திருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான். ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களாக தேடிப்பிடித்து பரிசளிப்பது உண்டு.
சரி இத்தகைய வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி அதனை நண்பர்களுக்கு விழாக்களின் போது பரிசளிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? “விஸ்டம் ஆப் அதர்ஸ்” இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.
விஸ்டம் ஆப் கிரவுட் என்பது இப்போது இணைய உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கம். அதாவது இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொண்டு கூட்டத்தின்(மற்றவர்களின்) ஆலோசனையையும் அறிவினையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ளுதல் என்று பொருள்.
அதே போலவே மற்றவர்களின் வாழ்க்கை அனுபவ பாடங்களை திரட்டி அழகான வாழ்க்கை வழிகாடி புத்தகமாக உருவாக்கி அதனை பரிசளிக்க உதவுகிறது இந்த தளம்.
இந்த தளத்தின் செய்லபாட்டை பார்ப்பதற்கு முன்னர் இந்த தளம் உருவானதன் பின்னணியில் உள்ள கதையை தெரிந்து கொண்டால், இதன் நோக்கத்தையும் பயன்பாட்டையும் எளிதாக புரிந்து கொண்டுவிடலாம்.
இந்த தளத்தின் நிறுவனர்கள் கடந்த 2005 ம் ஆண்டு தங்களது நெருங்கிய நண்பர்களின் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்பிய போது எல்லோரும் நினைப்பது போல புதுமையான பரிசினை அளிக்க நினைத்தனர்.அதற்காக யாரும் செய்திராத ஒரு முயற்சியில் ஈடுபட்டனர்.
மண வாழ்க்கையை துவக்க உள்ள தம்பதிக்கு வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கான குறிப்புகளை பரிசளிக்க விரும்பினர். இந்த குறிப்புகளை தங்கள் வாழ்க்கையில் இருந்தும், தங்கள் நண்பர்களின் வாழ்கையில் இருந்துமே எடுக்க முற்பட்டனர்.
அதாவது தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையில் இருந்து அனுபவ சிதறலகளை சேகரித்து அதனை தொகுத்தளிக்க விரும்பி அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதினர். அந்த கடித்ததில் வெற்றிகரமான மன வாழ்க்கைக்கான வழிகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர்.
அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஆதரவு குவிந்தது. சிறு வயது நண்பர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து வெற்றிகரமான மன வாழ்கைக்கு தேவையான வழிகளை குறிப்பிட்டிருந்தனர்.
அவற்றில் சில நெகிழ வைத்தன. சில புன்னகைக்க வைத்தன. சில சிந்திக்க வைத்தன. சில அரிய ஆலோசனையாக இருந்தன, எல்லாமே அனுபவத்தின் பதிவாக அமைந்திருந்தன. இவற்றை படித்து நெகிழ்ந்து போன நிறுவனர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தொகுத்து புத்தகமாக்கி திருமண பரிசாக அளித்தனர்.
யாராலோ எழுதப்பட்ட வழிகாட்டி புத்தகங்களை விட இந்த புத்தகம் பயன் மிக்கதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் இருந்தது. அதோடு நண்பர்களின் பிரத்யேக பரிசாகவும் அமைந்தது.
இந்த அனுபவத்தால் நெகிழ்ந்து போன நிறுவனர்கள் தாங்கள் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வில் இதே போன்ற வழிகாட்டி புத்தகத்தை அனைவருமே உருவாக்கி பரிசளிப்பதற்கான வாய்ப்பாக இந்த இணையதளத்தை அமைத்தனர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவ பங்களிப்போடு புத்தகத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலம் அதை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் அளிமையானது.
முதலில் உறுப்பினராக சேர வேண்டும். அதன் பிறகு எந்த கேள்வியின் அடிப்படையில் புத்தகம் அமைய வேண்டும் என குறிப்பிட்டு அந்த கேல்வியை பேஸ்புக், டிவிட்டர் மூலம் நண்பர்களுக்கு அனுப்பி வைத்து பதில்களை திரட்டி புத்தகத்தை உருவாக்கி கொள்ளலாம்.
புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் பிழை திருத்தம் போன்றவற்றை எல்லாம் இந்த தளமே பார்த்து கொள்கிறது. அதன் பிறகு தேவையான பிரதிகளை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகமாகவும் தருவித்து கொள்ளலாம். இபுத்தக வடிவிலும் பெற்று கொள்ளலாம்.
விழாக்களுக்கு பரிசளிக்க, இப்படி நாமே நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கும் வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்கள் மிகச்சிறந்த வழி தான். குழந்தை வளர்ப்பில் துவங்கி பட்டப்படிப்பு, திருமண வாழ்க்கை என எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் இப்படி அனுபவத்தை திரட்டி அன்போடு பரிசளிக்கலாம்.
புத்தக வடிவில் பரிசளிக்க உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம் என்ற போதும் அனுபவ புத்தக்த்தை உருவாகி இணையத்திலேயே பகிர்ந்து கொள்ளும் கட்டண இல்லா வசதியும் இருந்தால் நன்றாக இருக்கும்.