Saturday, 3 September 2011

மங்காத்தா

வெங்கட் பிரபுவின் இதற்கு முன் படங்களில் கதாநாயகர்கள் இருப்பதில்லை. ஆகையால் கதை எந்த அலட்டலும் இல்லாமல் தன்னிச்சையாக நகர சுதந்திரம் இருந்தது. ஆனால் இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். அஜித்(தலை வேறு) மற்றும் அர்ஜுன்(ஆக்ஷன் கிங்). ஆகையால் கதாநாயகர்கள் தோற்பதில்லை, கதாநாயகர்கள் சாவதுமில்லை எனும் பழைய மரபே கட்டிக் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

பிரேம்ஜி – தொடர்ந்து தன் படங்களில் ஒரே மாதிரியான நகைச்சுவையைத் தருவதன் மூலம் பெரும் சலிப்பைக் காட்டுகிறார். இந்தமுறை வானம் படத்தில் சிம்பு சொன்ன வசனம், “என்ன வாழ்க்கைடா இது”. அதிலும் குறிப்பாக வானம் படத்தில் கதாநாயகன் இறப்பதைக் கிண்டலும் செய்துள்ளார்.

திரைக்கதையை ஊகிக்க முடிகிறது. ஆனால் யாரும் ஊகிக்க முடியாத ஒரு மர்மத்தைக் கதைக்குள் ஒளித்து வைக்க பல பாவனைகள் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கமான திரைக்கதை அமைப்பு கதையின் ஓட்டத்தை ஊகிக்க வைத்துவிடுகிறது. திரைக்கதை அமைப்பு ஒரு முயற்சி என்கிற வகையிலேயே நின்றுவிட்டது.

சில இடங்களில் நகைச்சுவை எதார்த்தமாக வந்து போவதால் சிரிக்க முடிகிறது.

ஆங்காங்கே நடிகைகளுக்குப் பஞ்சம் இல்லாமல், அதே சமயம் அவர்கள் யாவரும் கதைக்குள் முக்கியத்துவம் இல்லாமல் வந்து போகிறார்கள்.

இ.பி.எல் கிரிக்கேட் போட்டியை முன்வைத்து, சூதாட்டத்தின் மூலம் எப்படியெல்லம் கள்ளப்பணம் தமிழ் நாட்டிற்குள் நுழைகிறது என்பதை மேலோட்டமாகக் காட்டியிருப்பது கொஞ்சம் கூடுதலான சிறப்பு. அங்கு மட்டும் அல்ல, மலேசியாவிலும் உலகக் கிண்ண காற்பந்து சமயத்தில் மாணவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை காற்பந்து அணியின் மீது பணம் கட்டி சூதாடுவது ஒரு கலாச்சாரமாகவே பின்பற்றப்படுகிறது. அதன் ஆபத்து என்ன? விளையாட்டை விளையாட்டாக இரசிக்காமல் அதனுள் ஒரு சுயநலமும் வியாபாரமும் பெருகி ஆளுமையின் மீதான கவனத்தை ஒரு வகையான அடிமைப்புத்திக்குத் திருப்புகிறது.

செட்டியார்கள் பணத்தை வட்டிக்கு விடுவது மட்டுமல்ல கள்ளப்பணத்தைச் சூதாட்ட மையங்களுக்கு இடம் மாற்றி தரும் பெரும் வியாபாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் மேலோட்டமாக மட்டுமே இதைப்பற்றி பேசப்பட்டுள்ளது.

மங்காத்தாவில் எந்த நியாயமும் இல்லை. தமிழ்நாட்டு போலிஸ் அதிகாரிகள் சூதாட்டப் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலை செய்து மிகவும் கொடூரமானவர்களாகவும் மாறுவார்கள் என்ற ஒரு விசயத்தை கமர்சியல் கலந்த மேற்கத்திய தொழில்நுட்ப சாயலில் கொடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. அதைக் கடந்து படத்தில் ஒன்றுமில்லை.

தலை போல வருமா? அல்லது தலையின் 50 படம் இது என சில வெட்டி புகழ் மாலைகள் சூட்டப்படுவதோடு படம் மனதில் நிற்காமல் விலகிவிடுகிறது.
“gambeling is a rich business as an underground settlement”