுக்கான சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அண்மையில்தான் ஆளும் மத்திய அரசின் பக்கம் தாவிக் கொண்டார்.
இவருக்கு எதிராக கழுதை ஒன்று வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது மத்திய அரசை பரிகாசம் செய்கின்ற நடவடிக்கையாகவும் உள்ளது.