Monday 11 May 2020

சிறுவனின் கலங்கடிக்கும் கதை.

சிறுவனின் கலங்கடிக்கும் கதை..

இன்று 10.05.2020 அன்னையர் தினம்.

சென்னையில் அது ஒரு டாஸ்மாக் கடை. அங்கே சர்ர் சர்ர்ரென வந்துகொண்டே இருக்கின்றன டூவீலர்கள். நூறு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக இருந்தார்கள்.

அடித்துப் பிடித்து கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பாட்டில்களை வாங்கி வெளியே வருபவர்கள் முகத்தில் போருக்கு சென்று வெற்றி வாகை சூடியது போன்ற உணர்வு. வாங்கி வந்த பாட்டில்களை வேட்டிக்குள்ளும், இடுப்புக்குள்ளும் பொத்தினாற்போல பதுக்கி வைத்துக்கொண்டே டூவீலரில் கிளம்புபவர்கள் ஒருபுறம் என்றால், ஒயின் ஷாப்பை ஒட்டினாற் போலுள்ள பாருக்குள் நுழைகிறார்கள் வேறு சிலர். நண்பர்களுடன் நானும் உள்ளே சென்றேன்....

நாற்றம் பிடுங்க குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் கமகமவென மணக்கிறது கொத்துப் பரோட்டாவும் சிக்கன் 65யும். அத்தனை களேபரங்களுக்கும் நடுவே, “மாஸ்டர் சிக்கன் ரைஸ் சொல்லி அர மணி நேரம் ஆகுது ஆள் வெயிட்டிங்  மாஸ்டர் லைனுக்கு ஒரு ஆஃபாயில்” என பாருக்குள் பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்ததும் திடுக்கென்றிருந்தது எனக்கு.

அவனுக்குப் பதினைந்து வயதுகூட ஆகியிருக்காது. பத்தாம் வகுப்பே தாண்டி ய
இருக்க மாட்டான். பள்ளிக்கூடம் செல்லும் வயதில் இப்படி ஒயின்ஷாப்பில் உள்ள பாரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறானே என்று நினைத்து மனம் வலித்தது. ஒருவேளை குடிப்பழக்கமோ என நினைத்தேன். ஏனோ அந்த நிமிடம் அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

அடுத்த ஐந்து நிமிடங்களில் எச்சில் தட்டுகளை வாஷ் பேஷனில் போட்டுவிட்டு கைகளை துடைத்துக்கொண்டே வந்தான். அவனை அருகில் அழைத்தேன். தயங்கி என்னைப் பார்த்து பயந்தான். ஆரம்பத்தில் தயங்கியவனின் தோளைத் தட்டிக் கொடுத்தேன். “தம்பி என்ன படிக்கிற. உனக்கு எந்த ஊரு. அம்மா, அப்பா என்ன பண்ணுறாங்க” எனக் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் பேசிக்கொண்டே பாருக்கு வெளியே அழைத்து வந்தேன். வெளியே வந்ததும் அவன் தயக்கமும் பதட்டமும் ஓரளவுக்குத் தணிந்திருந்ததை உணர்ந்தேன்.

“என் ஊரு நாமக்கல்ணே, ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் அப்பா எறந்து போனாரு. நானும், தங்கச்சியும் படிச்சுட்டு இருந்தோம். அம்மா சித்தாள் வேலைக்குப் போயிதான் எங்களை ஸ்கூலுக்கு அனுப்புனாங்க. போன வருசம் நான் ஒன்பதாங்கிளாஸ் முடிச்சதும் லீவுல ஊருல இருக்குற ஜவுளிக்கடைக்கு வேலைக்குப் போனேன். மாசம் மூணாயிரம் கொடுத்தாங்க. அத அம்மாக்கிட்ட கொடுத்தப் போ ரொம்ப சந்தோசப்பட்டாங்க. “லீவுல மத்த புள்ளங்க மாதிரி வெளையாடிக்கிட்டு திரியாம வேலைக்குப் போயி உருப்படியா சம்பாதிக்கிறடா. இனிமே எனக்கு என்ன கவல. உன் தங்கச்சிய நீ நல்லா பாத்துப்ப”ன்னு அம்மா சொன்னாங்க.

அம்மாவுக்கு உடுத்திக்கக்கூட நல்ல துணி கெடையாது. ஆனா, அவங்க அதப்பத்தி கவலப்பட்டதே இல்லண்ணே. கையில கொஞ்சம் காசு இருந்தா போதும் உடனே எனக்கும் என் தங்கச்சிக்கும் என்ன வேணுமோ அத வாங்கிக் கொடுத்துடுவாங்க. தெனமும் எங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டுத் தான் அம்மா வேலைக்குப் போவும்.

சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்குள்ள சுடச்சுடச் சோறு பொங்கி தருவாங்க. வீட்டுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அது தெரியாத அளவுக்கு எங்க ரெண்டு பேரையும் அம்மா வளர்த்தாங்க. அம்மாவுக்கு நாங்கதான் உசுரு. அப்பா எறந்து போனப்போக்கூட அம்மா அழல. ஆனா, தங்கச்சி கால்ல சுடுதண்ணி கொட்டுனதுக்கு அப்படி அழுதாங்கண்ணே. எங்களை யாரும் வெளையாட்டுக்குக்கூட திட்ட விட மாட்டாங்க. ஸ்கூல்ல டீச்சர் அடிச்சாக்கூட அம்மாக்கு கோவம் வந்துடும். லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போகும்போது டீச்சர்கிட்ட வந்து ரெண்டும் சின்னப்பசங்க ஏதாவது தப்பு பண்ணுச்சுங் கன்னா என்கிட்ட சொல்லி அனுப்புங்க. நீங்க அடிச்சிட வேணாம்னு சொல்லுவாங்க. 'நம்ம குடும்பம் இப்போ இருக்குற மாதிரி பின்னாடி இருக்கக்கூடாது. நீ நல்லா படிச்சு உன் தங்கச்சியையும் படிக்க வைக்கணும். அப்போ தான் நம்ம கஷ்டம் தீரும்'னு அடிக்கடி சொல்லுவாங்க.

அவங்களுக்காகத்தான் நான் நல்லா படிச்சேன். ஒன்பதாங்கிளாஸ் லீவு முடிஞ்சு பத்தாங்கிளாஸ் சேந்தப்போ அம்மாவுக்கு திடீர்னு உடம்புக்கு முடியாம போயிடுச்சு. அப்போல இருந்து அம்மா வேலைக்குப் போகல. எங்க ஆயாதான் எங்களை பாத்துட்டு இருந்தாங்க. அம்மா வீட்டுல முடியாம படுத்திருக்கும்போது எனக்கு ஸ்கூல் போகவே தோணலண்ணே.

நான் ஸ்கூல் போகல. வேலைக்குப் போகப் போறேன்னு அம்மாக்கிட்ட சொன்னப்போ ரொம்ப கோவப்பட்டாங்க. 'உன்ன லீவுல வேலைக்கு அனுப்புனது தப்பாப் போச்சு. இப்பவே காசுமேல ஆசை வந்துடுச்சா. மரியாதையா அந்த நெனப்ப தூக்கி எறிஞ்சிட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடிடு. படிச்சாத்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்’னு அம்மா திட்டுனாங்க. ஆனா, எத்தனை நாளைக்கு கடன் வாங்கியே எங்களுக்கு சோறு பொங்கிப் போடுவாங்க.

ஊருல எல்லாரும் அம்மாவ திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. “உன்னால முடியலையே, உன் பையனயாவது எங்கயாவது வேலைக்கு அனுப்பலாமே” ன்னு சொன்னாங்க. அப்போகூட, “நான் சாகுற வர எம்மவன வேலைக்கு அனுப்பமாட்டேன். அவன் நல்லா படிக்கிற பையன். ஸ்கூலுக்கு போனாதான் அவன் உருப்படுவான்”னு  சொன்னாங்க.

நான் அம்மாக்கிட்ட போய் 'மா... உனக்கு உடம்பு சரியில்ல. நான் வேலைக்குப் போனா தங்கச்சிப் பாப்பாவ நீ நெனைச்ச மாதிரி நல்லா படிக்க வைக்கலாம்மா'ன்னு சொல்லி புரிய வச்சேன். அப்பவும் தன்னால முடியலையே, தன் புள்ள வேலைக்குப் போகுதேனு கதறீனாங்க. எனக்கு அதை பார்க்கவே முடியலண்ணே. கால் மனசோட அம்மா என்னை வேலைக்கு அனுப்புனாங்க. லீவுல வேலை பாத்த அந்த ஜவுளிக்கடைக்கே வேலைக்குப் போனேன்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் ஊர் நினைப்பில் மூழ்கிப்போனான். அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அது சரி இங்க எப்படி வந்த என்று கேட்டேன்.

“நான் வேல பாத்த ஜவுளிக்கடையில மூணாயிரம் தான் கொடுத்தாங்க. ஆனா, மெட்ராஸ்க்கு வேலைக்கு போனேன்னா ஆறாயிரம் ரூபா சம்பளம் கொடுப்பாங்க வர்றியான்னு சொல்லி என் ஊர்ல உள்ள ஒரு அண்ணே இங்க கூட்டிட்டு வந்தாரு. முதல்ல ஹோட்டல்ல தான் வேலைனு சொன்னாங்க. சரின்னு பிளேட் எடுக்கிறதுல ஆரம்பிச்சு டேபிள் துடைக்கிறது வரைக்கும் பல வேல பாத்தேன். மூணு வேளையும் சாப்பாடு கொடுத்தாங்கண்ணே. உள்ளேயே ரூம் இருக்கு. அங்க படுத்துப்பேன். அஞ்சாயிரம் சம்பளம் கொடுத்தாங்க.

ரெண்டு மாசம் போனதும் “தம்பி, பக்கத்துல இருக்கிற பாருல ஒருத்தரு வேலைய விட்டு போயிட்டாரு. இனி நீ அங்க வேலைக்கு போ. கூட ஆயிரம் ரூபா தருவாங்க”னு ஓனர் சொன்னாரு. கூடுதலா ஆயிரம் ரூபா கிடைக்குதேன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்.

இப்போ ஒரு வருசம் ஆகப்போகுதுண்ணே. வந்த புதுசுல ஒரு மாதிரி இருந்துச்சு. வர்றவங்கள்லாம் குடிச்சிட்டு கிட்டவந்து பேசும் போது கொமட்டும். சாப்புடவே தோணாது. அப்படியே மல்லுக்கட்டி வாயில சோத்தை திணிச்சாக்கூட பார் வாட, நெனப்புல வந்து வாந்தி எடுத்துடுவேன். சாதாரணமா எனக்கு உடம்பு சர்யில்லைன்னா அம்மா துடிச்சிப் போயிடும். ராத்திரியில தூங்கவே தூங்காது. பக்கத்துலேயே உக்காந்து என்னை தொட்டுப் பார்த்துட்டே இருக்கும்.

இங்க வந்தப்புறம் எனக்கு உடம்பு சரியில்லைன்னா மாத்திர வாங்கித் தரக்கூட பக்கத்துல யாரும் இல்ல. திடீர்னு அம்மா நினைப்பு வரும். தனியா உக்காந்து அழுவேன். இப்போ  பழகிடுச்சுண்ணே. ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் அம்மாக்கு போன் வாங்கிக் கொடுத்தேன். தெனமும் அவங்ககிட்ட பேசிடுவேன்.

ஆனா, இப்போ வரை நான் பார்ல வேலை பாக்குறேன்னு அம்மாட்ட சொல்லல. சென்னையில ஒரு ஜெராக்ஸ் கடையில வேல பாக்குறேன்னுதான் சொல்லிருக்கேன். நான் இவளோ கஷ்டத்துல காசு அனுப்புறேன்னு சொன்னா அம்மா அழுவாங்கண்ணே. மவன் இப்படி கஷ்டப்பட்டு நாம சோறு திங்கனுமான்னு சோத்தை கூட தொடாது. என் கஷ்டம் என்னோட போகட்டும். அம்மா நல்லாயிருக்கணும். பாவம்ணே எங்களுக்காக ஒழைச்சு ஓடா தேய்ஞ்சிருச்சு'' என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் மொபைல் போன் ஒலிக்க, முகம் பிரகாசமாகிறது.

''ஹலோ, சொல்லுங்கம்மா... என்ன பண்றீங்க? சாப்டிங்களா? தங்கச்சிப் பாப்பா டியூஷன் போயிட்டு வந்துட்டாளா? அவ நல்லா படிக்கிறாளாமா'' சந்தோஷத்தில் நலம் விசாரித்துக்கொண்டே என்னிடமிருந்து நகர்ந்தான். இப்போது என் மொபைல் ஒலிக்கிறது. என் முகத்திலும் பிரகாசம். ஹலோ ''சொல்லுங்க அம்மா...''

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...


Best regards,