Tuesday, 13 September 2011

ரஜினியின் வாழ்க்கை படமாகிறது:


ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் திரைப்படமாகத் தயாரிக்கின்றனர். ஆனால் இந்தப் படத்துக்கு தாங்கள் எந்த வகையிலும் அனுமதி வழங்கவில்லை என்று ரஜினி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரஜினியின் சிறு வயது வாழ்க்கை பஸ் கண்டக்டராக பணியாற்றிய நிகழ்வுகள், சினிமா பிரவேசம் திரையுலக வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து ரஜினி வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கிறார் பிரபல இந்தி தயாரிப்பாளர் அதுல் அக்னிஹோத்ரி.

வேண்டாம் சல்மான்கான்!

இதில் ரஜினி வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சல்மான்கானை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரஜினி வேடத்துக்கு சல்மான்கான் பொருந்துவாரா? என்பதில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்தி திரையுலகில் சல்மான்கான் பிரபல நடிகராக இருந்தாலும் ரஜினிக்கு இணையாக அவரை வைத்துப் பார்ப்பதை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். "ரஜினி வேடத்துக்கு சல்மான் எந்த வகையிலும் பொருத்தமானவர் அல்ல என்றும், ரஜினி வேடத்துக்கு இன்னொருவரை கற்பனை கூட செய்ய முடியாது. இன்னொன்று ரஜினி வாழ்க்கையை ஒரு செய்திப்படமாகத்தான் இப்போது தொகுக்க வேண்டும். வேறு நபரை வைத்து எடுப்பதை அனுமதிக்கக் கூடாது," என நடிகர் பிரசன்னா பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

ரஜினியின் நண்பரான நடிகர் எஸ்.வி.சேகர் கூறும்போது, "ரஜினி தனது வாழ்க்கை கதையை படமாக்க சம்மதிக்க மாட்டார் என்று கருதுகிறேன். இந்தியில் இப்படத்தை எடுப்பதாகவும் ரஜினி வேடத்தில் சல்மான்கான் நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள். இதை நிச்சயம் ரசிகர்கள் ஏற்கவே மாட்டார்கள்", என்றார். ரஜினி வேடத்தில் சல்மான்கானை நடிக்க வைப்பதை தாங்கள் விரும்பவில்லை என ஏராளமான ரசிகர்கல் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாங்களே எடுப்போம் - சௌந்தர்யா

இதற்கிடையே, இந்தப் படத்தை எடுக்க தாங்கள் எந்த வித அனுமதியையும் தரவில்லை என்று ரஜினியின் குடும்பத்தினர் நேற்று தெரிவித்துள்ளனர். அதுல் அக்னிஹோத்ரி தங்களுக்கு எந்த ஸ்கிரிப்டும் தரவில்லை என்றும், ஒரு வேளை தந்தாலும் அதற்கு அனுமதி தரமுடியாத நிலையில் இருப்பதாகவும் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினி தெரிவித்தார். மேலும் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க தாங்களே முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். சக நடிகர்கள், ரசிகர்கள் எதிர்ப்பு மற்றும் ரஜினி குடும்பத்தின் அனுமதி மறுப்பு காரணமாக ரஜினி வாழ்க்கை வரலாற்றை சல்மானை வைத்து படமாக எடுப்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.