Wednesday, 13 May 2020

வீடு மாறிய கதைகள் - சுஜாதா

வீடு மாறிய கதைகள் - சுஜாதா
(கற்றதும் பெற்றதும்)
டெல்லியில் வேலைக்கு போனதிலிருந்து 40 வருடங்கள் ஆகின்றன. இதில் இதுவரை பன்னிரண்டு முறை வீடு மாறி ஆகிவிட்டது. வேலைக்கு போன புதிதில் டெல்லி சவுத் இந்தியா போர்டிங் ஹவுஸிங் வீட்டில் ஒரு கட்டில், மேஜை, பின் இரண்டு வேளை சாப்பாடு ஆகியவற்றுக்கு எழுபத்தைந்து ரூபாய். எனக்கு மாதம் கிடைத்த ஸ்டைபெண்ட் தொகை 150 ரூபாய். பாக்கி பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவேன். ஆகாகான் போல உணர்ந்தேன். கண்டபடி புத்தகங்கள் வாங்கினேன். கிடார் வாங்கினேன். அதன்பின் சுமாரான வேலை கிடைத்தது. கரோல் பாகில் ஆறாவது பிளாக்கில் கணையாழி கஸ்தூரிரங்கன் குடியிருந்த வீட்டின் முன்னறையில் உபகுடி புகுந்தேன். ஆம்ப்ளிபையர் ஐ இணைத்து ராத்திரி நேரங்களில் நான் கிடார் வாசிப்பது கேட்டு கைக்குழந்தைகள் கக்குவதாக அந்த வட்டாரமே புகார் கொடுத்ததனால் இரண்டு காரியங்கள் செய்தேன்.
சங்கீத உலகம் ஒரு தேர்ந்த கிட்டாரிஸ்ட்டை இழந்தது.
15-A பிளாக் மற்றொரு அறைக்கு குடி பெயர்ந்தேன்.
வீட்டுக்காரர் மினிஸ்டரியில் செக்ஷன் ஆஃபீஸர். ஆசார சீலர். ஆரம்பத்தில் ரொம்ப நன்றாக பழகினார். சிகரெட் பிடிப்பதில் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இடைக்காலத்தில் கல்யாணம் ஆகி விட்டதால் அதே 15-A கொஞ்சம் தள்ளி ஒரு மூன்று ரூம் அப்பார்ட்மெண்ட் எடுத்துக்கொண்டேன். மனைவியை பிரசவத்துக்கு அனுப்பிவிட்டு நாள் பூராவும் பிரிட்ஜ் ஆடுவோம். வாடகை 225 ரூபாய். வீட்டுக்காரர் லோக் என்று ஒரு பஞ்சாபி. ரிப்பேரே செய்ய மாட்டார். அவருக்கு அதைப் பற்றிப் பேசும்போது மட்டும் காது கேட்காது. பண விஷயங்கள் தெளிவாகக் கேட்கும்.
அந்த வீடு மெல்ல மெல்ல முனைகளில் உடைந்து எலும்பெல்லாம் தெரிய ஆரம்பித்தது. அதுதான் ஐடியா தாங்கமுடியாமல் காலி பண்ணி போய்விடுவேன் என்று. நானா !!
நல்ல லொகேஷன்... அஜ்மல் கான் ரோடு பக்கத்திலேயே இருந்தது. அதன் மார்க்கெட்டில் உலகில் உள்ள எல்லா பொருட்களும் (புத்தகங்கள்  தவிர) கிடைக்கும். இந்தியாவிலேயே பணக்கார மார்க்கெட் அதுதான் என்பது என் கருத்து. அந்த ஏரியாவில் இருந்த பழைய வீடுகளில் எல்லாம் ‘ மதராசி பாபு லோக்’ வசித்து வந்தார்கள். ஒரு சிலர் 15 ரூபாய் வாடகை கொடுத்துக்கொண்டு பிரிவினை காலத்திற்கு முன்னாலேயே வந்தவர்கள். அவர்களுக்கு வீட்டுக்காரர்கள் கணிசமான தொகை கொடுத்தும், சில பிடிவாதக்காரர்கள் வீடு இடிந்து விழும் வரை காலி செய்ய மாட்டார்கள்.
கரோல் பாக் அலுத்துப்போய் திடீரென்று சப்தர்ஜங்கில் ஒரு வீட்டின் பின்புறத்தில் குடி பெயர்ந்தேன். நல்ல அமைதியான லோகாலிட்டி அது. புது வீடு ஆனால் வீட்டுக்காரர் சல்லிசாக இருக்கிறது என்று ஒரு லோக்கல் ஃபேன் வாங்கிப் போட்டிருக்கிறார். ஒரு நாள் ஆபீசில் இருந்து வந்த களைப்பில் ஃபேன் போட, அது தொப்பென்று கீழே விழுந்து, நடுக்கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளைகள் மயிரிழையில் தப்பித்தார்கள். வெகுண்டு வீட்டுக்காரரை உடனே போனில் கூப்பிட்டு அடிபட்ட பறவை போல கீழே கிடந்த ஃபேனைக் காட்டி சத்தம் போட்டேன். “ என்ன இது, என் மகன்கள் உயிர் தப்பினார்கள் - சாந்தினி சவுக்கில் அடாசு ஃபேன் வாங்கி பொருத்தி இருக்கிறீர்கள்…”
“இல்லை தர்யா கஞ்சில் வாங்கினேன். விழுந்து விட்டதா? ஒன்று பண்ணுகிறேன். சீலிங் ஃபேன் வேண்டாம். தலையின் மேல் விழுகிறது. ஒரு பெடஸ்டல் ஃபேன் வாங்கி வந்து போடுகிறேன்” என்றார். எனக்கு வந்த கோபத்தில் பார்க்கில் போய் அரை மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்தேன்.
பெங்களூரில் BEL வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் பிளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் ஐயங்கார். “ ஆட்டோ பண்ணிண்டு எங்களுக்குள் வாங்கோ” என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து “ எல்லாம் வாசியா?       (சௌகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு வாடகை ஏற்றிவிட்டு போவார்.
3 மாசம் 2 மாசம் என்று இருந்தது மாதாமாதம் வர ஆரம்பித்தார். ஒருமுறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் “ஆமாவா” என்று புன்னகைத்துவிட்டு அவுட் ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை குடி வைத்து விட்டு போய்விட்டார். மாமி நடு ராத்திரியில் எழுந்து துணி துவைப்பாள். அதுவும் துவைக்கிற கல்லில் கணவனின் மேல் உள்ள கோபத்தை எல்லாம் காட்டி அறைந்து, அறைந்து “ ஸ்... ஸ்” என்று பிஜிஎம் கொடுத்துக்கொண்டு துவைப்பாள். இங்கு ரொம்ப நாள் தாங்காது என்று பக்கத்திலேயே ரோடு தாண்டி என் ஒருவரின் மாமனார் வீடு வாடகைக்கு வந்தது - அதற்கு மாறினோம். “ உன்னை போல ஒரு டெனண்ட்டை நான் பார்த்ததில்லை” என்று கண்ணால் கண்ணீர் விட்டார் ஐயங்கார். ராஸ்கல்.
இந்தப் புது வீடு மாமா பார்த்துப் பார்த்து கட்டியிருந்தாலும், காண்ட்ராக்டர் ஏமாற்றி இருந்தான். சிமெண்டில் நிறைய மணல் கலந்து விட்டான் போலும். மழை பெய்தால் அம்மை கொப்புளங்கள் போல தண்ணீர் தெரியும். எப்போது சொட்டும் என்று எதிர்பார்க்கவே முடியாது. டென்ஷனில் நகம் எல்லாம் சிதிலம் ஆகிவிடும்.
ஆங்காங்கே பிளாஸ்டிக் குவளைகள வைத்தால் மனது மாறி வேறு இடத்தில் சொட்டும். என் நோட்டுப்புத்தகத்தில் தொட்டி நான் எழுதிய ஒரே ஒரு செக்ஸ் கதை கரைந்தே போயிருக்கிறது. இதற்கு மேல் தமிழ் இலக்கியம் கஷ்டப்படக்கூடாது என்று மறுபடி வீடு மாற்ற தீர்மானித்து, பாக்டரியின் காலனியில் குவாட்டர்சுக்கு வந்து விட்டேன்.
தனியான வீடு. வீட்டுக்காரர் தொந்தரவு இல்லை. அவ்வப்போது குயில் கூவிக் கொண்டு இதர பறவைகள் ஆமோதிக்க, ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? என்று என் படைப்பாற்றல் சுரப்பிகள் எல்லாம் ஓவர் டைம் பண்ண போகிறது என்று மகிழ்ந்தேன். கொஞ்சம் அதிகமாகவே அமைதி. ஜாஸ்தியாகவே குயில் கூவல். எனக்கு எழுதுவதற்கு பரபரப்பும் சஞ்சலமும் தேவையாக இருந்தது.
மேலும், என் மகன்கள் காலேஜுக்கு ரொம்ப தூரம் போக வேண்டி இருந்தது. அதனால் காலேஜ் அருகில் பனசங்கரி மூன்றாவது ஸ்டேஜில் ஒரு வீட்டுக்கு குடிபுகுந்தோம். பனசங்கரி என்பது அப்போது பெங்களூரின் விளிம்பில் ஒரு குன்று பிரதேசம். ரவுடிகள் துரத்தலில் முடிவில் கத்திக்குத்துக்கு இங்கேதான் தீர்மானிப்பார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள். காலி மனைகள் அதிகம். ஒரு டூத் பேஸ்ட் வாங்க ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டி இருந்தது. மேலும் இடம் மாறியதில், என் பிள்ளைகள் படிப்பில் அப்படி ஒன்றும் ஓஹோ என்று மார்க் அதிகரித்து இருந்ததாகத் தெரியவில்லை. கேர்ள் ஃபிரண்ட்ஸ் தான் அதிகமானார்கள். அதனால் மீண்டும் பாக்டரி அருகிலேயே குவாட்டர்சுக்கு மனு செய்தேன். “ என்னப்பா, குட்டி போட்ட பூனை மாதிரி அலைகிறாயே” என்று அலுத்துக் கொண்டு, சாங்க்ஷன் ஆக ஆறு மாதம் ஆகும் என்று சொன்னார்கள்.
அதனால் ஃபேக்டரிக்கு அருகிலேயே ஒரு ஐஏஎஸ் ஆபிசரின் வீட்டு மாடியில் குறிப்பு வந்தேன். முதலில் எல்லாம் சுகம் தான். அவர்கள் வீட்டு நாய் டூட்டு எனும் கோல்டன் ரிட்ரீவர் எங்களை அங்கீகரித்து தினம் வந்து பிஸ்கட் கேட்கும். கார் நிறுத்துவதில் நான் முன்னாடியா, அவர் முன்னாடியா என்பதுபோல சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்தன. கேட் கதவை இருட்டியதும் பூட்டிவிடுவார்கள்.
ஒரு நாள் கமல் என்னை பார்க்க வந்தபோது, அவர்கள் வீட்டு மணியை அடிக்க, “ உங்களுக்கு கமலைத் தெரியுமா?” என்று வாயடைத்துப் போய், வாடகை ஏற்றாமல் தண்ணீர் அதிகமாகவே திறந்துவிட்டார்கள்.
அந்த வீட்டில் ஒரே ஒரு அசௌகரியம் இருந்தது. புழக்கடை என்று எதுவும் கிடையாது. பக்கவாட்டு காரேஜ் மேல்புறத்தில் தான் இறங்கி துணி உலர்த்த வேண்டும். அந்த வழியே ஷிப்டுக்கு நூறு பஸ் வந்து போகும். அனைவரும் நாங்கள் உலர வைத்த உள்ளாடைகளை தரிசித்துக் கொண்டே செல்கிறார்கள் என்பது ஒரு முறை என் சக ஊழியர். “ உங்க வீட்டிலே யார் பட்டாபட்டி அண்டர்வேர் போடுவீங்க” என்று கேட்டபோது தான் தெரிந்து திடுக்கிட வைத்தது. அவசரமாக சொல்லி குவார்ட்டஸ் கிடைத்தது. மறுபடியும் தோப்பு, துரவு, குயில். அதன்பின் ரிடையர் ஆகும் வரை வீடு மாறவில்லை. அப்புறம் சென்னை வந்து ஆழ்வார்பேட்டையில் ஒன்பது வருடம் ஒரே வீட்டில் இருந்தது ஒரு ரெக்கார்டு.
இப்போது மயிலாப்பூருக்கு மாறுகிறேன்.
எனக்கென்னவோ இடம்பெயர்தல், புலம்பெயர்தல் மனித இயற்கை என்று தோன்றுகிறது. ஆதிமனித தினத்திலிருந்து இது இருக்கிறது. இடம்பெயர்தல் காரணங்கள்தான் மாறி இருக்கின்றன. முன்பெல்லாம் தண்ணீர் தேடி, உணவு தேடி, பிழைப்பு தேடி இடம்பெயர்வார்கள். மலை ஆடுகள், மீன்கள், பறவைகள் போன்ற உயிரினங்கள் கூட இடம் மாறுகின்றன. புத்தர், இயேசுநாதர், முகமது நபி போன்றவர்கள் உண்மையைத் தேடி இடம் மாறினார்கள். எப்போது அலைவதை நிறுத்துவார்கள்?
புனித தாமஸ் அக்வினாஸ் “அழகு அலைவதை நிறுத்தும்” என்றார். உண்மைதான் மகத்தான அழகுக்கு அந்த குணம் உண்டு. எல்லா அலைச்சல்களையும் அதை நிறுத்த வல்லது. திரியும் கால்களையும், அலையும் நாக்கையம் நிறுத்தக் கூடியது. அழகு இடம்பெயர்வதற்கு இன்றைய உலகில் சில அபாக்கியமான காரணங்களும் உள்ளன. சூழ்நிலை பத்திரத்தை குறைக்கும்போது, அது அவன் மொழியாக இருக்கலாம், மதமாக இருக்கலாம், சருமத்தின் நிறமாக இருக்கலாம், இருக்கலாம், விரோத பழக்கவழக்கமாக இருக்கலாம்…..
இப்படிப் பல காரணங்கள் புலம்பெயர்வதற்கு ஏதோ ஒரு விதத்தில் ஒருவிதமான நிலையாமை வரும்போது நாம் பெயர் கிறோம், நீரிலும் நிலத்திலும் சஞ்சரிக்கும் 'மின்க்' என்னும் மிருகம் ஒரு தனிமை விரும்பி. அது மற்றொரு மின்க்கை கிட்டே சேர்த்துக் கொள்வதற்கு ஒரே ஒரு காரணம் இனப்பெருக்கம் தான். காரியம் முடிந்ததும் ‘ ஆளை விடு’ என்று தனிமையை நாடி போய்விடுகிறது. இந்த மனநிலைக்கு தான் ஆண் பெண்கள் எல்லோரும் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறோம் அழகின் தரிசனம்தான் நம்மை நிறுத்தும்:

"கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன்
இனி ஊருக்குப் போகமாட்டேன்

என்று நாட்டுப்புற கவிஞனை நிறுத்தியதும் அழகுதான்.

Best regards,