Wednesday, 6 May 2020

டாஸ்மாக் வேண்டாம் தனித்திருங்கள்!!

டாஸ்மாக் வேண்டாம் தனித்திருங்கள்!!

அரசு டாஸ்மாக்கினை திறக்கிறது.வரிசையில் நிற்க தயாராபவர்கள் இதனை கொஞ்சம் படியுங்கள்.ஒருவேளை உங்களுக்கு கரோனா வந்தால் என்னென்ன நடக்கும். எதை எதையோ முகத்தில் அறையும் உண்மை என்று சலம்பும் நீங்கள் இதையும் படியுங்கள்.

டாஸ்மாக் கடை முன் வரிசையில் நின்று முட்டி மோதி மது வாங்கிய போது அங்கே யாரோ ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். சம்பந்தபட்ட கடைக்கு போனவர்களை ட்ரேஸ் செய்யும் பணி தொடங்கும்.

முதலில் அந்தக்கடைக்கு சென்றவர்கள் பரிசோதனைக்கு முன் வர வேண்டும் என்று அழைக்கப்படுவர். நீங்களாக போகாவிட்டால் சிசிடிவி, அக்கம்பக்கம் புரளி என எப்படியும் உங்களை தூக்கிவிடுவார்கள். நீங்கள் அப்படி பரிசோதனைக்கு போகும் போது ஊர் உங்களை சும்மா விடாது. எல்லார் வீட்டு பால்கனி மொபைல்களும் நீங்கள் 108-ல் ஏறி போகும் காட்சியை படமெடுக்கும்.

உங்கள் வீட்டில் ஒரு கரோனா தொற்று காகிதத்தை ஒட்டுவார்கள். உங்களுக்கு வேண்டாதவன் அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உலவ விடுவான். அவன் மனைவி அதை ஸ்டேட்டஸாக கூட வைக்கக்கூடும். முடிந்த வரை வெட்டி ஒட்டி உங்கள் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் உலவ விடுவார்கள்.

நீங்கள் எப்போது வீழ்வீர்கள் என்று பார்த்திருந்தவர்கள் உடனே வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதரத்துறை என்று போன் செய்து உங்களை பற்றி தகவல் கொடுக்கிறேன் என்ற பேரில் நீங்கள் அங்கே நின்றீர்கள் இங்கே நின்றீர்கள் என்றும் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போனீர்கள் என்றும் கண், காது, மூக்கு வைத்து மூளையின்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுவே வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வலம் வரும். உங்களை ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு நடத்துவார்கள். உங்கள் வீட்டாரை  ஒதுக்கி வைத்தது போல் சமூகம் நடத்தும். உங்கள் குழந்தைக்கு பால் வாங்க ஆள் பிடிப்பதற்கு கூட ஆள் கிடைக்க மாட்டான். உங்களை நலம் விசாரிப்பது போலவே, உங்களிடம் பேசி பேனை பெருமாளாக்கி பரப்பி விடும் வன்மக்காரர்கள் வட்டமடிப்பார்கள்.

இந்த கூத்து எல்லாமே டெஸ்ட் எடுப்பதற்கு முன்பே நடந்து விடும். நீங்கள் டெஸ்ட் எடுக்க போனால், உடனே எடுத்து உங்களுக்கு முடிவு சொல்லமாட்டார்கள். ஒபில அட்மிஷன் சீட் வாங்கிட்டு முதல்ல அட்மிட் ஆகுங்க என்று பதில் வரும்.

அட்மிஷன் என்றதுமே உங்களுக்கு கரோனா உறுதியென்று ஊர்ப்பக்கம் ஊத ஆரம்பித்துவிடுவார்கள். வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் துணை போகும்.

உங்கள் வீட்டுக்கு காவல்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறையிலிருந்து ஆட்கள் வந்து விசாரணைகளை தொடங்குவர், தொடர்வர்.

ஒரு வழியாக டெஸ்ட் எடுத்தாலும் சென்னை, கோவை போன்ற மாநகர்கள் தவிர்த்த பகுதிகளில் முடிவு வர தாமதமாகும். எனக்கெல்லாம் 5 நாள் கழித்து தான்  முடிவே வந்தது. ஆனால், சென்னையில் என் நண்பர் ஒருவர் 8-ம் நாளே 3 சோதனைகள் முடித்து வெளியேறிவிட்டார். மற்ற மாவட்டங்களில் நிலைமை அப்படியில்லை என்பதே உண்மை. தாமதம் உங்களை விரக்தியில் அழுத்தும்.

வாழ்க்கையில் என்றைக்குமே உங்களை திரும்பி பார்க்காதவர்கள் எல்லாம் போன் செய்வார்கள். அக்கறையில் அல்ல. நீங்கள் இருக்கிறீர்களா போய்விட்டீர்களா என்று சூழலை தெரிந்து கொள்ள.

அவர்களிடம் நீங்கள் நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியிருப்பீர்கள். அவன் லேசா இருமுனான் என்கிட்ட வலியில அழுதான் என்று வெளியில் சொல்வார்கள்.

ரிசல்ட் முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தாலும் நீங்கள் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவீர்கள். ஏனென்றால் மருத்துவமனையில் கூட கூட்டத்தில் ஒருவேளை ஏதாவது ஆகியிருக்கலாம் அல்லவா. பாசிட்டிவ்  என வந்தால் நிலைமை இன்னும் மோசம்.

உங்கள் பகுதி  கண்டென்ய்ன்மெண்ட் பகுதியாக்கப்படும். ’ஈ’, ’காக்கா’ கூட வெளிவர முடியாது. ஊரெல்லாம் உங்களை ஏசும். உங்கள் குடும்பத்தார் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர். அங்கே தரப்படும் உணவை உங்கள் குழந்தை உண்ண மறுத்து பட்டினியில் வாடலாம்.

காக்க வைத்து தான் டெஸ்ட் எடுப்பார்கள். தாமதமாக தான் முடிவுகள் வரும். ஏனென்றால் கூட்டம் அப்படி. யாரையும் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் உடனே சொல்லி வீட்டுக்கு அனுப்பமாட்டார்கள். ஊரில் பிரச்சினைகள் வரக்கூடும். எனவே, மருத்துவமனையில் தனிமைப்படுத்துவார்கள்.

அடுத்து கண்டெய்மெண்ட் பகுதியில் உள்ள மக்களை டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். மக்கள் உங்களை சபிப்பர்.

நல்லா இருக்கீங்களா?
என்ன மாத்திரை தராங்க?
என்ன சாப்பாடு?
எத்தனை நாள் ஆச்சு?
வீட்டில் யாருக்கும் இருக்கா?
என்ற கேள்விகளோடு வரும் மொபைல் அழைப்புகளுக்கு நீங்கள் ஒரு நானூறு முறையாவது பதில் சொல்ல நேரும்.

இன்னும் சிலர் நல்லா இருக்கியா என்று கூட கேட்க மாட்டான். நேரே அங்க கொடுக்கிற அந்த மாத்திரை பேர சொல்லுப்பா என்பான்.

அவ்வளவு முன்னெச்சரிக்கையாம்.

போதாக்குறைக்கு  நீங்கள் போன இடம் வந்த இடம் எல்லாம் மொபைல் மூலம் ட்ரேஸ் செய்யப்பட்டு காவல்துறை போனில் உங்களை விசாரிக்கும். உங்களை மட்டுமன்றி உங்களுடன் பேசியவர்களுக்கும் போன் போகும். நீங்கள் பேசிய நபர் உங்கள் பகுதியாக இருந்தால், அவரும் சோதனைக்குட்படுத்தப்படுவார். நண்பன் எதிரியாகும் சூழல் ஏற்படும்.

தனிமை...... தனிமை என நாட்கள் நகரும்.

உடம்புக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும் நீங்கள் நோயாளிகள் தான்.

உடம்பு தேவலைல என்ற விசாரிப்புகள் வரும் போது நல்லாதானே இருக்கோம் என்று வலிக்கும்.

இத்தனையையும் நீங்கள் கடந்து வந்தால், உங்களுக்கு முன்பிருந்த அதே வாழ்க்கை அப்படியே இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. நீங்கள் நலமாகி வந்தால் கூட உங்களை பார்த்து எல்லோரும் மிரளுவார்கள்.

அவர்களுக்கு நீங்கள் அணுகுண்டாக தெரிவீர்.

உங்கள் வீட்டு வாசலில் யாருக்கேனும் பாதையிருந்தால், அவர்கள் அதனை அடைத்து சுற்றுச்சுவரின் பக்காவாட்டில் உடைத்து எகிறி குடித்து செல்லும் காட்சிகளை காண நேரலாம்.

போனில் விசாரித்த யாரும் ஒரு 200 மீட்டர் தள்ளி நின்று உங்கள் வீட்டைக்கூட எட்டி  பார்க்க மாட்டார்கள். வீட்டுக்கு வந்தாலும் தனிமை தான். உங்களை ஒரு ஆப்ஜக்டாக மாற்றிவிடுவார்கள். நண்பர்கள் பணியிடம் உறவுகள் எதுவும் எப்படி தொடருமென தெரியாது.

பயத்தில் எங்கிருந்து யார் கல் வீசுவார்கள் என தெரியாது.

இன்னும் பத்தாண்டுகள் கழித்து கூட கரோனா வந்தவர் வீடு அங்குதான் இருக்கு என்று அதைவிட கொடிய நோய் தொற்றுடையவன் உங்களை அடையாளம் காட்டுவான். ஏனென்றால் விளம்பரம் அப்படி.

பெரும்பாலானவர்களின் உடல் இந்நோயை  தாங்கிக்கொண்டுவிடலாம்.

ஆனால், மேற்சொன்ன சம்பவங்களையெல்லாம் தாங்கும் மனோபலம் உங்களுக்கு இருந்தால் துணிந்து டாஸ்மாக்கில் கூடுங்கள். ஒருவேளை உங்களுக்கு அதை தாங்கும் சக்தி இருந்தாலும் உங்கள் குடும்பத்துக்கு இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

இவ்வளவு நாட்கள் நான் நோய் குறித்து நேர்மறையாகவே பேசி வந்தேன். ஆனால், டாஸ்மாக் என்பது  5000 உப கிளஸ்டர்களுடன் தமிழகத்தின் 3-வது கிளஸ்டர் ஆகிவிடக்கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வில் தான், கரொனாவின் கருப்பு பக்கங்களை பகிர்கிறேன்.

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது தெரியும் தானே. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் மது ஒரு பேரிடர் என புரிந்து கொள்ளுங்கள்..

டாஸ்மாக் வேண்டாம் தனித்திருங்கள்!!

-மணி

9:25

5-5-2020Best regards,