Thursday, 14 May 2020

ஆபாவாணனை மறந்த தமிழ்த்திரையுலகம்!

ஆபாவாணனை மறந்த தமிழ்த்திரையுலகம்!




"சொஸைட்டியில நல்ல பேரு உள்ளவங்களுக்கு மட்டும்தான் ரோல்ஸ் ராய் கார்கள் விற்கப்படும்" என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் உண்மை என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.
அந்தளவுக்கு நான் அப்பாவியாக இருந்ததையும் இதை என்னிடம் சொன்னவர்கள் பொய் உரைக்காத உத்தமர்கள் போல வலம் வந்ததையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்!

இப்படித் தான்,
உலகில் பலவிதமான அபத்தங்கள் உண்மையின் அச்சு அசல் போலவே சமூக இடைவெளியின்றி பரவிக் கொண்டிருக்கின்றன....

அந்த வகையில்,
நான் சந்தித்த அபத்த களஞ்சியங்களில் முக்கியமானதிலும் மோசமானது,
எது தெரியுமா?

மணிரத்னத்திற்கு முன்பு வரை இளையராஜா பாடல்களை யாருமே அவ்வளவு சிறப்பாகப் படமாக்கவில்லை என்பதுதான்!...

அது மட்டுமா?
தமிழ் சினிமாவிற்கு பிரமாண்டம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே ஷங்கர்தான் என்று
ஏதோ....  சந்திரபாபு நாயுடு திருப்பதியில் லட்டுக்குப் பதில் ஜிலேபி போட்ட கதையாக அளந்து விடுகிற கொடுமை இன்று வரை தொடர்வதை எங்கே போய் முட்டிக் கொள்வது?.

நமது ஜெமினி வாசன் அவர்கள் தயாரித்த 'சந்திரலேகா' படம் பற்றி தெரியுமா இவர்களுக்கு?
இப்படி... "காலம் காலமாக சினிமாவில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட உடான்ஸ்களை அடித்துத் துவைத்து தொங்க விட்டால் என்ன?"

என்று இந்த "லாக் டவுனில்" குப்புறப்படுத்து யோசித்துக் கொண்டிருந்த போது குபீரென்று ஒரு ஐடியா உதித்தது!

முதலில் பிரமாண்டத்திற்கு வருவோம். பழங்கதைகள் தற்போது நமக்கு வேண்டாம்.

இப்போது நாம் வாழும் காலத்துக்கே வருவோம்
தமிழ்த் திரை ரசிகர்களுக்கு திரைப்படக் கல்லூரி என்று ஒன்று சென்னையில் இருப்பதை பேரெழுச்சியோடு  அறிமுகப்படுத்தியதே 'ஊமை விழிகள்' என்ற பிரமாண்டப் படம்தான். 

விஜயகாந்த் அவர்கள் அதுவரையில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும்,
தமிழ்ச்சினிமாவில் தனக்கான இடம் எது?
ஒரு நிலையான ஹீரோ பாணி
எதுவென்றே தெரியாமல் இருந்த நம் விஜயகாந்த் அவர்களுக்கு.....
மிக தெளிவாக.... அவருக்கான ராஜபாட்டையை அமைத்துக் கொடுத்தது இந்த ஊமை விழிகள் படம்தான்.

இதில்....
விஜயகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர், சரிதா,
அருண் பாண்டியன் என ஊமைவிழிகள் படம் நெடுகிலும் நட்சத்திரப் பட்டாளங்கள்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி, இணை இசையமைத்து படத்தை தயாரித்தது, திரைப்படக் கல்லூரி மாணவர் ஆபாவாணன்.
இவரைத் தவிர்த்து தமிழ் சினிமா வரலாற்றை எழுதினால் அதைவிட அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஊமை விழிகளுக்குப் பின்புதான்,
சினிமாஸ் கோப் என்ற தொழில் நுட்பத்தை தமிழ் சினிமா மிகச்சரியாகப் பயன்படுத்தத் தொடங்கியது என்றால் அது மிகையல்ல!

இளையராஜா கொடி கட்டிப் பறந்த நேரத்தில்......
அவர் இசையமைத்தால்
ஒரு படத்தின் பாடல்கள் மாபெரும் வெற்றி என்றால் அது இந்த படம் தான்!

ஆம்....
ஊமை விழிகளில்  அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட். "தோல்வி நிலையென நினைத்தால்...."
எனும் பாடல் ஈழத் தமிழர்களின் தேசிய கீதமானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், இயக்கத்தினர் உற்சாகமாக இருக்க வேண்டும் என எண்ணும் பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்க சொல்வாராம்!

ஆபாவணனுக்கு முன்பு,
 "அவள் அப்படித்தான்"
திரைப்படத்தின்  இயக்குநர் திரு:"ருத்ரய்யா" போன்ற ஒருசிலரே திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்து கவனிக்கப்பட்டவர்கள்.

ஆபாவாணன் அமைத்துக் கொடுத்த அந்த ராஜபாட்டையில் எந்த சிரமமும் இன்றி
ஆர்.அரவிந்தராஜ்,
ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார்
என பல படைப்பாளிகள் தொடர்ந்து  இன்றுவரை முத்திரை பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆபாவாணனின் 'செந்தூரப் பூவே' படம் தமிழ் சினிமாவின் மைல்கல். இந்தப்படத்தின் 'ஸ்பெஷல் எஃபேக்ட்ஸ்'க்காக சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பல மணி நேரங்கள் செலவிட்டு ரயில் வரும் சத்தத்தைப் பதிவு செய்து படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள்.

ஆபாவாணனுக்குப் பின்புதான் தமிழ் சினிமாவில் 'ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்'க்கு ஸ்பெஷல் இடம் கிடைத்தது. 'சத்தமே' இல்லாமல் இருந்த சவுண்ட் இன்ஜினியர்களின் பணி,  வெளியுலகத்துக்குத் தெரியத் தொடங்கியது, ஆபாவாணனின் வருகைக்குப் பின்புதான்.

ஆஸ்கர் வென்ற "ரசூல் பூக்குட்டி" போன்றோர் ஆபாவாணனுக்கு  பெரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.

'செந்தூரப் பூவே' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களை வைத்து ஆபாவாணன்  தயாரித்த 'இணைந்த கைகள்' பிரமாண்டத்தின் உச்சம்.
படத்தின் இடைவேளைக்காக எடுக்கப்பட்ட ஷாட்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில்  மறக்க முடியாத முத்திரை.

'இணைந்த கைகள்' வெளியான மும்பை "ட்ரைவ் இன்" தியேட்டரில் கட்டுக் கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவால், தியேட்டரையே மூடும் நிலை வந்தது.

கோவை சாந்தி தியேட்டரில் இந்தத் திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தை என் அண்ணன்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
இன்று ஓவர்சீஸ் உரிமம் பற்றி பல மேதாவிகள் வாய் கிழியப் பேசுகிறார்கள். 'இணைந்த கைகள்' தமிழ்நாட்டில் வெளியான அதே நாளில் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஊமை விழிகளுக்குப் பின் ஆபாவாணன் தொடர்ந்து பிரமாண்டமான கதைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் 'உழவன் மகன்' முக்கியமான படம். அவர் எழுதி தயாரித்த 'கருப்பு ரோஜா'தான், பிளாக் மேஜிக்கை மையமாக வந்து வெளியான முதல் தமிழ்ப்படம். 

இந்தியாவில் டிடிஎஸ் (DTS) ஒலி தொழில் நுட்பத்தில் வெளியான முதல் படமும் 'கருப்பு ரோஜா'தான்.
அச்சமையத்தில்..... ரசிகர்களால் மறந்தே போயிருந்த பலம்பெறும் பாடகர்களான பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் டிஎம் சௌந்தரராஜன் போன்றோரையும் தம் படங்களில் பாட வைத்தார்.

"தோல்வி நிலையென நினைத்தால்....."
பாடலை எழுதியது இவர்தான்.
இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகம் இருக்கும் காலம் வரை ரசிகர்களால் ரசிக்கப்படும்.
கொண்டாடப்படும்!

அத்துடன்.....
இப்பொழுதும் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வசீகரப்படுத்தும் பாடல் ஒன்றாகவும்,  இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் பாடலாகவும் இருக்கின்ற "வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே......." எனும் பாடலும் இவர் எழுதியதுதான்.
அந்தப் பாடலை பாடியவரும் இவரே தான்!

தமிழ்ச் சினிமாவுக்கு இவர் அளவுக்கு புதுமைகளை அறிமுகப்படுத்தியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சில பல தோல்விகளுக்குப் பின்,
ஆபாவாணன் சின்னத் திரைப் பக்கம் சென்றார்.

இவர் தயாரித்த 'கங்கா யமுனா சரஸ்வதி' நெடுந்தொடர் அந்த காலகட்டத்தில் பெரும் வெற்றி பெற்றது.
ராஜ் டிவியில் வெளியாகி......
 நெடுந்தொடர்களுக்கு பெயர் போன
சன் டிவிக்கு  "டஃப் ஃபைட்" கொடுத்த தொடர் இது.

ஆபாவாணன் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த போது தன் புகைப்படம் ஒன்று கூட  பத்திரிகைகளில் வராமல் பார்த்துக் கொண்டார்.

ரசிகர்கள் அவர் முகம்
அறியாமலேயே அவரை கொண்டாடித் தீர்த்தார்கள். 'இணைந்த கைகள்' படத்தில் திரையில் ஆபாவாணன் பெயர் வரும் போது பூக்களையும் சில்லரை காசுகளையும் ரசிகர்கள் வீசியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இந்தளவுக்கு வரவேற்பைப் பெற்ற ஒரே படைப்பாளி ஆபாவாணன் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

காலம் கொரனாவைவிட கொடூரமானது. வெற்றிகளின் உச்சாணிக் கொம்பில் வைத்துக் கொண்டாடப்பட்ட ஆபாவாணன்  இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
எந்த நிலையில் இருக்கிறார்? என்பதைப் பற்றி கவலையே இல்லாமல் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

சினிமாவை நெஞ்சில் நிறுத்திப் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஆபாவாணன் பெயரை மனதில் நிறுத்துவோம்



(நன்றி:-வெற்றி
15/05/20.)Best regards,