Friday, 8 May 2020

விசாகப்பட்டினம் குறித்த செய்திகளைப் படிக்கிற வீடியோக்களைப் பார்க்கிற தைரியம் இல்லை.

 விசாகப்பட்டினம் குறித்த செய்திகளைப் படிக்கிற வீடியோக்களைப் பார்க்கிற தைரியம் இல்லை.


ஸ்டைரீன் வாயு என்ற பெயரைக்கேட்டதுமே அதன் பண்புகள் குறித்த சிந்தனைதான் தலைதூக்கியது.

பென்ஸீன் வகை வேதிப்பொருள். பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியில் முக்கியமானது. PVC gas என்றும் பெயர் உண்டு. தெர்மோகோல் தெரியும் அல்லவா... அது பாலிஸ்டைரீன்.  bean bag எனப்படும் புதை இருக்கைகளில் பாசி மணி போல தெர்மோகோல் குண்டுகள் இருக்குமே... அதுவும் பாலிஸ்டைரீன் வகைதான். சொல்லப்போனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பலவற்றுக்கும் ஸ்டைரீன் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வாயுவுக்கும் எடை வித்தியாம் இருக்கும். ஸ்டைரீன் வாயுவாக வரும்போது காற்றைவிட சற்றே கனமானது. எனவே வளிமண்டலத்தில் மேலே போகாமல் பூமிப் பகுதியில் படியக்கூடியது. எனவே அதிக தூரம் பரவக்கூடியது. மனிதர்களால் சுவாசிக்கப்படும் ஆபத்து உடையது.

தோலில் தோல் உலர்ந்து போகலாம், கொப்புளங்கள் ஏற்படலாம். எரிச்சல் ஏற்படலாம்.
கண்களில் பட்டால் எரியும்.
சுவாசிப்பதால் மூக்கிலும் தொண்டையிலும் எரிச்சல் ஏற்படும்.
அதிகம் சுவாசிக்க நேரும்போது தலைவலி, தலைசுற்றல், மயக்கம் என்பதெல்லாம் உடனடி நிகழ்வுகள்.
குடல் பிரச்சினைகள், சிறுநீரக செயலிழப்பு, நினைவுத்திறன் இழப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் - அது கார்சினோஜன் வகையைச் சேர்ந்தது.
அதாவது, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

வெளியான வாயு எவ்வளவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் வீரியம் என்ன என்பதைப் பொறுத்து பாதிப்புகள் கடுமையாக இருக்கும். பலருக்கும் வாழ்நாள் முழுக்கவும் பிரச்சினைகள் ஏற்படலாம். (1-1.5 கி.மீ. சுற்றளவுக்குள் தீவிரமாகவும் 1.5 - 2.5 கிமீ சுற்றளவுக்குள் மிதமாகவும் பரவியிருப்பதாகத் தெரிகிறது.)

இது கார்சினோஜன் அல்ல என்று ஒரு குழு சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த விபத்து, அது கார்சினோஜன்தான் என்ற உண்மையை நிரூபிக்க உதவலாம். அதற்காக பலர் பல காலம் தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம்.

மற்றபடி, விபத்துக்குக் காரணமானவர்கள் யாரும் தண்டிக்கப்படப் போவதில்லை.  நம்முடைய பேரிடர் மேலாண்மைத் திறனில் ஏதும் முன்னேற்றம் வரப்போவதும் இல்லை.


Best regards,