Friday, 29 May 2020

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

 வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு:-

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.

வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை

இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.

பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை

இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.

பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக்கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டே தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.

ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.

இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்கமுடியாது உண்மை.

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.

கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.

தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே.  அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.

வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. கூர்மதியுள்ள மனித சமூகமும் அதை ஆழும் வல்லரசுகளும் எப்போது பூவுலகின் குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறார்கள்? -

நன்றி. பூவுலகின் நண்பர்கள்

Best regards,