Monday 18 May 2020

என் பங்கு சொத்து (சிறுகதைகள் சீ2 – 44)

 என் பங்கு சொத்து (சிறுகதைகள் சீ2 – 44)

#ganeshamarkalam



இப்படியெல்லாம் நடக்கும்னு யார் கண்டா? ஆனால் “ஆல் இஸ் வெல் தேட் எண்ட்ஸ் வெல்”னு சொல்லுவா. அதாவது தினம் தினம் நாய்பிழைப்பா கழிஞ்சாலும் கடைசீலே சாகரப்போ மெர்சிடீஸ் கார் நசுக்கி உயிர் போராப்புலே. அப்படி நடந்தால் “ஆல் இஸ் வெல்”ணு ஒத்துக்கமுடியுமா? அதான் நமக்கு அப்படி ஆகிடப்பிடாதுன்னு தீர்மானமா இருந்தேன்

வாழரச்சேயே நல்ல வாழ்வு வாழ்ந்துடனும்.



அதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்



நான் சீனுவாசன். திருவையாத்துலேந்து வேலைதேடி சென்னைக்கு வந்துட்டேன். அதிகம் படிப்பில்லை. பிகாம் பெயில். பாஸ் பண்ணலைன்னாலும் படிச்சது நினைவிருக்கே! கணக்கு வழக்குத்தெரியும். க்ரெடிட் டெபிட். கூட்டல் கழித்தல் தப்பில்லாம செய்வேன். நுணி நாக்கு இங்க்லீஷ் பேசுவேன். சட்டையை இன்பண்ணிண்டு பக்கிள்ஸ் வச்ச செறுப்பை மாட்டிண்டு MBA படிச்சவன் மாதிரி நடக்கத்தெரியும். ஆனால் எங்கே போனாலும் வேலை இல்லைன்னுட்டா. கடைசீயில் கிண்டி ரேஸ் கிளப்பில் வேலை கிடெச்சது. தினப்படிதான். அதுவும் சீசனில் மட்டும். ஆகட்டும் இப்போதைக்கு எடுத்துண்டு அப்புரமா பாத்துக்கலாம்னு.



என்ன வேலை? குதிரை பின்னாடியே ஓடணுமான்னு கேக்கப்பிடாது. கவுன்டரில் புன்டர்களுக்கு அவா கட்டற பணத்தை எண்ணிப்பாத்து வாங்கி சீட்டைக் கொடுக்கணும். ரேஸ் முடிஞ்சதும் ஜெயிச்சவா வந்து என் பணத்தைக் கொடும்பா. சீட்டை சரிபார்த்துட்டு ஜெயிச்சிருந்தான்னா கொடுத்துடணும். 6 ரேஸ் ஓடும். அப்புரமா எல்லாக் கணக்கு வழக்கு சரிபார்த்து லெட்ஜெரில் எழுதி ஆபீசில் கட்டணும். அன்னைக்கு வேலைக்கு காசு கொடுப்பா. வாங்கிண்டு வந்துடுவேன். சைதாப்பேட்டையில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் மேன்ஷனில் ஜாகை. கூட ஒருத்தன். வாடகையை சரிபாதியா கொடுத்துடுவன். இங்கேந்து கிண்டிக்கு ட்ரைனில் போய் வர சௌரியமா.



எங்கம்மா பட்டம்மா என்னை பெத்துட்டு போய் செர்ந்தா. உடனே கைக்குழந்தையா என்னை அப்பாகிட்டே விட்டுட்டுப் போனாளான்னு யோசிக்கப்பிடாது. SSLC முடிக்கரவரை கண்ணும் கருத்துமா பாத்துண்டா. திடீர்னு காய்ச்சல், மஞ்சக்காமாலை. 1 வாரம் உடம்பு நிறம்மாறி சித்தே கஷ்டப்பட்டா. அப்பாதான் உடெஞ்சு போயிட்டர்.



அப்பா ப்ரோஹிதம், சாதாரணக்குடும்பம். திருவையாத்தை மட்டும் நம்பி தொழில் செய்யமுடியாதுன்னுட்டு, தஞ்சாவூர், கபிஸ்தலம், கும்பகோணம்னு யாராத்து விசேஷத்துக்கு கூப்பிட்டாலும் போயிடுவர். கடை திறப்பு விழா, கிரஹப்பிரவேசம்னா லம்பா கிடைக்கும்.

சில மாசம் காசு வராட்டாலும் அம்மா பதவிசா குடுத்தனம் செஞ்சா. கொஞ்சம் மிச்சமும் பிடிச்சுடுவா. என்னை நல்ல படிப்பு படிக்க வைச்சுடணும்னு ஆசை.



“சீனு பெரீய வேலையில் உக்காந்து நம்ம கஷ்டத்தை போக்குவான்”. வாஸ்தவமான கனவு. அவள் நினெச்சது நடந்ததான்னு பாக்காம போய் சேர்ந்தாச்சு.



அப்புரம் எனக்கு படிப்பில் கவனம் போச்சு. பிகாமில் நான் வச்ச அரியர்ஸை பாத்துட்டு தஞ்சாவூர் காலேஜில் நான்தான் ந்யூஸ். “ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்புரம் வந்து பாக்கிரேன்.” அப்பாகிட்டே ஜம்பமா சொல்லிட்டு கிளம்பி வந்தேன். ஆண்பிள்ளை பொழச்சுப்பான்னு ஆசீர்வாதம் செஞ்சு அனுப்பிவச்சர்.



ஒரு வருஷம் ரேஸ் குதிரைகளையும் அதுமேலே காசைக்கட்டி அழிஞ்சு போனவாளையும் பாத்துண்டு இருந்தாச்சு. அப்புரம் எப்படியோ ஒரு தனியார் பேங்கில் எடுபிடி வேலை கிடெச்சது. சேர் போட்டு உக்காரலையே தவிர எல்லா வேலையும் தெரிஞ்சிண்டேன். அதுலேயும் இந்த நகைக்கடன் செக்ஷனில் எடைபோட்டு தரம் பாத்து கடன் எவ்வளவு தரலாம்னு சொல்ராளே அந்த சூட்சுமம் நன்னாவே புரிஞ்சது. அதைப் பாத்துக்கோன்னு என்னை உக்காத்தி வச்சுட்டா. கையில் சுளையா மாசம் 10ஆயிரம் ரூபாய். இதே திருவைய்யாத்தில் கிடெச்சா சந்தோஷமா இருக்கலாம், இங்கே 2000 வாடகைக்கே போயிடரது. அங்கே இங்கேன்னு பார்ட் டயிம் செஞ்சு இன்னும் 4000 கிடைக்க அப்படியே செட்டில் ஆயிடலாம்னு தோணித்து.



ஊருக்குப்போய் 2 வருஷம் ஆச்சு. ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டேன்.



நைட் திருச்சி பஸ்ஸில் ஏறி பெரம்பலூர் இறங்கி அங்கேந்து திருவையாறு. கொள்ளிடம் பாலம் தாண்டினதும் ஊர் வந்துடும். அம்மன் கோபுரத்துக்கிட்டே கார்த்தாலே 5 மணிக்கு இறங்கி பாவாஸ்வாமி அக்ரஹாரத்தில் நுழைஞ்சா 3ஆம் வீடு எங்களோடது. ஆத்து வாசலில் ஒரு 30 வயசு பொண் கோலம் போட்டுண்டிருக்கா. அப்பா வீடு மாத்திண்டு போயிட்டரா?



“சகாதேவன் வீடுதானே இது?” என் குரலைக்கேட்டு நிமிர்ந்து பாக்கரா. “சீனாவா?” “அமாம், நீங்க? உங்களுக்கு என்னை தெரியுமா?” “போடோவில் பார்த்தேன், உங்கப்பா என் பிள்ளைன்னு காட்டினர். உள்ளெ வாப்பா”



“நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே?”

“நான்தான் உன் சித்தி. உங்கப்பாவும் நானும் ரெண்டு மாசம் மின்னாடி கல்யாணம் செஞ்சுண்டோம்.”



எனக்கு எப்படீயிருக்கும் நினெச்சுப் பாருங்கோ. அப்படியே வாசத் திண்ணையிலேயே உக்காந்துட்டேன். வாசலில் ஏதோ குரல் கேட்டதேன்னு வந்த அப்பா கையைப் பிடிச்சு அழைச்சிண்டு போரார். “வரேன்னு ஒண்ணும் தகவலே சொல்லலை? வா, எப்படி இருக்காய்?” இவ்ளோ சகஜமா அவர் என்கிட்டே அம்மா இருந்தப்போகூட நடந்துண்டதில்லை. இப்போ என்ன ஏக்ட் விடரர்?



புரோகிதம் செஞ்சிண்டிருந்தவர் எப்படி ரெண்டாம் கல்யாணம்? அதுவும் சித்தி என்னவிட 2 வயசுதான் பெரியவள் மாதிரி பட்டது. இவாளுக்குள் 25 வயசு வித்யாசம் வருமே? அம்மா இருந்த இடத்தில் இவள் எப்படி? மனசு எப்படி வந்தது? இப்போ நான் என்ன பண்ரது? நீங்களே சொல்லுங்கோ? அதுக்கு பதில் சொல்ராப்புலே சித்தி “போ போய் குளிச்சுட்டு வா நல்ல காபியும் டிபனும் செஞ்சு தரேன் சாப்டுண்டே பெசலாம்”னா. என்ன பண்ணட்டும்னு தவிச்சவனுக்கு குளிக்கலாம்னு ஐடியா கிடெச்சதே!



ஒரு வாரம் அப்பாவோட இருந்துட்டுப் போலாம்னு வந்தவன் அன்னைக்கு ராத்திரியே கிளம்பிட்டேன். பஸ் ஸ்டேண்டுக்கு கூட வந்த அப்பா, “நான் கல்யாணம் செஞ்சுண்டது உனக்கு பிடிக்கலைன்னு நன்னாவே தெரியறது. வயசான காலத்தில் பாத்துக்க ஒரு துணை தேவைப்பட்டது, சகுந்தலா ரொம்ப ஏழைப்பட்ட பிராம்ணாவாத்து பொண், கல்யாணமே ஆகலை. எனக்கும் துணையாச்சு, அவளுக்கும் வாழ்க்கைன்னு கோவில்ல வச்சு தாலிகட்டி அழைச்சிண்டு வந்துட்டேன். இவள் அண்ணா எனக்கு பரிச்சயமானவர். இதனால் நம்ம உறவில் எந்த இடையூரும் கிடையாது. சகஜமா வந்துண்டு போயிண்டிரு. உன் சித்தி நல்ல மனுஷி. சீக்கிரம் உனக்கும் ஒரு பொண்ணைப்பாத்து கல்யாணம் செஞ்சுவைக்கிரேன்.”



அவரை பாத்தப்போ கோபமா வந்த உணர்வு, இப்போ பரிதாமாய் மாறிப்போனது. சித்தின்னு உறவுமுறை சொல்லிண்டு சகஜமா பழகின அந்தப் பொண்மேல் எனக்கு எந்த துவேஷமும் இல்லை. அப்பா எனக்கும் அம்மாவுக்கும் துரோகம் செஞ்சுட்டார்னு மனசில் ஆழமா பதிஞ்சுடுத்து. என் சிநேகிதன், “என்னடா மூஞ்சி பேயரைஞ்சாப்போல இருக்கு, அடுத்த வாரம்தான் வருவாய்னு சொன்னாய்?” அங்கலாய்ச்சான். அவனிடம் விஷயத்தை சொன்னேன். சகவனமா கேட்டிண்டிருந்தவன் “ரெண்டாம் கல்யாணம் செஞ்சுக்கரது உங்க அப்பாவோட பெர்சனல் மேட்டர், உங்கிட்டே சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்தான். நீ உன் வாழ்க்கையை கவனி.”



மனசு கனத்துண்டே 3 வருஷம் ஓடித்து. திருவையாறு பக்கமே தலைவச்சப் படுக்கலை. அப்பப்போ போன் வரும். எப்போ வராய்னு அப்பா கேப்பர். லீவு கிடைக்கலை அது இதுன்னு சப்பைகட்டு கட்டுவேன். சரீன்னுடுவர். ஒருதடவை பெரீய பணக்காராளாத்து விசேஷம்னு சில சாஸ்த்ரிகளோட சென்னை வந்தவர் என் மேன்ஷனுக்கு வந்தர், நான் இல்லை. சீட்டில் நான் வந்தேன்னு எழுதி தொங்கின பூட்டில் சொருகி வச்சுட்டுப் போனர்.



நிரந்தரமான வேலை இல்லாம அல்லாடிண்டு என் காலம் கழிஞ்சது. ஒவ்வொரு நாளும் தள்ள பிரம்மப் பிரயத்தனம். கையில் 10 ரூபாய் இருந்தால் 5க்கு மேலே சிலவழிக்க தோணாது. இன்னொரு 10ரூ எப்போ வரும்னு நிச்சயம் இல்லை. அப்போதான் என் சினேகிதன் ஒரு ஐடியா தந்தான். உங்கப்பா சொத்தில் உன்னோட பங்கை கேட்டு வாங்கி நீ ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாமேன்னு. சரியாப்பட்டது.



என் பங்குன்னா என்ன? அப்பா சொத்து பூரா ஒரே பிள்ளையான எனக்குத்தானே சொந்தம்? பங்கு ஏன் கேக்கணும்? யோசிக்க ஆரம்பிச்சேன். அப்பாவுக்கு என்ன சொத்து இருக்குன்னு ஒரு கேள்வி வந்தது. திருவையாத்தில் வீடு அவரொடதுதான். வித்தா 20லக்ஷம் கிடைக்கும். பின்னாடி தென்னந்தோப்பும் துறவுமாய். அந்த ஊரில் அவ்வளவுதான். கொடுத்தார்னா சின்னதா ஒரு சூப்பர் மார்கெட் வச்சுப்பேனே. அவர் அதை வித்துத் தரணுமே?



வித்துட்டா அவர் எங்கெ போவர்? சித்தி வேர இருக்காளே? நீங்க வேர வீடு பாத்துக்கோங்கோன்னுட்டு வீட்டை வித்து நான் எடுத்துக்க முடியாதே? ஒரு வக்கீலைக் கேட்டால் என்ன?



சைதாப்பேட்டை கோர்ட் கிட்டே ஒருத்தரை மடக்கினேன். தேவைப் பட்டால் நீங்களே கேசை வாதாடலாம்னு ஆசை காட்டி காசு வாங்கிக்காமல் அட்வைஸ் செய்ய ஒத்துக்க வச்சேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, “உங்க அப்பா இருக்கர வரைக்கும் அவர் சொத்தில் உங்களுக்குன்னு ஒன்ணும் கிடைக்காது, அவரா தந்தாத்தான் உண்டு. சொத்து அவருக்கப்புரம் உயிரொட இருக்கர மனைவிக்குத்தான் போகும். அவளா பாத்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. உங்க சித்திக்கு குழந்தைகள் இருந்தா சொத்தை சரிசமமா பிரிக்கணும், உங்களுக்கு பாதிதான்னுட்டர். அப்பா உயில் எழுதலாம். அப்படீன்னா கதை வேர மாதிரிப்போகும்”



இப்போ என்ன பண்ரது? ஒருக்கா திருவையாத்துக்கு போய் அப்பாகிட்டே உதவி கேட்டு அப்படியே சொத்து விஷயத்தை ஆரம்பிச்சு அவர் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சிண்டா என்ன? நமக்கு காரியம் ஆகணும். அப்பா செஞ்ச காரியத்தை பெரிசு படுத்தாம போயிட்டு வரது நல்லதா பட்டுது. பல் தேச்சுட்டு கிளம்பிட்டேன்



கும்பகோணத்துக்கு பஸ்கிடச்சது. பண்டிகை நாட்களில் அவ்வளவா நகை அடகுவைக்க வரமாட்டா. பேங்கில் லீவு கொடுத்துட்டன். கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இறங்கரச்சே பகல் 12. இங்கேந்து திருவையாத்துக்கு அரை மணிக்கொண்ணு போரது. இங்கேயே ஏதாவது ஹோட்டலில் சாப்டுட்டா சித்திக்கு வேலை வைக்கவேண்டாம். என்ன திடீர்னு சித்திமேலே கரிசனம்? எப்படியாவது சிரிச்சுப் பேசி காரியத்தை சாதிச்சிண்டு திரும்பணும்.



சாப்டுட்டு பஸ்ஸில் ஏறி தியாகராஜ சமாதி ஸ்டாப்பில் இறங்கி சித்தே நடந்து 2 மணிக்குப் ஆத்துக்கு போயாச்சு. அப்பா மத்தியானம் தூங்குவர். இல்லைன்னா வெளில்லே போயிருக்கலாம். கதவை ரெண்டு மூணு தடவை தட்டினப்புரமே சித்தி வந்து தொறந்தா.  கண்ணில் தூக்கக் கலக்கம். என்னை பாத்துட்டு முகம் மலர வரவேத்தா.



“வா சீனு, ரொம்பநாளா வராம ஏன் இருந்தாய்?” அழைச்சிண்டு போனா. “அப்பா வடுவூரில் பூணல் கல்யாணம்னு போயிருக்கா, சாயங்காலமா வந்துடுவர். உக்காந்துக்கோ காப்பி போட்டுத்தரேன், மத்தியானம் சாப்பிட்டாயா?.” வீடு நிசப்தமா இருந்தது.



பையை வச்சுட்டு ஊஞ்சல் கிட்டே கீழேயே உக்காந்துண்டேன். காபி நன்னாத்தான் போட்டிருக்கா. ஒண்ணும் பெசாமல் குடிச்சேன். என்னவோ தெரியலை சொல்லிட்டேன். “காபி நன்னா இருக்கு” சித்தி முகத்தில் சந்தோஷம். காபியைப் புகழ்ந்தது அவளை லேசா அக்ஸெப்ட் செஞ்சுண்டுட்டா மாதிரி பட்டிருக்கும். உன் அப்பா, உனக்கு ரெண்டு வரன் பாத்து வச்சிருக்கர். நேத்துதான் அனுப்பணும்னு லெட்டர் எழுத உக்காந்தர், அதுக்குள்ள வடுவூர் போக அழைப்பு வந்துடுத்து. இப்போ நீயே வந்துட்டாய்.”



பேசிண்டிருகச்சேயே பின்னாடி உள் ரூம் கதவைத் திறந்துண்டு சிணுங்கிண்டே 2 வயசில் ஒரு பொண் குழந்தை பட்டுப் பாவாடையில் நடந்து வரது. சித்தி “வா செல்லம், இங்கே ஓடிவா, யார் வந்திருக்கா பாரு”ன்னு குழந்தையை அணைச்சுக்கரா. உன் அண்ணாடா செல்லம். சீனு அண்ணா.”



என்னைப் பாத்ததும் அழகா அந்த குழந்தை சிரிக்க, என்னை அறியாம இங்கே வான்னு கையை நீட்டரேன். துளிக்கூட வேத்து முகம் இல்லாமல் எங்கிட்டே வந்து ஆசையா மடீலே உக்காந்திண்டது. “சித்தி யார் இந்த குழந்தை? என் தங்கையா? எப்போ பொறந்தா, ஏன் லெட்டரே பொடலை?”ன்னு கேக்கரேன். “அவர் தான் இப்போ வேண்டாம், நேரில் சொல்லிக்கலாம்னும் நீ ஏற்கனவே கோவிச்சிண்டுட்டாய்னும் வருத்தப்பட்டர்.”



என்ன பேர் வச்சிருக்கேள்னு நான் கேக்க, குழந்தையே மெல்ல “பட்டு”ன்னு சொல்ல, எனக்கு திக்குன்னுது.



எங்கம்மா ஜாடையில் என் தங்கை. 29 வயசு வித்யாசத்தில். எனக்குன்னு குழந்தை இருந்தால் அந்த வயசில். இத்தனை வருஷம் கழிச்சு என் மடியில்.



என்மேல் அப்படியே சாஞ்சுண்டு திரும்பவும் தூக்கத்தை விட்ட இடத்துலேந்து இந்த சின்ன பட்டம்மா திரும்பவும் தூங்க ஆரம்பிக்க, சட்டைப்பையில் இருந்த பர்ஸ், பேனா அவள் கன்னத்தில் குத்தப்போரதேன்னு நான் அதை எடுத்து தூர வைக்கரேன்.



என் பங்கு சொத்தை நான் அப்பாகீட்டே சண்டை போட்டு வாங்கிண்டு போயிடணும்னு வந்தது கேக்காமலே என் மடியில் இருக்காமாதிரி நினெச்சுண்டேன்Best regards,